இந்தியா - கனடா இருநாட்டு உறவில் சீக்கியர்களின் பங்கு என்ன? இனி நல்லுறவு திரும்புமா?

பட மூலாதாரம், GETTY IMAGES/FB-VIRSA SINGH VALTOHA
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த ஆண்டுக்கான ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது முக்கியமாக, காலிஸ்தானுக்கு ஆதரவான சக்திகளின் செயல்பாடுகள் கனடாவில் கட்டுப்படுத்தப்படாதது குறித்த தமது அதிருப்தியை மோதி, ட்ரூடோவிடம் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்றத்தில் ட்ரூடோ திங்கள்கிழமை பேசிய ஒரு விஷயம், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தி்ல் ட்ரூடோ பேசியது தான் இந்தியா - கனடா இடையேயான உறவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணம்.
“ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு தொடர்பிருக்க சாத்தியமுள்ளதாக கூறிய கனேடிய பிரதமர், இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக உள்ளன” என்றும் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
ட்ரூடோவின் இந்தப் பேச்சை தொடர்ந்து, கனடாவுக்கான இந்தியாவின் உயர்நிலை தூதரக அதிகாரி பவன் குமார் ராயை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலான ஜோலி அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக, இந்தியாவும் கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது.
இதன் விளைவாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான பாதை எதிர்காலத்தில் கடினமாகி விடக்கூடும் என்று நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் கனடா உடன் ராஜாங்க ரீதியான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 75 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது.
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவுகள் எந்தெந்த கட்டங்களில் எப்படி இருந்துள்ளன என்பது குறித்து இங்கு காண்போம்.
இருநாட்டு உறவின் ஆரம்பம்

பட மூலாதாரம், GETTY IMAGES
ஆசியாவில் தனது அதிகார சமநிலையை பராமரிக்கும் நோக்கில், நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலே இந்தியாவுடன் கனடா நட்பு பாராட்ட தொடங்கியது.
பனிப்போரின் போது, கனடாவிடமிருந்து பொருளாதார உதவியைப் பெற்ற மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தது. கொழும்பு திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டத்திற்கு கனடா மானியம் வழங்கியது.
இருப்பினும், நேட்டோ அமைப்பின் நிறுவன உறுப்பு நாடுகளில் ஒன்றாக கனடா இருந்ததும், அணிசேரா இயக்க நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்ததும் இருநாடுகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1948 இல் கனடா ஆதரித்தபோது, இருநாடுகளுக்குமான உறவில் பதற்றம் ஏற்பட்டது.
அதன்பின், 1974 இல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது, அதற்கு கனடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதேபோன்று, 1998 இல் இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை மேற்கொண்ட போது கனடா உடனான உறவில் மீண்டும் பதற்றம் காணப்பட்டது.
புதிய பாதை

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த கனடா அரசு முடிவு செய்தது.
இதன் காரணமாக. 2001 இல், இந்தியா மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அந்நாடு நீக்கியது. அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியதன் விளைவாக இந்த தடைகளை கனடா முன்பு விதித்திருந்தது.
2010இல், இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக (FTA) பேச்சுவார்த்தைகளை கனடா தொடங்கியது.
2010 இல், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா சென்றிருந்தார்.
அந்த காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே, சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (NPT) மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) ஆகியவற்றில் கையெழுத்திட தயாராக இல்லாத நிலையில், சிவில் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா -கனடா நட்புறவில் முக்கிய மைக்கல்லாக கருதப்பட்டது.
ஆனாலும், NPT, CTBT போன்ற விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2015 இல் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது கனேடிய நிறுவனம் ஒன்றிடமிருந்து 3000 டன் யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ட்ரூடோவின் இந்திய கொள்கை

