மிசோஃபோனியா: ஒருவர் சாப்பிடுவதை, மூச்சு விடுவதைக் கேட்டே பயப்படும் பாதிப்பு

மிசோபோனியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஞ்சலி தாஸ்
    • பதவி, பிபிசி இந்திக்காக

காதுகளில் ஹெட்போன் அணிந்தபடி பயணிக்கும் நபர்களை பேருந்து, ரயில் பயணங்களின்போது நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம். ஹெட்போன்களை அணிவதில் புதிதாக எதுவும் இல்லை, யார் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். ஆனால் யாராவது ஹெட்போன்களை கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?

மார்கோட் நோயலுக்கு 28 வயதாகிறது. அவர் ஹெட்போன்களை அணிய விரும்பாவிட்டாலும்கூட தன்னைக் காத்துக் கொள்வதற்காக அதை அணிந்துள்ளார்.

மார்கோட் நோயல் மிசோஃபோனியாவால் அவதிப்படுகிறார். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த பாதிப்பு உள்ளவர்கள் சிறிய அளவிலான சத்தத்தைக் கூட எரிச்சலூட்டுவதாக கருதுகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கோபம், வருத்தம், பயம் அல்லது மிகவும் கவலை அடையக்கூடும்.

மிசோஃபோனியா உள்ளவர்கள் இத்தகைய ஓசைகளைக் கேட்கும்போது, புலன்களை இணைக்கும் மூளையின் பகுதி மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.

மூச்சு விடுவது, உணவை மெல்லுவது, பேனாவை அசைப்பது போன்ற சிறிய சத்தங்களால்கூட சிலர் எப்படி எரிச்சல் அடைகிறார்கள் என்பது குறித்து நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

அத்தகையவர்கள் மிசோஃபோனியாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

மிசோபோனியா
படக்குறிப்பு, மார்கோட் நோயல்

மிசோஃபோனியா என்றால் என்ன?

மிசோஃபோனியா பெரும்பாலும் கோபம், பதற்றம், வெறுப்பு போன்றவற்றுடன் தொடர்புடையது. இது நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு. ஓசை அல்லது இரைச்சல் மீதான வெறுப்பு என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

மிசோஃபோனியா என்பது குறிப்பிட்ட சில ஓசைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விஷயங்கள் மீதான நமது சகிப்புத்தன்மை குறையக்கூடிய நிலை. இதன் காரணமாக சில ஓசைகளைக் கேட்கும்போதோ அல்லது சில விஷயங்கள் நடக்கும்போதோ நீங்கள் கோப்பட ஆரம்பிக்கிறீர்கள், பதற்றமாகவும் உணர்கிறீர்கள்.

இதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதில்லை, ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நேரத்தில் உங்கள் மூளைக்கு இது கடத்தப்படுகிறது.

உணர்ச்சிகளோடு தொடர்புடைய மூளையின் அமைப்பான அமிக்டாலா இந்த ஓலிகளை அச்சுறுத்தலாக உணர்கின்றன. எனவே, அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கிவிடுகின்றன.

சராசரி நபர்களுக்கு இந்த ஓசைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மிசோபோனியா

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அப்செஸிவ் கம்பல்சிவ் டிஸ்சார்டர் (OCD), காதுகளில் விசித்திரமான ஓசைகள் கேட்பது (Tinnitus), சாதாரண ஓசைகளைக் கூட சத்தமாக கேட்பது( hyperacusis), ஆட்டிசம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களில் எத்தனை பேர் மிசோஃபோனியால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை.

மேலும் இந்தப் பிரச்னை உணர்திறன் செயலாக்கக் கோளாறு (SPD) உள்ளவர்களிடம் பொதுவாக காணப்படுகிறது.

மிசோஃபோனியா ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மூளை அல்லது மனநோயுடன் தொடர்புடையதாக இது இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிரிட்டன் மக்கள் தொகையில் 18.4 சதவீதம் பேரிடம் இந்த அறிகுறி காணப்படுவதாகத் தெரிய வந்தது.

அதாவது, ஐந்தில் ஒருவர் சாப்பிடுவது, சூயிங் கம் மெல்வது, குறட்டை விடுவது போன்றவை காரணமாக எழும் ஓசைகளால் எரிச்சல் அடைகின்றனர்.

“மிசோஃபோனியா உள்ளவர்கள் பெரும்பாலும் தனிமையாக உணர்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர் மருத்துவர் சிலியா விட்டூரட்டோ.

மிசோபோனியா
படக்குறிப்பு, ஓலானா டான்ஸ்லி ஹான்காக்

மிசோஃபோனியாவால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன?

பிரிட்டனின் கென்ட்டை சேர்ந்த ஓலானா டான்ஸ்லி ஹான்காக் தனக்கு 8 வயதில் இருந்தே மிசோஃபோனியா அறிகுறிகள் இருப்பதாகக் கூறுகிறார்.

மூச்சுவிடும் ஓசை, உணவு அல்லது உலர்ந்த இலைகளால் எழும் ஓசை, காகிதத்தால் ஏற்படும் ஓசை ஆகியவை தன்னை உணர்ச்சிவசப்படச் செய்வதாக ஓலானா குறிப்பிடுகிறார்.

“இத்தகைய ஓசைகளைக் கேட்கும்போது உடனடியாக அவற்றை நிறுத்த முயல்வேன் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன். நீண்ட நாட்களாகவே சினிமா போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தேன்.

