கோலி அணியில் நீடிப்பாரா? வெற்றிக்கான 3 அம்சங்களாக கம்பீர் கூறியது என்ன?

வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடங்கிய கோலி-கம்பீர் உரசல் அன்றோடு முடியவில்லை, 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீகிலும் புகைந்தது. இப்போது தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வழிகாட்டலில் விராட் கோலி விளையாடப் போகிறார் எனும் போதே பல்வேறு ஊகங்கள் ரசிகர்கள் மனதில் ஓடத்தொடங்கின.

கோலியை எவ்வாறு கம்பீர் நடத்தப் போகிறார், அணியிலிருந்து நீக்கப் போகிறாரா, ஐபிஎல் தொடரில் தொடங்கிய உரசல் இந்திய அணியிலும் தொடருமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெற்றிக்கான 3 அம்சங்கள் - கம்பீர் கூறியது என்ன?

வரும் 27ம் தேதி இந்திய அணிக்கு அதிகாரபூர்வமாக தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கம்பீரின் முதல் பணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகும்.

ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவது இதுதான் முதல்முறையாகும்.

தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், ரேயான் டென் டஸ்சாடேவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாய்ராஜ் பகதுலேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப் தொடர்கிறார். இலங்கை பயணம் முடிந்தபின் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இலங்கை தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மும்பையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணியை, தொடர் வெற்றிப் பாதையில் எவ்வாறு அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ மிகவும் எளிமையானது. இந்திய அணியின் எதிர்கால வெற்றிக்கு 3 விஷயங்கள் மிக முக்கியம். ஒன்று நம்பிக்கை, 2வது சுதந்திரம், 3வது வெற்றி ஆகியவைதான். வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிக முக்கியம், சுதந்திரம் அவசியம் என்பதை நான் நம்புகிறேன். சுதந்திரம் இருந்தால்தான் தலைமைப் பயிற்சியாளர், வீரர் என்ற இடைவெளி இருக்காது. இந்த நட்புறவுதான் நம்பிக்கையை வளர்க்கும். எப்போதுமே நான் வீரர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

அணியில் சீனியர், ஜூனியர் வீரர்கள் இருக்கும்போது பணிகளை எவ்வாறு பிரிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ வேகப்பந்துவீச்சாளர்களின் பணியை சரிவர நிர்வகிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் உடற்தகுதியுடன், விளையாடும் நிலையில் இருந்தால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆதலால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடுவார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் உறுதி செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

கோலி, ரோகித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரும் 27-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி தொடங்குகிறது.

விராட் கோலி பற்றி கம்பீர் கூறியது என்ன?

கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் கோலியுடன் கம்பீர் உரசலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது இருவரும் ஒரே அணியில் பணியாற்றப் போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியுடனான உறவு அணியில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு கெளதம் கம்பீர் பதில் அளிக்கையில் “ நான், விராட் இருவருமே முதிர்ச்சியடைந்த தனிநபர்கள். எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். இதை பொதுத்தளத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரில் நாங்கள் இருவருமே வெவ்வேறு அணிக்காக ஆடினோம். அப்போது அந்தந்த அணிக்காக, வெற்றிக்காக உழைத்தோம், சண்டையிட்டோம், போராடினோம். ''

''ஆனால், இப்போது 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது ஒரே அணியில் இருப்பதால், இந்திய அணியின் வெற்றிதான், இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான் எங்கள் இருவரின் உயரிய குறிக்கோளாக இருக்கும்.” என்றார்.

“களத்துக்கு வெளியே விராட் கோலியுடனான என்னுடைய உறவு நல்லவிதமாக இருந்துள்ளது, அது தொடரும். எங்களுக்குள் எந்தவிதமான உறவு இருக்கிறது குறித்து தெரிவிக்க வேண்டியதில்லை. சமீபத்தில்கூட இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது இரு தனிநபர்கள் தொடர்புடையது என நான் நினைக்கிறேன்.”

“பயிற்சியாளர் குறித்த என்னுடைய அறிவிப்புக்கு முன்பும், பின்பும் நான் எத்தனை முறை கோலியுடன் பேசினேன். போட்டிகளுக்கு பின்பும், முன்பும் நான் பேசியது, எங்களைப் பற்றி குறித்த செய்திகள் தலைப்புச் செய்திகளாக மாறியது போன்றவை இப்போது எல்லாம் முக்கியமானவை அல்ல. இப்போது இருவருக்குமே முக்கியமானவை என்னவென்றால், கடினமாக உழைத்து இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான். இதுதான் எங்கள் பணி. விராட் கோலி முழுமையான தொழில்முறை கிரிக்கெட் வீரர், உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அது தொடரும். இருவரும் சேர்ந்து சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்றார்.

கம்பீர், ரோகித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்துள்ளார்.

2027 உலகக் கோப்பை வரை ரோஹித், கோலி அணியில் இருப்பார்களா?

கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில், “ என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இன்னும் இருவரும் அதிகமாக விளையாட வேண்டியுள்ளது. இருவரும் சிறப்பாக உடற்தகுதியை வைத்திருந்தால், அவர்கள் அடுத்த 50 ஓவர்கள் உலகக் கோப்பை வரை விளையாட முடியும். ''

''2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, 2024நவம்பரில் ஆஸ்திரேலியத் தொடர் ஆகியவை இருப்பதால் நிச்சயம் இருவரும் விளையாடுவார்கள். உடற்தகுதியை பராமரித்தால் 2027 உலகக் கோப்பை வரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவர்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நான் கூற முடியாது, அவர்களைப் பொருத்தது. அவர்களால் அணியின் வெற்றிக்கு எவ்வளவு பங்களிக்க முடியுமோ அதை வழங்கலாம். இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்” என்று தெரிவித்தார்.

ஹர்திக்கிற்கு கேப்டன் பதவி மறுப்பு ஏன்?

ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்களா, ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விகளுக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதிப் பிரச்னைதான், சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்க தூண்டியது. சூர்யகுமார் டி20 போட்டிகளை மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.” என்றார்.

ஹர்திக், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார்.

கெளதம் கம்பீர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்

1. 2025 சாம்பியன்ஸ் டிராபிவரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். உடற்தகுதி இருந்தால் 2027 உலகக் கோப்பைவரையிலும் விளையாடலாம்.

2. பணி மேலாண்மை விஷயத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை. குறிப்பாக பும்ராவின் பணிப்பளு நிர்வாகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சீனியர் வீரர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் தொடர்ந்து விளையாட வேண்டும்.

3. சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.

4. ஜடேஜா, ஹர்திக் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர அவர்கள் இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை.

5. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி பிரச்னைதான், டி20 அணியின் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிடம் வழங்க காரணமானது.

6. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் உள்நாட்டு துலீப் டிராபியில் விளையாட வேண்டும்.

7. சுப்மான் கில்லை அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஏற்ற வீரராகப் பார்க்கிறேன். எதிர்காலக் கேப்டனாகவும் வரக்கூடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)