பட மூலாதாரம், GETTY IMAGES
கனடாவில் 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், லிபரல் கட்சி வெற்றி பெற்று, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சி அமைந்தது.
ட்ரூடோவின் வருகை இந்தியா -கனடா இடையிலான உறவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக இருந்தது.
இருப்பினும், உலக அளவிலும், ஆசியாவிலும் வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையைக் கருத்தில் கொண்டு, அதனுடன் உறவுகளை வலுப்படுத்தும் கொள்கைக்கு ட்ரூடோ முக்கியத்துவம் கொடுக்க துவங்கினார்.
அதேநேரம் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சீனா குறித்து கனடா எச்சரிக்கையாக உள்ளது. இதன் வெளிப்பாடாக இந்தோ- பசிபிக் குறித்த தனது நிலைப்பாட்டை 2022 நவம்பரில் கனடா அறிவித்தது. அது சீனாவை பற்றிய கனடாவின் எச்சரிக்கையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது.
இருப்பினும், இந்தியா தொடர்பான கொள்கைகள் குறித்து, ட்ரூடோ மற்றும் அவரது சகாக்களுக்கு அச்சம் இருந்தபோதிலும், 2015 க்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையேயான உறவு கொஞ்சம் மேம்பட்டதாக தோன்றியது.
கனடாவில் சீக்கியர்களின் ஆதிக்கம்

பட மூலாதாரம், GETTY IMAGES
சீக்கிய பிரிவினைவாதிகளால் கனடாவில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் தான், அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதற்கு காரணம்.
பரப்பளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளாமானோர் வாழ்கின்றனர். குறிப்பாக அங்கு சீக்கியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ தனது முதல் அமைச்சரவையில், சீக்கியர்கள் நான்கு பேருக்கு இடம் அளித்ததில் இருந்து அவர்களுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை அறியலாம்.
தமது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சீக்கியர்களின் எண்ணிக்கை இந்திய அரசின் அமைச்சரவையில் அவர்கள் இடம்பிடித்துள்ளதற்கு சமமாக இல்லை என்று அப்போது ட்ரூடோ கூறியிருந்தார்.
சீக்கியர்கள் மீதான அவரது பெருந்தன்மை காரணமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ‘சிங்’ ட்ரூடோ என்றும் வேடிக்கையாக அழைக்கப்பட்டார்.
2015 இல் கனடா நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர. இவர்களில் 17 பேர் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதிலிருந்து கனடாவில் இந்தியர்களுக்கு உள்ள செல்வாக்கை நாம் அறிய முடியும்.
மேற்கத்திய நாடுகளில் ஒன்றான கனடாவில், குடியேற்ற கொள்கை தற்போது மிகவும் தாராளமாக்கப்பட்டுள்ளது.
இதன் பயனாக, அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2025க்குள் புதிதாக 15 லட்சம் வெளிநாட்டினர் கனடாவில் குடியேற வாய்ப்புள்ளது. அப்போது கனேடிய குடிமக்களில் நான்கில் ஒரு பங்கினர் வேறு நாடுகளில் இருந்து வந்து அங்கு குடியேறியவர்களாக இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சீக்கியர்கள் முதன்முதலில் கனடா சென்றது எப்போது?

