தோனியுடன் ரோகித் சர்மாவை ஒப்பிடுவது சரியா?

ரோஹித் தோனி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"அவர் இருந்திருக்கலாமோ? அவர் இருந்திருந்திருந்தால் கோப்பையை வென்றிருக்கலாம், அவரின் அட்வைஸையாவது கேட்டிருக்கலாம்! உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்"

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்ற பிறகு சமூக வலைதளங்களில் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்கள் இந்த வார்த்தைகளைத்தான் முணுமுணுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குள் அவர் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆம், மகேந்திர சிங் தோனிதான் அவர்.

இந்திய அணி கோப்பையை வெல்லும் முயற்சியில் கடைசி நேரத்தில் தோற்றவுடன் ரசிகர்கள் பலரின் மனதில் எழுந்த எண்ணம் ‘தோனி இருந்திருக்கலாம்’ என்பதுதான்.

தோனியின் காலத்தில்தான் இந்திய அணி ஐ.சி.சி சார்பில் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளையும் வென்றது. இதுவரை எந்த கேப்டன் தலைமையிலும் இதுபோன்ற 3 கோப்பைகளையும் வென்றதில்லை.

ஆனால் தோனியுடன் மற்ற கேப்டன்களை ஒப்பிட முடியுமா?

தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனி-ரோகித் ஒப்பீடு ஏன்?

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தோனி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளது, அவரது கேப்டன்சியின் பிரபலத்தையே காட்டுகிறது.

2011-ஆம் ஆண்டுக்குப்பின் ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட எந்தவிதமான போட்டிகளிலும் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. ஐ.சி.சி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் கடைசிப்படிக்கட்டுவரை சென்று இந்திய அணி சறுக்கும்போதெல்லாம் தோனியின் பெயரை ரசிகர்கள் உச்சரிக்கத் தவறுவதில்லை.

அதேதான் இந்த முறையும் நடந்தது.

எம்.எஸ்.தோனியை ‘பார்ன் கேப்டன்’ என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். இந்திய அணியாக இருந்தாலும் சரி, ஐ.பி.எல் டி20 லீக்காக இருந்தாலும் சரி எந்த அணியைக் கொடுத்தாலும் கோப்பையை வெல்ல முடியும், எந்த வீரர்களைக் கொடுத்தாலும் சிறப்பாக விளையாட வைக்க முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் என்று தோனியைப் பற்றி பேசப்படுகிறது..

தோனியை கிரிக்கெட் கேப்டன்சி தரத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து அவரது ரசிகர்கள் பார்க்கின்றனர். அதனாலேயே தோனியையும் ரோகித் சர்மாவையும் ஒப்பிடவும் செய்கிறார்கள்.

ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஒப்பீட்டை விரும்பாத ரோகித் சர்மா

ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக, பேட்டராக உருவெடுத்திருப்பதற்கே தோனிதான் முக்கியக் காரணம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ரோகித் சர்மாவே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

ரோகித் சர்மா கூறுகையில் “நடுவரிசையில் விளையாடிய என்னை, ‘தொடக்க வீரராக பேட் செய், உன்னால் கட்ஷாட், புல்ஷாட்களை சிறப்பாக ஆட முடியும், உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, தொடக்க வீரராகக் களமிறங்கு’ என்று உற்சாகப்படுத்தி, என் கிரிக்கெட் வாழ்க்கையை திசைதிருப்பியவர் தோனிதான். தோனி இல்லாவிட்டால் நான் சிறந்த பேட்டராக ஜொலித்திருக்க முடியாது,” என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.

ஆனால், தோனியின் கேப்டன்சியை ரோகித் கேப்டன்சியுடன் ஒப்பிட்டும், தோனியின் மறுவடிவம் ரோகித் எனச் செய்திகள் வந்தபோது, ரோகித் சர்மா அந்த ஒப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டார். தோனியின் கேப்டன்சியுடன் தனது கேப்டன் திறமையை ஒப்பிடுவதை ரோகித் சர்மா விரும்பவில்லை.

ரோகித், தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனியின் காலமும் ரோகித்தின் காலமும்

ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்றபோது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணி உருவாக்கி அவரது கைகளில் தரப்பட்டது. அதனால் அவரால் சிக்கலின்றி பயணிக்க முடிந்தது.

ஆனால், தோனிக்கு அப்படி நிகழவில்லை. 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்தபின், அணி பெரிய சிக்கலைச் சந்தித்தது. கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணிக்குள் சீனியர் வீரர்கள் மிகுந்த அதிருப்தியுடன் இருந்தனர். இந்த சூழலில்தான் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்றார்.

தோனி கேப்டனானதும் இளம் அணியை உருவாக்கி, டி20 உலகக் கோப்பையைச் சந்தித்தார். தோனியால் உருவாக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியை பலரும் வியப்புடன் பார்த்தனர். சச்சின், சேவாக் இல்லாத டி20 அணி தோற்றுவிடும் என்று ஆருடம் கூறினர். ஆனால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்று சாதித்தது.

அடுத்ததாக 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணியில் தோனி ஈடுபட்டார். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம் பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 60 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும் என்று அளவு கோலை நிர்ணயித்து தோனி தேர்ந்தெடுத்தார். அதற்கேற்றாற்போல் வீரர்களுக்கும் வாய்ப்பளித்தார்.

தனக்கு ஏற்றாற்போல் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை உருவாக்கி, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையைச் சந்தித்து கோப்பையையும் நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த தலைமை தோனியின் கேப்டன்சி.

