சிங்கங்களுக்கு தயாரான குனோ புகலிடத்தில் சிவிங்கிப் புலிகள்: வாழ்விடத்தை இழந்த பழங்குடிகள் - கள நிலவரம்

குனோ பழங்குடிகள்
    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி செய்தியாளர், குனோவிலிருந்து

சில சீரற்ற குடிசைகள், சிமெண்ட் வீடுகள் உள்ள இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலை சிமெண்ட் சாலையாக இருந்தாலும் இதன் நீளம் 100 மீட்டர் மட்டுமே இருக்கும். சாலை முடியும் இடத்தில், செப்பனிடப்படாத அச்சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இக்கிராமத்தில் உள்ள 105 வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தொலைதூர கிராமங்களுக்கு அறுவடைக்காகச் செல்கின்றனர். உடலெங்கும் தூசியும் சேறும் படிந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு கூடியிருக்கும் ஆண்களின் கவனம் பாத்தி சஹாரியாவின் மீது பதிந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குனோ சரணாலயத்தின் காடுகளில் இருந்த நூற்றுக்கணக்கான பழங்குடியினரில் பாத்தி சஹாரியாவும் ஒருவர்.

பின்னர் குஜராத்தின் கிர் காட்டில் இருந்து சில ஆசிய சிங்கங்கள் குனோ காடுகளில் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்படுவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சிங்கங்களை குனோவில் குடியேற்றுவதற்காக, காடுகளுக்குள் வசிக்கும் சஹாரியா பழங்குடியினரை மொத்தமாக வேறு இடங்களுக்கு குடி பெயர்க்கவும் யோசனை முன்வைக்கப்பட்டது.

திக்விஜய் சிங், நரேந்திர மோதியின் பங்கு

ஜஸ்வீர் சிங் சௌஹான்
படக்குறிப்பு, ஜஸ்வீர் சிங் சௌஹான்

மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், குஜராத்தில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசும் இருந்தபோது இந்தப் பரிந்துரை வந்தது.

ஆனால், 1999-ம் ஆண்டு, அதாவது மோதி முதல்வராக வருவதற்குச் சற்று முன்புதான் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கின. வேலை தொடங்கியதும், சஹாரியா பழங்குடியின மக்களும் வேறு சில பழங்குடியினரும் 28 கிராமங்களில் இருந்து ஒருவர் பின் ஒருவராக இடம்பெயர்ந்தனர். இந்த நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

அன்றைய மாநில அரசு குனோ காடுகளை விட்டு வெளியேறும்படி கிராம மக்களைக் கோரி, அவர்களை ஒப்புக்கொள்ளவும் வைத்தது.

மத்தியப் பிரதேச அரசின் தற்போதைய வனத்துறையில் தலைமை வனப் பாதுகாவலரான (வனவிலங்கு) ஜஸ்வீர் சிங் சௌஹான் பிபிசியிடம் பேசுகையில், 'உள்ளூர் நிலவரங்களை' மனதில் கொண்டு 'மறுவாழ்வுத் தொகுப்பு' உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

கிராம மக்களின் மறுவாழ்வு குறித்துப் பேசுகையில் அவர், அதில் இழப்பீடாகப் பணம் அல்லது மாற்று நிலம் என்ற இரண்டு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

இழப்பீட்டுத் தொகை பெற விருப்பம் தெரிவித்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நிலத்துக்கு ஈடாக நிலம் கேட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு ஹெக்டேர் நிலம் வழங்கப்பட்டது.

சஹாரியா மற்றும் பீல் பழங்குடியினர் மட்டுமல்லாமல் குனோவிலிருந்து இடம்பெயர்ந்த பிற சாதி மக்களுக்கும் இந்த 'தொகுப்பின்' கீழ் இழப்பீடு வழங்கப்பட்டது. இது தவிர, புதிய இடத்தில் மின்சாரம், சாலைகள், மருந்து மற்றும் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டதாக சௌஹான் கூறுகிறார்.

பழங்குடிகள் இடம் பெயர்ந்தனர், ஆனால், சிங்கங்கள் வரவில்லை

குனோ பழங்குடிகள்

ஆக்ரா, பௌரி, கர்ஹல், சேசைபுரா, சேட்டிகேடா மற்றும் விஜய்பூர் ஆகிய பகுதிகளில் நிலம் அடையாளம் காணப்பட்டது, அங்கு இந்த இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இடங்களில் இடம்பெயர்ந்த பழங்குடியினரின் குடியிருப்புகளுக்கு அவர்கள் காட்டுக்குள் வாழ்ந்தபோது அவர்களின் கிராமங்கள் இருந்த அதே பெயரே வழங்கப்பட்டன.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது காட்டுக்குள் ஒரே ஒரு கிராமம் மட்டுமே உள்ளது, அதன் பெயர் பாக்சா. இதுவரை மாற்று நிலம் கிடைக்காததால், இக்கிராமத்தை இடம் மாற்றும் இன்னும் நிலுவையில் உள்ளது.

இடப்பெயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், அன்றைய குஜராத்தின் நரேந்திர மோதி அரசு, குனோவுக்கு கிர் சிங்கங்களை அனுப்ப மறுத்துவிட்டார்.

'ஆசிய சிங்கங்கள்' குஜராத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே உள்ளன என்று 'வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா', அரசுக்கு முன்மொழிந்தபோது, இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தின் பணிகளைத் தொடங்கியது. அவர்களுக்குள் ஏதேனும் நோய் பரவினாலோ அல்லது மக்கள் தொகை குறைந்தாலோ அவை அழிந்துவிடும், எனவே அவற்றைக் காப்பாற்றும் நோக்கத்தில் இந்தச் சிங்கங்களில் சிலவற்றை வேறு ஏதேனும் வனப் பகுதியில் குடியமர்த்த வேண்டியது அவசியம்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ காடுகளையும், அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் சிங்கங்களுக்குச் சாதகமானதாக அந்த அமைப்பு கண்டறிந்தது.

1994 ஆம் ஆண்டு 'தான்சானியாவின் செரெங்கேட்டி தேசிய பூங்காவில்' சுமார் 2500 சிங்கங்கள் இறந்ததையடுத்து, செய்யப்பட்ட ஆய்வின் முடிவாகவும் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. அந்தச் சிங்கங்கள் வைரஸ் தொற்று காரணமாக இறந்தன.

குனோ பழங்குடிகள்

கிர் காட்டில் இருந்து சிங்கங்களை கொண்டு வரும் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட இருந்தது. 2000 ஆம் ஆண்டிற்குள் பூர்வாங்கப் பணிகள், 2005 ஆம் ஆண்டளவில் குனோவிற்கு மாற்றுதல் மற்றும் 2015 ஆம் ஆண்டளவில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் குஜராத் அரசு தனது சிங்கங்களை மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்ப மறுத்து விட்டது. 1985 ஆம் ஆண்டு வரை கிர் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை 191 ஆக இருந்தது, இது 2000 ஆம் ஆண்டில் 400 ஆக அதிகரித்தது, எனவே அவை கிர் காடுகளிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த விவகாரம் சட்டப் போராட்டமாக மாறி, உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதில் பத்தாண்டுகள் கழிந்தன.

2022 ஆம் ஆண்டளவில், காடுகளுக்குள் குடியேறிய மக்கள் அகற்றப்பட்டனர், இதில் 90 சதவீத மக்கள் பழங்குடியினராக இருந்தனர், மீதமுள்ள 10 சதவீதத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடும்பங்கள் அடங்கும். பல பழங்குடியினர் காட்டிற்கு திரும்பியபோது, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

2001 ஆம் ஆண்டு குனோவில் உள்ள நாயகோன் என்ற கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த சஹாரியா பழங்குடியினர் தங்கள் பழைய வன கிராமத்திற்குத் திரும்பினர். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு வனத்துறையினர் அவர்களை மீண்டும் வெளியேற்றினர். இந்தக் காலகட்டத்தில் மோதல்களும் நடந்தன, மேலும் வனத்துறை ஊழியர்களை தாக்கியதற்காக கிராம மக்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

புதிய இடத்தின் பிரச்சனைகள்

குனோ பழங்குடிகள்

மத்தியப் பிரதேசத்தின் தலைமை வனக் காவலர் (வனவிலங்கு) ஜஸ்வீர் சிங் சௌஹான் கூறுகையில், “முன்னர் குனோ 345 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு 'சரணாலயமாக' இருந்தது. கிர் காடுகளின் சிங்கங்களை இங்கு கொண்டுவருவது பற்றி பேசப்பட்ட காலத்தின் நிலவரம் இது. இந்தச் சரணாலயத்திற்குள் 24 கிராமங்கள் இருந்தன. இந்தப் பகுதி, பின்னர் சிங்கங்களுக்காகத் தயார் செய்யப்பட்டது. தற்போது அங்குள்ள அனைத்து கிராமங்களும் சரணாலயத்தில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டுள்ளன. அதன் பிறகு 2018 இல் இது தேசிய பூங்காவாக மேம்படுத்தப்பட்டது. இப்போது இது 750 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவாக மாறியுள்ளது." என்று விளக்கினார்.