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த 1897 இல் லண்டனில் நடைபெற்ற வைர விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க வருமாறு, பிரிட்டிஷ் - இந்திய வீரர்களின் ஒரு குழுவுக்கு விக்டோரியா மகாராணி அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது குதிரைப்படை வீரர்களை கொண்ட ஒரு குழு, ராணியுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு பயணப்பட்டது. அந்த வீரர்களில் ரிசல்தார் மேஜர் கேசர் சிங்கும் ஒருவர். கனடாவுக்குச் சென்ற முதல் சீக்கியர் ரிசல்தார் ஆவார்.
சிங்குடன் வேறு சில வீரர்களும் கனடாவில் தங்க முடிவு செய்திருந்தனர். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவை தனது இல்லமாக்கினார்.
சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து கனடா செல்லும் நடைமுறை இங்கிருந்து தொடங்கியது. சில ஆண்டுகளில் 5,000 இந்தியர்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவை அடைந்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சீக்கியர்கள்.
இருப்பினும் கனடாவில் சீக்கியர்கள் குடியேறுவதும், வளர்வதும் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
அவர்களின் வருகையையும், அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதையும் கனடாவில் உள்ள வெள்ளையர்கள் விரும்பவில்லை. இதன் விளைவாக இந்தியர்களுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் தொடங்கின.
கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 7,70,000 சீக்கியர்கள் உள்ளனர்.
இந்தியா - கனடா உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும் ‘காலிஸ்தான்’
கனடாவில் கணிசமாக குடியேறியுள்ள சீக்கியர்கள் அந்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துவதுடன், இந்தியா - கனடா உறவை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்தியாவில் 1980களில் சீக்கிய பிரிவினைவாதிகளின் தனி நாடு கோரும் இயக்கம் வேகமெடுக்கத் தொடங்கியது.
1984 இல், சீக்கிய பிரிவினைவாதிகள், அ்ப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை அதிகரித்தது.
1984 இல் இந்திரா காந்தி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பினார். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலில் ஆயுதம் தாங்கிய சீக்கிய தீவிரவாதிகள் திரண்டிருந்தனர்.
‘ஆபரேஷன் ப்ளு ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் 83 பேர் கொல்லப்பட்டனர்; 248 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களை தவிர 492 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,592 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு, 1985 இல் கனடாவில் வசித்து வந்த சில ‘காலிஸ்தானி’ பிரிவினைவாத குழு, ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது.
கனடாவின் டொரான்டோவில் இருந்து லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அதில் பயணித்த 329 பேரும் உயிரிழந்தனர். இது கனடாவில் நிகழ்ந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொல்பியாவில் இருந்து இரண்டு சீக்கிய பிரிவினைவாதிகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பான வழக்கில் பல சாட்சிகள் கொல்லப்பட்டனர் அல்லது சாட்சியமளிக்காமல் இருக்க மிரட்டப்பட்டனர்.
பிராம்ப்டனில் சில மாதங்களுக்கு முன் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியின் இரத்தக் கறை படிந்த சேலையில், தலைப்பாகை அணிந்த சிலர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டிக்காட்டுவது போன்ற படங்கள் இடம்பெற்றன.
“ஸ்ரீதர்பார் சாஹிப் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்குதல்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையும் அந்த அணிவகுப்பில் காட்டப்பட்டது.
மேலும் கடந்த சில மாதங்களாக கனடாவிலும், லண்டனிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் சுவரொட்டிகளும் சமீபகாலமாக கனடாவில் ஒட்டப்படுகின்றன.
காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு இந்த ஆண்டு மோசமடைந்துள்ளது.
இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வுகளை தடுக்குமாறு கனடாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், சீக்கிய பிரிவினைவாதிகள் விஷயத்தில் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு மென்மையான அணுகுமுறையை கையாள்வதாக இந்தியா கருதுகிறது.
காலிஸ்தான் தலைவர்களின் கொலை மற்றும் தொடர் ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகளால் இந்தியாவுடனான கனடாவின் உறவில் சில காலமாகவே பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த ஜூலை மாதம், கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள், தங்களது சுவரெொட்டிகளின் மூலம் சில இந்திய தூதர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தன.
முன்னதாக ஜூன் மாதம், காலிஸ்தானி தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து டொரான்டோ, லண்டன், சான் பிரான்சிஸ்கோ, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நிஜ்ஜாருக்கு முன், இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்வாத், கடந்த மே மாதம் லாகூரில் கொல்லப்பட்டார்.
அவதார் சிங் காந்தா என்பவர் ஜூன் மாதம், பிரிட்டனில் மர்மமான முறையில் இறந்தார். அவர் காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்படுகிறது.
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சீக்கிய பிரிவினைவாதிகள் குற்றம்சாட்டினர்.
தங்களின் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் குறிவைத்து கொல்லப்படுவதாக சீக்கிய பிரிவினைவாத அமைப்பினர்கள கூறுகின்றனர். அவர்களை இந்திய அரசு கொல்ல வைக்கிறது என்றும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் இந்தச் குற்றச்சாட்டு குறித்து இந்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்க ட்ரூடோ அரசு தவறிவிட்டது என்று இந்தியா கூறுகிறது.
இந்தியா - கனடா உறவின் எதிர்காலம் என்ன?
இத்தகைய சூழலில் இந்தியா -கனடா உறவின் எதிர்காலம் என்ன? நல்லுறவு திரும்புமா? என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து, இந்திய அரசின் முன்னாள் அதிகாரியான கே.சி. சிங் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தூதரக அதிகாரியின் வெளியேற்றமும், கனேடிய வெளியுறவு அமைச்சரின் அறிக்கையும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்குலைத்துவிட்டன,” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ ஒரு மூத்த தூதரக அதிகாரி மீது இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் அரிதான சம்பவம். எந்தவொரு ஜி 7 நாடும், NATO அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளும் இவ்வாறு செய்ததில்லை. இதன் விளைவாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம் என்ற கட்டத்தை எட்டியுள்ளது” என்று சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, சௌத் ஆசியா இன்ஸ்டிடியூட் ஆஃப் வில்சன் சென்டரின் இயக்குநரான மைக்கேல் குகல்மேன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறும்போது, “கனடா இந்தியாவின் மிக முக்கியமான மேற்கத்திய கூட்டாளியாகும். இந்தியாவுக்கு எதிராக ஜஸ்டின் ட்ரூடோ கூறிய குற்றச்சாட்டுக்குப் பிறகு. இந்திய தூதரக அதிகாரியின் வெளியேற்றம் வியக்கத்தக்க நடவடிக்கையாகும். பொதுவாக இப்படி நிகழாது,” என்று குகல்மேன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “கனேடியப் பிரதமரின் இந்தியா மீதான இந்தக் குற்றச்சாட்டு, அவரிடம் இதுதொடர்பாக வலுவான ஆதாரம் உள்ளது என்பதையே காட்டுகிறது. இல்லையெனில் இந்தியாவுடனான தனது நல்லுறவை அவர் ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?
இந்தியா மீதான தனது குற்றச்சாட்டின் தீவிரம் அவருக்குத் தெரியும் என்று நம்புகிறேன்” என்று மைக்கேல் குகல்மேன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - கனடா இடையேயான வர்த்தகம்

