ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத பிராந்திய மையம் - அனைத்து சாதியினரும் கற்க முடியுமா?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வேத சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாடசாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், புராண வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சமஸ்கிருத பிராந்திய மையம் தமிழகத்தில் எடுபடாது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் உட்பட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், வேத பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில், அமைய வேண்டும் என முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புராண வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இதை வரவேற்கின்றனர்.
"பாட சாலையை மீண்டும் தொடங்க வேண்டும்"
வேதங்கள் குறித்து முறையான கல்வி வழங்க கடந்த 1987இல் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக 'மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான்' நிறுவப்பட்டது.
அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் இந்த அமைப்பை தொடங்கி வைத்தார். பின்னர் 1993இல் இந்த அமைப்பு டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு மாற்றப்பட்டது.
இந்த அமைப்பின் முக்கிய பணி, வேத பாடசாலைகள் உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். தற்போது இந்தியா முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்குள்ள மாணவர்கள் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் அமைப்பு மூலம் வேத, சமஸ்கிருத கல்வி வாரியம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

75 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரத்தில் குருகுல கல்வி
வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேத, சம்ஸ் கிருதகல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ராமேஸ்வரம், பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
75 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாணவர்கள் வந்து குருகுலக் கல்வி மூலம் சமஸ்கிருதம் மற்றும் உபநிடதங்கள் கற்றனர்.
1965-ல் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட ராமநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பாடசாலையில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் இது சில ஆண்டுகளுக்குப் பின்பு மூடப்பட்டது.
இந்நிலையில், இங்கு மீண்டும் பிராந்திய மையம் அமைப்பதன் மூலம் மீண்டும் சமஸ்கிருதம் மற்றும் வேத உபநிடதங்கள் மாணவர்கள் கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது என ஒரு சாரார் கூறுகின்றனர்.
சமஸ்கிருதம் படித்து பட்டம் பெற்ற மீனவ பெண்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புராண வரலாற்று ஆராய்ச்சியாளர் சிவராஜன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கி வந்த பாடசாலை கி பி 1914 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை.
இந்த பாடசாலையில் வேதம், ஆகமம், சாஸ்திரம், தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கணங்கள் என இரு மொழி புலமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதாவது, ஓரியண்டல் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் 1940-ம் ஆண்டு அந்த ஓரியண்டல் பள்ளி என அழைக்கப்பட்ட அந்த கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற சான்றிதழை வைத்து திருக்கோவில் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியில் அனைத்து சமூக மக்களும் இங்கு படித்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் ஓரியண்டல் பள்ளியில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
அனைத்து சமுதாயத்தினரும் படித்து வந்த பாடசாலை ஏறக்குறைய 70 வருடங்களாக இயங்கி கடந்த 1964 -1965ல் பொன்விழா கண்ட பாடசாலை தற்போது அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது.
தமிழ் போல சமஸ்கிருதமும் எல்லோரும் படிக்கக்கூடிய மொழியாகவும் எல்லோருக்கும் அது பொது மொழியாகத்தான் பழங்காலத்தில் இருந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் உள்ளது.
எனவே மீண்டும் அந்த பாடசாலை துவங்கப்பட்டு பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இன்று வெளிநாட்டில் இருந்து வந்து நம்முடைய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு, நம்முடைய நூல்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொள்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பக்தி இதை போல் எந்த நாட்டிலும் கிடையாது என வெளிநாட்டவர் கூறுகின்றனர்.
எனவே மீண்டும் ராமேஸ்வரத்தில் சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வதற்கு ஒரு பாடசாலையோ அல்லது ஒரு கல்லூரியோ மீண்டும் தோற்றுவித்தால் இங்கு உள்ள மாணவர்கள் பயன்பெறுவார்கள் என சிவராஜன் கேட்டு கொண்டார்.