பால்பூரின் ஜரோடா கிராமத்தில் வசிக்கும் பாயீஸ்ராம் சஹாரியா கூறுகையில், "எளிய பழங்குடியினரை" மறுவாழ்வு "தொகுப்பு" மூலம் தவறாக வழிநடத்துவதில் மாநில அரசு வெற்றி பெற்றுள்ளது. வன நிலத்துக்குப் பதிலாக, வன எல்லைக்கு வெளியே 9.5 பீகா நிலத்தை அரசு வழங்கியதாகச் சொல்கிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்குவதாகவும் அறிவித்தது.

பாயீஸ்ராம் சஹாரியா
படக்குறிப்பு, பாயீஸ்ராம் சஹாரியா

எங்கள் கிராமங்கள் ஒவ்வொன்றாகக் காலி செய்யப்பட்டன. 9.5 பீகா நிலம் வழங்கப்பட்டது. ரூ. 36,000 ரொக்கமாக வழங்கப்பட்டது, அறிவிக்கப்பட்ட ஒரு லட்சத்தில் மின்சார இணைப்புக்கான கட்டணம் கழித்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. சாலை அமைக்கும் செலவு, மரம் நடுவதற்கான செலவு, தீவனத் தோட்டத்திற்கான செலவு, இது தவிர, வயல்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும், இவை அனைத்திற்குமான பணமும் எங்கள் இழப்பீட்டு தொகையிலிருந்து கழிக்கப்பட்டது. மீதி 36 ஆயிரம் ரூபாயில் கழிப்பறை கூட கட்ட முடியாது, எங்கிருந்து வீடு கட்டுவது?" என்கிறார் அவர்.

தான் இடம்பெயர்ந்து 22 வருடங்கள் ஆகிறது என்றும், மாற்று நிலம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அப்போது அவர் கூறுகையில், "பட்டாக்கள் குறித்த தகவல்களை, வனத்துறை, அரசுக்கு அனுப்பியுள்ளதா, இல்லையா என்பது, எங்களுக்கு தெரியவில்லை. இந்தப் பட்டாக்களை எங்கே போட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. கணினியில்தான் நிலத்தையும் பட்டாவையும் பார்க்கமுடிகிறதே தவிர, நிலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை." என்று வேதனைப்படுகிறார்.

குனோ

ஆனால், பழங்குடியினருக்கு வனத்துறையினர் காட்டிய நிலம் பாறைகள் நிறைந்ததாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலையிலும் இருப்பதை கண்டு, நல்ல எதிர்காலக் கனவுடன் இருந்த கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

பேசப்பட்ட 36,000 ரூபாய் ரொக்கத் தொகை, அதுவும் மொத்தமாகப் பெறப்படவில்லை என்று இடம்பெயர்ந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் தொகை தவணையாக வழங்கப்பட்டதாக பாயீஸ்ராம் தெரிவித்தார். "சில சமயம் ஐயாயிரம் ரூபாய், சில சமயம் மூன்றாயிரம், சில சமயம் இரண்டாயிரம் என்று பணம் வந்தது, எங்கே போனது என்றும் தெரியவில்லை." என்பது அவரது குற்றச்சாட்டு.

பைரா பால்பூரைச் சேர்ந்த ராம் சரண் சஹாரியா, காட்டில் உள்ள தனது கிராமத்தில் வசித்தபோது 40 பீகா நிலத்தின் உரிமையாளராக இருந்தார். அவனிடம் பத்து பசுக்களும் மற்ற கால்நடைகளும் இருந்தன. ஆனால் காட்டில் இருந்து வேளியேற்றப்பட்ட பிறகு, அவர்களிடம் இப்போது எதுவும் இல்லை.

நல்ல காலம் போனது - குனோ பழங்குடிகள்
படக்குறிப்பு, ராம் சரண் சஹாரியா

ராம் சரண் கூறுகிறார், "நான் எனது கால்நடைகளை எனது குழந்தைகளைப்போல் வளர்த்தேன். வாழ்க்கை செழிப்பாக இருந்தது. இப்போது எங்களை இங்கு கொண்டு வந்து பாறை பூமியில் உட்காரவைத்துள்ளனர். இப்போது எங்கள் குழந்தைகள் எங்களுக்கு பங்கைக் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். இருக்கும் ஒன்பது பீகா நிலத்தில் நான் தொழில் செய்வதா, என் மூன்று மக்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதா? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

“வாழ இடம் இல்லை என்றால் என்ன செய்வது. என் வாழ்க்கையே கவலைக்கிடமாக உள்ளது,குழந்தைகளின் வாழ்க்கை பிரச்சனையாக உள்ளது.அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவ்வளவு பேரை எப்படிக் காப்பாற்றுவது? இந்த ஒன்பது பீகா நிலத்தில் நான் என்ன செய்ய முடியும். எனது வயலில் எட்டு அங்குல மண் உள்ளது. ஏரைப் பயன்படுத்தும் போது அது கற்களில் சிக்கிக் கொள்கிறது.” என்கிறார் அவர்.