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த 2022 இல் கனடாவின் பத்தாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா இருந்தது. 2022-23 இல், இந்தியா கனடாவிற்கு 4.10 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2021 -22 இல் 3.76 பில்லியன் டாலர்களாக இருந்தது.
நகைகள், விலையுயர்ந்த கற்கள், மருந்து பொருட்கள், ஆயத்த ஆடைகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட பொருட்கள் இந்தியா கனடாவிற்கு ஏற்றுமதி செய்வதில் அடங்கும்.
இதேபோன்று, 2022- 23 இல், கனடா இந்தியாவிற்கு 4.05 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2021 -22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3.13 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இந்தியா கனடாவில் இருந்து பருப்பு வகைகள், மரக்கூழ், கல்நார், பொட்டாஷ் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் கனடா 17 வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம் 600 கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. மேலும் 1,000 நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வணிக வாய்ப்புகளை தேடி வருகின்றன.
இருநாடுகளுக்கும் இடையேயான CEP உடன்படிக்கையின் பயனாக, இருதரப்பு வர்த்தகத்தை 6.5 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க முடியும். இதன் மூலம் 2035க்குள் 5.9 பில்லியன் டாலர்கள் வரை கனடா பயனடையலாம்.
கனடாவில் இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை கனடா முன்னெடுத்து வருகிறது. அங்கு படிப்பவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
கடந்த 2022 இல், கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3,20,000 ஆக உயர்ந்துள்ளது. இது அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதமாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