சமஸ்கிருதம் அழியாமல் வளர்க்க வேண்டும்:
மனதை கூர்மைப் படுத்துவது மொழி. ஒரு மொழி அழிய வேண்டும் என்கிற நோக்கம் இருக்க கூடாது வளர்க்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என வேத சமஸ்கிருத பாடசாலை முன்னாள் மாணவி நித்யகல்யாணி பிபிசி தமிழிடம் பேச தொடங்கினார்,
தொடர்ந்து பேசிய அவர், "ஒருவர் எந்த நாட்டுக்கு போனாலும் வரவேற்பு உண்டு. அதே போல் எல்லா மொழிக்கும் வரவேற்பும் உண்டு, நினைத்தவுடன் எந்த நாட்டிற்கும் செல்லும் வசதி இருக்கும் போது மொழி எப்படி வேற்றுமையாகும். ஆகவே சமஸ்கிருதம் அழியாமல் வளர்ச்சியடைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
"அனைத்து சாதியினருக்கும் வேதம் கற்று கொடுக்கப்படுமா?"
சமஸ்கிருத மொழியை புனரமைப்பதற்காக மத்திய அரசு சமஸ்கிருத பிராந்திய நிலையத்தை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. ஆனால் தமிழகத்தில் இது எடுபடாது என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் விரிவாக பேசிய அவர், "ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்பது வரலாற்றில் மிக முக்கிய தொடர்புடைய இடங்களில் ஒன்று. எனவே தான் ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று தமிழர்களின் பாரம்பரியம் வெளியே வர தொடங்கியுள்ளது.
சமஸ்கிருதம் என்பது வாழ்வியல் மொழி அல்ல. அது ஒரு மந்திர மொழி. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பில் ஒரு சில ஆயிரம் நபர்கள் மட்டுமே சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்களாக உள்ளனர்.
ஆனால் தமிழ் மொழி என்பது மிகவும் பழமையான மொழி எனவே மத்திய அரசு தமிழ் மொழி வளர்ப்பிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை பாடத் திட்டத்தில் இணைத்து அதை தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் பாடக் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையாக தெரிகிறது.
சமஸ்கிருதத்தில் வேத கணிதம் கற்றுக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவை தற்போது நடைமுறைக்கு சாத்தியப்படாது." என்றார்.

மேலும் பேசுகையில், "மத்திய அரசின் சமஸ்கிருத பிராந்திய மையம் தொடக்கம் என்பது இந்துத்துவாவின் மொழி ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தமிழை ஆட்சி மொழியாக ஏற்க மறுக்கும் சூழ்நிலையில் சமஸ்கிருதத்தை புனரமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் அமைய உள்ள சமஸ்கிருத பிராந்திய மையத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தமிழ் வளர்ச்சி நிலையம் ஒன்று அமைந்திருந்தால் நிச்சயம் மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அரசியலுக்காக மட்டுமே தமிழ் மொழியை பயன்படுத்துகின்றனர்.
ஒரு காலத்தில் சமஸ்கிருத மொழி பாடத்திட்டத்தில் இருந்தது, குறிப்பாக மருத்துவத் துறையில். அது ஒரு பாடத்திட்டமாக இருந்தது. நீதி கட்சி ஆட்சிக்கு பின்பு அது அகற்றப்பட்டது. தற்போது தமிழகத்தில் மருத்துவத் துறையில் தமிழ் மொழியை பாடமாக கொண்டிருந்தால் அரசு மருத்துவர் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கூறியிருப்பதை போன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டால் தமிழ் வளரும்.
சமஸ்கிருத மொழியை புனரமைப்பதற்காக ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத பிராந்திய மையம் அமைக்கப்படுகிறது. ஆனால் இது தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிப்பதற்காக ராமேஸ்வரத்தில் பிராந்திய மையத்தை கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அதே போல் மத்திய அரசால் கொண்டு வரப்படும் சமஸ்கிருத பிராந்திய மையத்தில் அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதம் கற்று தரப்பட்டு கோவில் கருவறைக்குள் பூஜை செய்யலாம் என்று மத்திய அரசால் உறுதி அளிக்க முடியுமா" என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி எழுப்புகிறார்.
இங்கே சுண்ணாம்பு, அங்கே வெண்ணெயா?
வேத சமஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையத்தை மத்திய அரசு ராமேஸ்வரத்தில் துவங்க உள்ளது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், 'தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய். செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