மூன்றே மாதங்களில் வேலையை விட்டுவிட்டேன். ஆனால், அதை எப்படி சமாளிப்பது என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டேன். தற்போது காதுகளுக்கு இயர்ப்ளக்ஸ் அணிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

உங்களின் உறவுகள் மற்றும் பிறர் உடனான தொடர்புகள் ஆகியவற்றில் மிசோஃபோனியா ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய அறிகுறிகள் தென்படும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அவர்களின் நடத்தை பாதிக்கப்படுவதோடு பள்ளிக்குச் செல்லவும் அவர்கள் தயங்குவது அதிகம் காணப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், மற்றொரு நபருடன் நேரத்தைச் செலவிடுவது சவாலானது. எதிரே இருப்பவரிடமிருந்து வரும் இத்தகைய ஓசைகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எதிரில் இருப்பவர்களுக்கு இது பற்றிய புரிதல் இருப்பதில்லை என்பதால் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

மிசோபோனியா

பட மூலாதாரம், Getty Images

அதுபோன்ற சூழ்நிலையில், மிசோஃபோனியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்ற நபரிடம் இருந்து விலகிச் செல்கின்றனர் அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்காவில் `மிசோஃபோனியா` போட்காஸ்டின் தொகுப்பாளரான அடீல் அகமதுவிடம் இதேபோன்ற பாதிப்பு காணப்பட்டது. அவருக்கு மிசோஃபோனியா பிரச்னையும் உள்ளது.

அவர் பிபிசியிடம் பேசும்போது, “சில நேரங்களில் நாம் நமது பெற்றோரிடமிருந்தே விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர்கள் சாதாரணமாக எழுப்பும் ஓசை நம்மைத் தொந்தரவு செய்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை,” என்றார்.

இந்தப் பாதிப்பு உள்ள பெரும்பாலானவர்களிடம் ஒன்று சண்டையிடுவது அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவது என்ற வழக்கம் காணப்படுவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜேன் கிரிகோரி கூறுகிறார்.

நியூகேஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சுக்பிந்தர் குமார் பிபிசியிடம் பேசும்போது, “மிசோஃபோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய ஓசைகளைக் கேட்கும்போது சுறுசுறுப்படைகின்றனர். அவர்களின் கோபம் அதிகரிக்கத் தொடங்குகிறது. நமது இத்தகைய ஓசைகள் சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு இது கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது,” எனக் குறிப்பிட்டார்.

மிசோபோனியா

பட மூலாதாரம், Getty Images

மிசோஃபோனியாவின் அறிகுறிகள் என்ன?

மிசோஃபோனியாவை கண்டறிவதற்கு என பிரத்யேக பரிசோதனை எதுவும் கிடையாது. அமைதியின்மை ஏற்படுவதையும், உடனடியாக வினையாற்றுவதையும் பார்க்க முடிகிறது.

மற்றொரு நபர் எதையாவது சாப்பிடும்போதோ, மூச்சு விடும்போதோ மிசோஃபோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் சகிப்புத்தன்மையின்மை அதிகரிக்கிறது.

சக மனிதர்கள் மூலம் இந்த ஓசைகள் எழுப்பப்படுவதால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்படுவதில்லை, மாறாக விலங்குகள், மின் சாதனங்கள் ஆகியவை மூலமாக இந்த ஓசையை உணரும்போதும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அந்த ஓசையை சகித்துக்கொள்ள முடியாமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற விரும்புகின்றனர்.

இத்தகைய ஓசைகளால் அவர்கள் கோபப்படுவதுடன் பீதிக்கும் உள்ளாகின்றனர் என்பதால் காதுகளை மூடிக்கொள்கின்றனர்.

“யாராவது எதையாவது மென்றாலோ, மூச்சுவிட்டாலோ அந்த ஓசையை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. ஒன்று எனக்கு கோபம் வரும் அல்லது அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைப்பேன்,” என்று அடீல் அகமது கூறுகிறார்.

அதேநேரம், பிறர் தனது பிரச்னையைப் புரிந்துகொள்ளும்போது பிரச்னையின் தீவிரம் குறைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிசோபோனியா

பட மூலாதாரம், Getty Images

மிசோஃபோனியாவை குணப்படுத்த முடியுமா?

இந்த ஓசைகள் நமது மூளையைத் தூண்டுவதைத் தடுக்க அறிவியல் பூர்வமான எந்தத் தீர்வும் இல்லை.

இருப்பினும், உளவியல் சிகிச்சை முறையான அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT), மூலம் மிசோபோனியாவுக்கு சிகிச்சையளிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுள்ளனர். 90 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதில், 42 சதவீதம் பேரின் நிலை மேம்படுத்துள்ளது.

காதில் கேட்கும் இரைச்சலை சரி செய்யும் சிகிச்சை மிசோஃபோனியாவுக்கு மாற்று சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதனால் பாதிப்பு குறைக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.

இந்தியாவில் எத்தனை பேர் மிசோஃபோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான சரியான எண்ணிக்கை எதுவும் இல்லை. அதேநேரம், ஆனால் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் ஆன்லைன் சர்வேயின்படி, இதே போன்ற அறிகுறிகள் 15.85 சதவீத மக்களிடம் காணப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: