IND vs SL: அதிரடியாகத் தொடங்கிய இலங்கைக்கு டெத் ஓவரில் முடிவு கட்டிய ரியான் பராக்

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர், புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் இலங்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இளம் வீரர்களைக் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட புதிய இந்திய அணிக்கு இந்த வெற்றி தார்மீகரீதியாக மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும்.

பல்லேகேலே நகரில் நேற்றிரவு நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இது இலங்கை மண்ணில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர். 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடக்கும் 2வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி வென்றால் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதம்(58), ஜெய்ஸ்வால்(40), கில்(34) ஆகியோர் அமைத்துக் கொடுத்த அடித்தளம், சூர்யகுமாருக்கு ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பந்தின்(49) ஆட்டம் ஆகியவைதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்தது.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட நினைத்த ரியான் பராக்(7), ஹர்திக் பாண்டியா(9), ரிங்கு சிங்(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 22 பந்துகளில் அரைசதம் அடித்து 26 பந்துகளில் 58 ரன்கள்(2 சிக்ஸர்கள், 8 பவுண்டரி) சேர்த்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

'இந்திய அணியின் இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது'

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், ரோஹித், கோலி இல்லாத டி20 அணியின் முதல் வெற்றி குறித்துக் கேட்டபோது, “அதே ரயில்தான் பயணிக்கிறது, எந்த மாற்றமும் இல்லை. இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது, பெட்டிகள் மாறவில்லை” என்று தெரிவித்தார்.

புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீருடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து சூர்யகுமார் கூறுகையில், “நான் கம்பீருடன் 10 ஆண்டுகளாகச் சேர்ந்து பணியாற்றுகிறேன். நான் கொல்கத்தா அணியில் இருந்தபோதே அவருடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அதன்பின் 2018இல் மும்பை அணிக்குச் சென்ற பிறகும் கிரிக்கெட் குறித்து இருவரும் ஏராளமாக ஆலோசித்துள்ளோம். நான் அவருடன் கடந்த 6 ஆண்டுகளாக இல்லை என்றாலும் அவரிடம் இருந்து அதிகமாகக் கற்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த டி20 தொடர் குறித்து "இருவரும் பேசியுள்ளோமே தவிர பெரிதாக ஆலோசிக்கவில்லை. ஏனென்றால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துள்ளோம், எங்கள் இருவரின் உடல்மொழியையும் இருவரும் அறிவோம். சில விஷயங்களை அவர் வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும் நான் புரிந்து கொண்டு செயல்படுவேன்" என்றார்.

தனக்கும், பயிற்சியாளருக்கும் இடையே சிறப்பான பிணைப்பு இருப்பதாகவும், இந்த பயணத்தை உற்சாகமாக அனுபவிப்பதாகவும் விவரித்தார் சூர்யகுமார். அதோடு, கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் தனது பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறிய ஸ்கை, தனது வழக்கமான ஸ்டைலில் தொடர்ந்து விளையாடுவதாகவும் உறுதியளித்தார்.

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

மந்தமான பந்துவீச்சு

பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை 9 ஓவர்களாக பிரிக்க முடியாமல் சிரமப்பட்டனர். 2வது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் திணறினர்.

முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்திய நிலையில் அக்ஸர் படேல் 15வது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு தொடக்கவுரை எழுதினார். அதன் பிறகு இலங்கை பேட்டர்கள் வரிசையாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியில் சிக்கினர்.

பவர்ப்ளே ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் எதிரணி மீது அழுத்தத்தைத் திணிக்க முடியும். ஆனால், நேற்று எந்த பந்துவீச்சாளர்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் பந்து வீசவில்லை என்பதுதான் நிதர்சனம். டெத் ஓவர்களில் ரியான் பராக் சிறப்பாகப் பந்துவீசி 1.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்பட்டது.

மற்ற வகையில் முதல் இரு ஓவர்களிலும் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் 3வது ஓவரில்தான் கட்டுக்கோப்பாக வீசினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு குறையாமல் வாரி வழங்கினர்.

30 ரன்களில் 9 விக்கெட் இழப்பு

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அணியைப் பொருத்தவரை பதுன் நிசங்கா(79), குஷால் மென்டிஸ்(45), குஷால் பெரேரா(20), கமிந்து மென்டிஸ்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 84 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி இலக்கைத் துரத்தியது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவாக இருந்து ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி 30 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தோல்வி அடைந்தது மோசமான பேட்டிங்கின் வெளிப்பாடாக அமைந்தது. இலங்கை அணியின் நடுவரிசை முதல் கடைசி வரிசை வரை 6 பேட்டர்களும் டக்-அவுட்டிலும், ஒற்றை ரன்னிலும் ஆட்டமிழந்து அணியை தோல்விக் குழியில் தள்ளினர்.

அடித்தளம் அமைத்த ஜெய்ஸ்வால், கில்

ஜெய்ஸ்வால், கில் இருவருமே டி20 போட்டிக்கு புதிய தொடக்க வீரர்களாக இந்தப் போட்டியில் அறிமுகமாகினர். ஐபிஎல் போட்டியில் இருவரும் வெவ்வேறு அணிகளுக்காக ஆடியிருந்தாலும் இருவரும் சேர்ந்து ஆடுவது இது முதல்முறை.

இருப்பினும் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தைப் போன்று கில்லால் அதிரடியான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. இன்னும் ஒருநாள் போட்டியைப் போன்றே நிதானமான ஆட்டத்தையே கில் கையில் எடுத்தார். இருப்பினும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து அவ்வப்போது கட்ஷார்ட், ஃபுல் ஷாட்களில் பவுண்டரி அடித்து கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

ஆட்டத்தின் முடிவில் பேசிய கில் “டி20 ஆட்டத்துக்கு ஏற்றார்போல் தன்னுடைய பேட்டிங்கை மாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக” ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்ததால் 4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை தொட்டது.

இருவரின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி விரைவாகவே சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், மகேஷ் தீக்சனா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசியும், ஸ்லாக் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்தும் ஜெய்ஸ்வால் வரவேற்பு கொடுத்தார். பவர்ப்ளே முடிவில் கில் 16 பந்துகளில் 34 ரன்களில் மதுசங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர் முடிவில் இந்திய அணி 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது.

சுப்மான் கில் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களுடன் ஆடி வந்த நிலையில் ஹசரங்காவின் கூக்ளி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கேட்சுகளை தவறவிட்டதற்கு விலை

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் சூர்யகுமார், ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர்.

தான் சந்தித்த 2வது பந்திலேயே சூர்யகுமார் பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். சூர்யகுமார் 15 ரன்னில் இருந்தபோது, மதுசங்கா வீசிய பந்தில் கிடைத்த கேட்சை ஃபைன் லெக்கில் நின்றிருந்த பெர்னான்டோ பிடிக்கத் தவறினார்.

அதேபோன்று ரிஷப் பந்த்தை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த கேட்சை பிடிக்க அசிதா தவறவிட்டார். இரு கேட்சுகளையும் தவறவிட்டதற்கான விலையை இலங்கை அணி கடைசியில் கொடுத்தது.

இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் தனது 360 டிகிரி ஷாட்களில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் தனது 2வது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். 3வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தபோது ரிஷப் பந்த் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். பதிரணா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது கால்காப்பில் வாங்கி 58 ரன்களில் சூர்யகுமார் விக்கெட்டை இழந்தார்.

ரிஷப் பந்த் அதிரடி

ரிஷப் பந்த் நிதானமாக ஆடத் தொடங்கி 15 பந்துகளுக்குப் பின்புதான் முதல் பவுண்டரியை அடித்தார். 16வது ஓவரில் தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்டில் ரிஷப் பந்த் சிக்ஸர் விளாசினார்.

சூர்யகுமார் ஆட்டமிழந்தபின் இந்திய அணி பவுண்டரி அடிக்க 14 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் ரிஷப் பந்த் அதிரடியைக் கையாண்டு அடுத்த 10 பந்துகளில் 29 ரன்களை சேர்த்தார். பதிராணா பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க முயன்று ரிஷப்பந்த் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்றம் அளித்த ஹர்திக், ரிங்கு

அடுத்து களமிறங்கிய ஹர்திக் ஏமாற்றம் அளித்து பதிராணா பந்துவீச்சில் போல்டானார். ஸ்கை ஆட்டமிழந்த அதே பாணியில் ரியான் பராக் கால்காப்பில் வாங்கி பதிராணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் பெர்னான்டோ பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என வலுவாக இருந்தநிலையில் அடுத்த 8 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 250 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்திக், ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோர் ஜொலிக்காத காரணத்தால் இந்திய அணியால் 250 ரன்களை எட்டமுடியாமல் போனது.

இலங்கை தரப்பில் பதிராணா 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் அந்த அணியில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கு குறைவில்லாமல் விட்டுக் கொடுத்தனர்.

அதிரடியாகத் தொடங்கி, வீழ்ந்த இலங்கை

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, குஷால் மென்டில் அதிரடியாகத் தொடங்கினர். சிராஜ் வீசிய 4வது ஓவரில் நிசாங்கா 2 சிக்ஸர்களை விளாசி அதிர்ச்சியளித்தார். 31 பந்துகளில் இலங்கை அணி 50 ரன்களை தொட்டு இந்திய பந்துவீச்சுக்கு சவால் விட்டது.

இந்திய பந்துவீச்சாளர்களும் இருவரையும் பிரிக்க கடுமையாகப் போராடியும் பவர்ப்ளே ஓவர்கள் வரை பிரிக்க முடியவில்லை, விக்கெட் இழப்பின்றி இலங்கை 55 ரன்களை பவர்பிளேயில் சேர்த்தது. நிசங்கா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அர்ஷ்தீப் வீசிய 9வது ஓவரில் மென்டிஸ் 45 ரன்களில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குஷால் பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து அணியை வலுவாக எடுத்துச் சென்றார். 10.2 ஓவர்களில் இலங்கை 100 ரன்களை எட்டி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இலங்கை வலுவாக இருந்தது.

அக்ஸர் படேல் வீசிய 15வது ஓவரில்தான் திருப்புமுனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. செட்டில் பேட்டர் நிசங்கா 79 ரன்களில் அஸ்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், அதே ஓவரின் கடைசிப் பந்தில் குஷால் பெரேராவும்(20) விக்கெட்டை பறிகொடுத்தார்.

இலங்கையின் சரிவு 15வது ஓவரிலிருந்து தொடங்கியது. ரியான் பராக் வீசிய 16வது ஓவரில் குஷால்மென்டிஸ்(12) போல்டானார். கேப்டன் அசலங்கா டக்-அவுட்டில் பிஸ்னோய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹசரங்காவை 2 ரன்னில் அர்ஷ்தீப் வெளியேற்றினார்.

முதல் இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ், 3வது ஓவரில் பதிரானா விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் ரன்அவுட் செய்கிறேன் என்று சிராஜ் பந்தை வீச, அது ஓவர் த்ரோவில் தேவையின்றி பவுண்டரி சென்றது. ரியான் பராக் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா(2), மதுசங்கா இருவரும் ஆட்டமிழக்க இலங்கையின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஒரு கட்டத்தில் வலுவான ஸ்கோருடன் வெற்றியை நோக்கி நகர்ந்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு பெரிய சரிவில் சிக்கியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)