பெருமளவு காலியாக இருந்த ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானம்

மோதி மைதானம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கிவிட்டன.

‘அது சரி. ஆனால் பார்வையாளர்கள் எங்கே?’

நேற்றைய முதல் போட்டி முடிந்ததும், சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் எழுந்த கேள்வி இதுதான்.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை.

ஆட்டம் குறித்து பேசப்படும் அளவுக்கு, காலி இருக்கைகள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

1 லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில், எத்தனை இருக்கைகளின் நிரம்பியிருந்தன என்பதுபற்றிய சரியான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், போட்டியின் காட்சிகளிலும், புகைப்படங்களிலும் பல இருக்கைகள் காலியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டவை: போட்டி நடந்தது வாரத்தின் மத்தியில், பிற்பகல் நேரத்தில். அதேபோல இந்தியா விளையாடாததாலும் போட்டிக்கு குறைவான ஆட்களே திரண்டிருந்ததாக கூறப்பட்டது.

சிலரின் கூற்றுப்படி, ஆமதாபாத்திற்குப் பதிலாக மும்பை வான்கடேவில் போட்டியை நடத்தியிருந்தால், இது போன்ற ஒரு சூழ்நிலை வந்திருக்காது.

ஆனால் இது உண்மையா?

ஆமதாபாத்தின் மைதானத்தில் காலியாக உள்ள இருக்கைகள் உண்மையில் என்ன சொல்கின்றன?

ஆமதாபாத் மோதி மைதானம் காலியாக இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

மோதி மைதானம் ஏன் நிறையவில்லை?

நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டி துவங்கும் முன்னர், பிபிசி குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா மோதி மைதானத்திற்குச் சென்று, அங்கு வெளியே இருந்த ரசிகர்களுடன் உரையாடினார்.

“இரண்டு மணிக்குப் போட்டி தொடங்கியது. நாங்கள் நான்கு முப்பது மணிவரை அங்கே இருந்தோம். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், மைதானம் நிரம்பத் தேவையான அளவு மக்கள் வரவில்லை,” என்று அவர் கூறினார்.

நேற்று, ஆமதாபாத்தின் வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாக இருந்தது. சுட்டெரிக்கும் இந்த வெப்பம் காரணமாக, சிலர் மைதானத்திற்கு வெளியே இருந்துவிட்டு வெப்பம் தணிந்ததும் உள்ளே செல்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியறிக்கை ஒன்று, பா.ஜ.க.வின் அரசியல் தலைவர் ஒருவர் இந்தப் போட்டிக்காக நாற்பதாயிரம் பெண்களுக்கு இலவச பாஸ் கொடுத்ததாகத் தெரிவித்திருந்தது.

அப்படிப்பட்ட பாஸ் பெற்றவர்கள் காலை 11:00-11.30 மணிக்கே வந்து காத்திருந்ததாக தேஜஸ் கூறுகிறார். அவ்வளவு நேரம் காத்திருந்ததால் அவர்களுக்கு உற்சாகம் குறைந்திருக்கலாம்.

ஆமதாபாத் மோதி மைதானம் காலியாக இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பெரிய மைதானம் என்பதால் காலியாக இருப்பதுபோல் தெரிந்ததா?

தேஜஸ் மேலும் கூறுகையில், மொபைல் ஃபோன் மற்றும் பணப்பையைத் தவிர வேறு எதையும் மைதானத்திற்குள் கொண்டு செல்ல முடியாது, என்றார்.

“பா.ஜ.க.வினர் பாஸ்களுடன் சேர்த்து டீ, சாப்பாடு கூப்பன்களை கொடுத்ததாகச் சிலர் எங்களிடம் காட்டினர். டிக்கெட் இலவசம் என்றாலும், மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில் கூட அதிக விலைக்குத்தான் விற்கப்படுகிறது. அதனால்தான் பலர் வருவதில்லை,” என்கிறார் அவர்.

சில ரசிகர்கள் போட்டிக்கு முன் தொடக்க விழாவும் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தொடக்க விழா இல்லாததால் பலர் போட்டிக்கு வருவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கருத முடிகிறது.

எனினும், அக்டோபர் 14-ஆம் தேதி இதே ஸ்டெடியத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மைதானம் முழுவதும் நிரம்பி வழியும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் நரேந்திர மோதி ஸ்டேடியம் 2020-ஆம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. எனவே, 20,000 பார்வையாளர்கள் இருந்தால்கூட, இந்த மைதானம் ஒப்பீட்டளவில் காலியாக இருப்பதுபோலவே தோன்றும்.

ஆமதாபாத் மோதி மைதானம் காலியாக இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

முக்கியப் போட்டிகள் ஏன் ஆமதாபாத்தில் நடத்தப்படுகின்றன?

அதே சமயம், வேறு ஒரு மைதானத்தில் போட்டியை நடத்தியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆகியவை இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றுச் சின்னமான மைதானங்கள்.

ஆனால் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம், இறுதிப் போட்டி, மிக முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி ஆகமதாபாத்தில் நடைபெற்று வருகின்றன.

உண்மையில், இது இந்திய கிரிக்கெட் மற்றும் பி.சி.சி.ஐ.யின் அதிகார மையம் மாறிவிட்டதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.

2019-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்த ஜெய் ஷா, பி.சி.சி.ஐ.யில் நுழைந்தார்.

ஜெய் ஷா இப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், ஐ.சி.சி.யி.ன் நிதிக் குழுவின் தலைவராகவும் உள்ளார். அவரது செல்வாக்கினால், மும்பை அல்லது கொல்கத்தாவை விட ஆகமதாபாத்தின் ஸ்டேடியம் முன்னிலைப்படுத்தப்படுவது புதிய விஷயம் அல்ல, என்கின்றனர் கிரிக்கெட்டை கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்கள்.

இதற்கு முன்பும், ஜக்மோகன் டால்மியா காலத்தில் ஈடன் கார்டனிலும், சரத் பவாரின் காலத்தில் வான்கடே மைதானத்திலும் முக்கியமான போட்டிகள் நடத்தப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)