1983-ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் தோனி. பல சிக்கல்கள், தடைகள் ஆகியவற்றைக் கடந்துதான் தனது கேப்டன்சியை வெற்றிகரமானதாக்கினார்.

தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனியின் தனித்திறமை

தோனி ஒவ்வொரு வீரரிடமும் இருக்கும் திறமையைக் கண்டறிந்து அவரால் என்ன செய்ய முடியும், அவரை எவ்வாறு, எப்படிப் பயன்படுத்த முடியும் என்று சிந்தித்து அந்த வீரரைப் பயன்படுத்துவார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

உதாரணமாக, கேதார் ஜாதவ் இந்திய அணியில் இடம் பெற்றபோதும், ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றபோதும் ரசிகர்களின் கிண்டல், கேலிப் பேச்சுக்கு ஆளானார். ஆனால், கேதார் ஜாதவின் சுழற்பந்துவீச்சை எவ்வாறு பயன்படுத்துவது, அவரை வைத்து எவ்வாறு பேட் செய்ய வைப்பது, எந்த நிலையில் அவரை களமிறக்கி விளையாட வைப்பது என்பதையும் தோனி தெரிந்து வைத்திருந்தார்.

குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்துவது, எதிரணி இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எவ்வாறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது, எந்தெந்த பேட்டர்களுக்கு எதிராக யாரைப் பந்துவீசச் செய்வது என்பதில் தோனி பாராட்டப்படுகிறார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இடதுகை பேட்டர்கள் வார்னர், டிராவிஸ் ஹெட் இருவருக்கும் எதிராக அஸ்வினை தொடக்கத்திலேயே பந்துவீச வாய்ப்பளித்து ஆட்டத்தில் திருப்புமுனையை தோனி ஏற்படுத்தி இருப்பார் என்பதில் ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

இரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி 11 ஆட்டங்களில் தோனி பயணித்திருக்கமாட்டார் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

"ரோகித்தையும் கோலியையும் ஒப்பிடுவது தவறு"

தோனி-ரோகித் கேப்டன்சி ஒப்பீடு குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் ஆர். முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், தோனி-ரோகித் ஆகியோரின் கேப்டன்சியை ஒப்பிடுவது தவறு,” என்றார்.

தோனியின் கேப்டன்சி குறித்து முத்துக்குமார் பேசுகையில் “தோனியின் கேப்டன்சி அவ்வளவு எளிதாக இல்லை. கிரெக் சேப்பல் பயிற்சியாளர் பதவியிலிருந்து சென்றபின் அணிக்குள் ஏராளமான குழப்பங்கள் இருந்தன. அவற்றைக் களைந்து, வீரர்களைத் தேர்ந்தெடுத்து, 2007 டி-20 உலகக் கோப்பையை தோனி வென்று கொடுத்தார். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காக ஒரு அணியை உருவாக்கி வழிநடத்தி கோப்பையை வென்றார் தோனி. இந்த காலகட்டத்தில் ஏராளமான நாடுகளுடன் விளையாடி தோனி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்,” என்றார்.

தோனி, நுணுக்கங்களை அறிந்த ஒரு கேப்டன், என்ற முத்துக்குமார், அவருக்கு ஒரு வீரரை எவ்வாறு பயன்படுத்துவது அன்பது நன்கு தெரியும் என்றார். “குறிப்பாக, அஸ்வினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தோனி சிறப்பாக அறிந்தவர். ஒவ்வொரு காலகட்டத்திலும் தோனி புதிய வீரர்களை உருவாக்கினார், உருவாக வழிகாட்டினார். ஆனால், ரோகித் சர்மா கேப்டன்சியில் அப்படி இருந்ததாக நான் பார்க்கவில்லை,” என்றார்.

ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

‘அஸ்வினை பயன்படுத்தத் தெரிந்தவர் தோனி’

தோனி-ரோகித் சர்மா கேப்டன்ஷி குறித்து எம்ஆர்எப் பவுண்டேஷன் அமைப்பின் துணைப் பயிற்சியாளர் எட்வார்ட் கென்னடி பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ தோனி இருந்திருந்தால் கோப்பையை வென்றிருக்கும் என்று கூறும் வாதம் எல்லாம் அவர் மீதான அன்பால் பேசுவது. 2019ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் தோனி இருந்தார் ஆனால் கோப்பையை வென்றோமா” எனத் தெரிவித்தார்.

அஸ்வினை பயன்படுத்தும் விதத்தில் தோனி குறித்து கென்னடி கூறுகையி்ல் “ குறிப்பாக தோனி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினை களமிறக்கியிருப்பார். சிராஜ், சூர்யகுமார் யாதவை அமரவைத்து அஸ்வினை சேர்த்திருப்பார். அஸ்வின் எந்த விக்கெட்டிலும் பந்துவீசக்கூடியவர். அதிலும் ஆமதாபாத் ஆடுகளத்தில் அஸ்வின் சிறப்பாக ஆடக்கூடியவர், அவர் இருந்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஆஸ்திரேலிய அணியில் இடதுகை பேட்டர்கள் அதிகம். அப்படியிருக்கும் போது ஆஃப்ஸ்பின்னர் இல்லாமல் எப்படி களமிறங்க முடியும். அஸ்வின் ஓரளவுக்கு பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். இவற்றை உணர்ந்து அஸ்வினை தோனி சேர்த்திருப்பார்” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)