இருப்பினும், கிர் காடுகளின் சிங்கங்களை அடைக்க இடம்பெயர்ந்த பழங்குடியினர் மற்றும் பிற கிராம மக்கள் "மகிழ்ச்சியாக" இருப்பதாகவும் "இருபது ஆண்டுகளாக விவசாயம்" செய்து வருவதாகவும் மத்தியப் பிரதேச அரசு கூறுகிறது. ஜஸ்வீர் சிங் சௌஹான் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.

"அச்சே தின் (நல்ல காலம்) போய்விட்டது"

நல்ல காலம் போனது - குனா பழங்குடிகள்

ஸ்ரீராம் சஹாரியா குனோவில் உள்ள தனது கிராமத்தில் வசித்து வந்தபோது, அவரிடம் 40 பசுக்களும் 30 ஆடுகளும் இருந்தன. அவருக்கு போதுமான நிலம் இருந்தது, அதில் அவர் ரபி மற்றும் கரீஃப் பருவங்களில் 'பம்பர் விவசாயம்' செய்து வந்தார். ஆண்டு முழுவதும் தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர, அதை விற்று பணம் சம்பாதித்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால், "இப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என்னிடம் அவ்வளவு மூலதனம் இல்லை என்றாலும், கால்நடைகளை வளர்க்கலாம், கூலித் தொழிலுக்கு வெளியே சென்றால், அவற்றை யார் பராமரிப்பது? எங்களால் இங்கு வாழமுடியவில்லை. ஏழெட்டு மாதங்கள் கூலிக்கு வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு பாசன வசதி இல்லாதது மிகப்பெரிய பிரச்னை. நிலம் பாறையாக உள்ளது. உடனுக்குடன் தண்ணீர் பாய்ச்சினால் பயிர் வளரும், இல்லையெனில் அழிந்துவிடும். தண்ணீர் தருவதாக உறுதியளித்தார்கள். முழுமை பெறாத கிணறுகள் இன்னும் அப்படியே கிடக்கின்றன.” என்கிறார்.

மூத்த பத்திரிக்கையாளர் பிரமோத் பார்கவா பழங்குடியினர் மற்றும் குனோ கிராமவாசிகளின் இடம்பெயர்வுகளை நீண்ட காலமாக கண்காணித்து வருகிறார். குனோ காடுகளில் இருந்து கிராம மக்களை வெளியேற்றுவதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டபோது, அங்கு வசிக்கும் பழங்குடியினர் வனவிலங்குகளை அழித்துவிடுவார்கள் என்று அரசாங்கம் வாதிட்டதாக அவர் கூறினார்.

நல்ல காலம் போனது - குனோ பழங்குடிகள்

ஆனால் அரசாங்கத்தின் தர்க்கத்திற்கு சவால் விடும் பார்கவா, அழிந்த அனைத்து வகையான வன விலங்குகளும் வேட்டையாடுவதால் மட்டுமே அழிந்துள்ளன என்று கூறுகிறார். உதாரணமாக, பெரிய அரண்மனைகள் அல்லது அருங்காட்சியகங்களில் சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளின் தோல்கள் வைக்கோலால் அடைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுகிறார்.

பார்கவா, "தோல்களில் வைக்கோல் அடைக்கப்பட்ட விலங்குகளில், சிங்கம், சிறுத்தை மற்றும் புலிகள் ஆகிய அனைத்து வகை விலங்குகளும் உள்ளன. மேலும் எந்த மன்னரால் அல்லது எந்த ஆங்கிலேய பிரபுவால் எத்தனை விலங்குகள் வேட்டையாடப்பட்டன என்று அவற்றின் எண்ணிக்கையும் எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளிப்படையாக, கிராமத்தின் பழங்குடியினர் சிங்கங்களுக்கு அல்லது வேறு எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. என்ன தீங்கு செய்தாலும் நிலப்பிரபுக்களே விலங்குகளை வதை செய்திருக்கிறார்கள்," என்கிறார்.

வனவிலங்குகளின் பாதுகாப்புக்காகச் செயல்படும் ஆர்வலர் அஜய் துபே, "சிங்கங்களுக்கு இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது குனோவில் சிவிங்கிப் புலிகள்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழும்," என்று கூறுகிறார்.

நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகளுக்காக குனோவை ஒட்டிய கிராமங்களைக் கையகப்படுத்த மாநில அரசு இப்போது திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போதுள்ள காடுகளை விரிவுபடுத்தவும், சிவிங்கிப் புலிகள் உலவுவதற்கு 'புல்வெளி'யை உருவாக்கவும் முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: