குழந்தையின் முதல் மலம் அதன் எதிர்கால ஆரோக்கியம் பற்றி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
பிறந்த சில நாட்களில் குழந்தையின் குடலில் நுழையும் பொருட்கள், அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.
2017-ல் லண்டனில் உள்ள குயின்ஸ் மருத்துவமனை ஆய்வகத்தில் இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் அன்றைய தபாலுக்காக காத்திருந்தனர். சில நாட்களில், 50 சிறிய பொட்டலங்கள் வரும். ஒவ்வொன்றிலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் டயப்பரில் இருந்து கவனமாக சேகரித்த மலத்தின் மாதிரிகள் இருக்கும்.
இவர்கள் 'பேபி பயோம்' ஆய்வின் முன்னணி பணியாளர்கள். குழந்தையின் குடலில் உள்ள பில்லியன்கணக்கான நுண்ணுயிரிகள் (மைக்ரோபயோம்) அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வது தான் இந்த ஆய்வின் நோக்கம்.
2016-17ல், புதிதாகப் பிறந்த 3,500 குழந்தைகளின் மல மாதிரிகளை இந்த ஆய்வகம் ஆய்வு செய்தது.
அதில் நிறைய மாதிரிகள் இருந்தன. ஆனால் அதிலிருந்து கிடைத்த தகவல்கள் அதைவிட அதிக முக்கியமானவை.
"பிறந்து 3-4 நாட்களுக்குப் பிறகுதான் குடலில் நுண்ணுயிரிகள் முழுமையாக வளரத் தொடங்குகின்றன. அதனால் குடலில் மைக்ரோப்கள் வளர இரண்டு நாட்கள் ஆகும்" என்கிறார் இந்த திட்டத்தை வழிநடத்தும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் (UCL) தொற்றுநோயியல் பேராசிரியர் நைஜல் ஃபீல்டு.
"பிறக்கும் தருணத்தில் குழந்தையின் உடல் முழுவதும் கிட்டத்தட்ட நுண்ணுயிரிகள் இல்லாமல் இருக்கும். அப்போது தான் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு புதிய உலகம் உருவாகும். ஏனென்றால் அந்த தருணம் வரை எந்த உடற்பகுதியும் நுண்ணுயிரிகளை சந்தித்ததில்லை."என்று அவர் கூறுகிறார்.
குடல் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவம்
நாம் அனைவரும், பிறந்த சில நாட்களுக்குப் பின், ஒவ்வொருவரும் தங்களுக்கான குடல் நுண்ணுயிரிகளை உருவாக்குகிறோம். இந்த பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகிறார்கள்.
நாம் வளர்ந்த பிறகு, இந்த நுண்ணுயிரிகள் ஜீரணிக்கக் கடினமான நார்ச்சத்து உணவுகளை ஜீரணிக்க உதவுகின்றன. சில வைட்டமின்களை உருவாக்க தேவையான நொதிகளை வழங்குகின்றன. ஆபத்தான நோய்க்கிருமிகளைத் தடுக்கின்றன. அதே போல், சில நுண்ணுயிரிகள் இயற்கையான ஆன்டிபயாட்டிக் போன்ற பொருட்களையும் உருவாக்கி தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கின்றன.
ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் இருந்தால், பதற்றம், மனச்சோர்வு, அல்சைமர் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், குடல் நுண்ணுயிரிகள் "சமநிலையில்" இல்லாவிட்டால், இதய நோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறு, குடல் அழற்சி, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.
பெரியவர்களின் ஆரோக்கியத்தில் குடல் நுண்ணுயிரிகளின் தாக்கம் குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் குழந்தை பருவத்தில் அவை எவ்வாறு ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து சமீப காலம் வரை அதிகம் தெரியவில்லை. ஆனால் இப்போது அது மாறி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
"குழந்தையின் குடலில் முதலில் குடியேறும் நுண்ணுயிரிகள், அந்த குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டியமைக்கும் 'கட்டிட கலைஞர்களை' போன்றவை " என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அர்ச்சிதா மிஸ்ரா கூறுகிறார். அவர், குழந்தையின் ஆரம்பகால நோயெதிர்ப்பு வளர்ச்சியில் குடல் நுண்ணுயிர்களின் பங்கைப் பற்றி ஆய்வு செய்கிறார்.
"இந்த நுண்ணுயிரிகள் உடலுக்கு 'நண்பன் யார், எதிரி யார்' என அடையாளம் காண 'கற்றுக்கொடுக்கின்றன'. உணவு மூலம் வரும் பொருட்கள், பாதிப்பில்லாத நுண்ணுயிரிகளை ஏற்கவும், தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராக போராடவும் நோயெதிர்ப்பு செல்களுக்கு பயிற்சி அளிக்கின்றன," என அவர் விளக்குகிறார்.
குழந்தை பிறந்த முதல் 6 முதல் 12 மாதங்களுக்கு இடையில் உருவாகும் நுண்ணுயிர் சமூகங்கள், எதிர்காலத்தில் குழந்தைக்கு ஒவ்வாமை வரும் அபாயத்தையும்,தடுப்பூசிகளுக்கு குழந்தையின் உடல் எவ்வளவு நன்றாக வினையாற்றுகிறது என்பதையும், குடல் சுவர் (உடலின் மற்ற பகுதிகளிலிருந்து குடல் உள்ளடக்கத்தைப் பிரிக்கும் தடுப்பு அடுக்கு) எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்பதையும் தீர்மானிக்கின்றன என்கிறார் மிஸ்ரா .
"ஒரு குழந்தை பிறந்த முதல் ஆயிரம் நாட்கள், குடல் நுண்ணுயிரிகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் தாக்கத்தை உருவாக்கும் முக்கியமான காலம்," என்கிறார் மிஸ்ரா.
குழந்தை பிறக்கும் முறை இதில் தாக்கம் செலுத்துகிறதா?
கருப்பையில் இருக்கும்போது குழந்தையின் உடலில் நுண்ணுயிரிகள் இல்லை என நம்பப்படுகிறது. அதாவது, கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு குடல் மைக்ரோபயோம் உருவாவதில்லை. மாறாக குழந்தை பிறந்த பிறகு, தாயின் பிறப்புறுப்பு வழியாக அல்லாமல், தாயின் செரிமானப் பாதையில் இருந்து பெரும்பாலான நுண்ணுயிரிகளை குழந்தை பெறுகிறது.
"புதிதாகப் பிறந்த குழந்தையின் குடல் நுண்ணுயிரிகளை உருவாக்க இயற்கை மிக நுணுக்கமான முறையைப் பயன்படுத்துகிறது," என்கிறார் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் குடல் நுண்ணுயிரியல் நிபுணர் ஸ்டீவன் லீச்.
"பிறப்பு செயல்முறையைப் பற்றி நினைத்துப் பாருங்கள். குழந்தை தலை கீழாக, தாயின் முதுகெலும்பை நோக்கி பிறக்கிறது. அப்போது, குழந்தையின் தலை தாயின் குடல் பகுதியை அழுத்துகிறது. இதனால், பிறக்கும்போது குழந்தையின் முகத்தில் தாயின் மலம் படர்ந்திருக்கும்," என அவர் விளக்குகிறார்.
அதாவது, பிறந்த தருணத்திலேயே குடல் பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் மலத்தை ஆய்வு செய்த ஃபீல்டின் ஆய்வு, ஆரம்ப நாட்களில் சரியான குடல் பாக்டீரியாக்கள் இருப்பது, பிற்காலத்தில் வைரஸ் தொற்றுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் என்கிறது.
இந்த ஆய்வில் 600 குழந்தைகளின் மல மாதிரிகள், பிறந்த 4வது, 7வது மற்றும் 21வது நாளில் சேகரிக்கப்பட்டன. சிலரை 6 மாதம் மற்றும் 1 வருடம் கழித்து மீண்டும் பரிசோதித்தனர்.
"பிறப்பு முறைதான் மிகப் பெரிய வித்தியாசத்தை உருவாக்குகிறது. சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளின் குடல் நுண்ணுயிரிகள், சுகப் பிரசவத்தில் பிறந்தவர்களிடமிருந்து வேறுபட்டவை," என்கிறார் ஃபீல்ட்.
சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் "முகம் நிறைய மலம்" என்ற இயற்கையான நுண்ணுயிரி பரிமாற்றத்தைப் பெறுகின்றனர். ஆனால், சிசேரியன் குழந்தைகள் இதை இழக்கின்றனர்.
சிசேரியன் அறுவை சிகிச்சை, உயிர் காக்கும் முக்கிய முறையாக இருந்தாலும், இதனால் குழந்தைகள் சுவாச தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் பயனுள்ள பாக்டீரியாக்களை இழக்கின்றனர் என ஆய்வு கூறுகிறது.
2019-ல் நடந்த ஆய்வு, பிறந்த முதல் வாரத்தில் மூன்று முக்கிய "முன்னோடி" நுண்ணுயிரிகளில் ஒன்று குடலில் குடியேறுவதாகக் கண்டறிந்தது. பிஃபிடோபாக்டீரியம் லாங்கம் (B. longum), பிஃபிடோபாக்டீரியம் ப்ரீவ் (B. breve), அல்லது என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ் (E. faecalis).
"இவற்றில் எது முதலில் குடியேறுகிறதோ, அது பிறகு வரும் நுண்ணுயிரிகளின் பாதையைத் தீர்மானிக்கிறது," என்கிறார் ஃபீல்ட்.

பட மூலாதாரம், Getty Images
பிறந்து ஏழாம் நாளில், சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் குடலில் பொதுவாக பிஃபிடோபாக்டீரியம் லாங்கம் (B. longum) அல்லது பிஃபிடோபாக்டீரியம் ப்ரீவ் (B. breve) போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஆனால், சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளில் என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ் (E. faecalis) என்ற பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது.
சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் குடல் நுண்ணுயிரிகள் தாயின் குடல் நுண்ணுயிரிகளை ஒத்திருப்பது, இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் தாயின் குடல் வழியாகவே வருகின்றன, பிறப்புறுப்பு வழியாக அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. மறுபுறம், சிசேரியன் குழந்தைகளில் மருத்துவமனை சூழலுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன.
"ஈ. ஃபெகாலிஸ் (E. faecalis) என்பது ஒரு சந்தர்ப்பவாத பாக்டீரியா. நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், இது நோயை ஏற்படுத்தும்," என்கிறார் ஃபீல்ட்.
சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இடையிலான குடல் பாக்டீரியாக்களில் உள்ள வேறுபாடுகள், குழந்தை ஒரு வயதை அடையும் நேரத்தில் பெரும்பாலும் சமமாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால், பிறந்த முதல் நாளிலிருந்தே நல்ல நுண்ணுயிரிகள் இருந்தால் குழந்தைகளின் உடல்நலம் சிறப்பாக இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை, ஆய்வாளர்கள் பின்தொடர்ந்து கண்காணித்தனர்.
"பி. லாங்கம் அதிகமாக இருந்த குழந்தைகள், பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளில் சுவாசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, பி. ப்ரீவே அல்லது ஈ. ஃபேகாலிஸ் கொண்ட குழந்தைகளுடன் ஒப்பிடும்போது பாதி அளவே இருந்தது" என்கிறார் ஃபீல்ட்.
அதாவது, பி. லாங்கம் கொண்ட நுண்ணுயிர் அமைப்பு, சுகப் பிரசவத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு சுவாச நோயிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது.
இதனால், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளில் ஆஸ்துமா, ஒவ்வாமை, ஆட்டோ இம்யூன் நோய்கள், உடல் பருமன் போன்ற அழற்சி நோய்களின் அபாயம் சிறிது அதிகரிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
குழந்தையின் குடல் பாக்டீரியா எப்படி அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கக் கூடும் என்பது குறித்துத் தெரியவில்லை, ஆனால் இதுகுறித்துக் கூறப்படும் முன்னணி கோட்பாடு என்னவென்றால், பி. லாங்கம் போன்ற பிஃபிடோபாக்டீரியம் அல்லது லாக்டோபாகிலஸ் எனப்படும் பிற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் , தாய்ப்பாலில் காணப்படும் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் சிக்கலான சர்க்கரைகளை உடைக்க உதவும்.
இந்த சர்க்கரைகள் தாய்ப்பாலின் முக்கிய அங்கமாகும், ஆனால் குழந்தையின் சொந்த நொதிகளால் ஜீரணிக்க முடியாதவை.
ஆனால் பி. லாங்கம் பாக்டீரியா அதை குறு சங்கிலி கொழுப்பு அமிலங்கள்- SCFA (Short Chain Fatty Acids) என்ற மூலக்கூறுகளாக மாற்றுகிறது. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தி, தொற்றுகளை எதிர்க்க உதவுவதாக நம்பப்படுகிறது.
அவை, குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கற்ற தூண்டுதல்களைப் புறக்கணிக்கவும், பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க உதவும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை , அதிகமாக எதிர்வினையாற்றாமல், சமநிலையான மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட முறையில் செயல்பட வழிநடத்துகின்றன.
"மேற்கத்திய நாடுகளில் மக்கள் ஆபத்தான கிருமிகளை அதிகம் எதிர்கொள்வதில்லை. இப்போது அதிகமாகக் காணப்படும் நோய்கள், உடல் மிகை நோயெதிர்ப்பு விளைவை உருவாக்குவதால் தான் ஏற்படுகின்றன".
பிஃபிடோபாக்டீரியம் போன்றவை குடலில் நோய்க்கிருமிகள் வளர்வதைத் தடுக்க உதவும் சூழலை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது .
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் குடல், பெரியவர்களின் குடலைப் போல இல்லாமல், ஆக்ஸிஜன் நிறைந்த (aerobic) சூழலில் இருக்கும்.
இது, குடல் முதன்முறையாக ஊட்டச்சத்துகளை உறிஞ்சத் தொடங்கும் போது அதை ஆதரிப்பதற்காக செயல்படுகிறது.
குழந்தை பிறக்கும்போது, குடல்கள் அமிலத்தன்மை கொண்டவையாகவோ அல்லது காரத்தன்மை கொண்டவையாகவோ இருக்காது (நடுநிலையாக இருக்கும்).

பட மூலாதாரம், Getty Images
"புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பாக்டீரியாக்கள், நடுநிலையான பிஹெச் மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த (aerobic) சூழல்களை விரும்புகின்றன," என்று லீச் கூறுகிறார்.
"ஆனால் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குடலில் உள்ள ஆக்ஸிஜனை விரைவாக பயன்படுத்தி விடுகின்றன. இதனால் குடல் காற்றில்லா (anaerobic) சூழலாக மாறுகிறது, பிஹெச் குறைகிறது. இதன் பிறகு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர முடியாமல் தடுக்கப்படுகின்றன."
ஆனால், இவை எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை விஞ்ஞானிகள் இப்போது தான் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
இதனை விளக்க , "சிசேரியன் பிரசவம் மோசமானது, சுகப் பிரசவம் சிறந்தது என்று எளிமையாக சொல்வது சரியாக இருக்காது," என்கிறார் ஃபீல்ட்.
"சுகப் பிரசவத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் நல்ல நுண்ணுயிரிகளைப் பெறவில்லை. அதேபோல், சிசேரியன் குழந்தைகளுக்கு எப்போதும் மோசமான ஆரோக்கிய விளைவுகள் ஏற்படுவதில்லை."
நுண்ணுயிரி பொறியியல்
இருப்பினும், குழந்தைகளுக்கு (குறிப்பாக சிசேரியனில் பிறக்கும் குழந்தைகளுக்கு) பயனுள்ள நுண்ணுயிர்களை வழங்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை இந்தக் கண்டுபிடிப்பு எழுப்புகிறது.
"சிசேரியன்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன, எனவே காணாமல் போன நுண்ணுயிரியை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் மீண்டும் உருவாக்குவதே எங்கள் பணி" என்று மிஸ்ரா கூறுகிறார்.
ஆனால் எப்படி என்பது தான் எஞ்சியிருக்கும் கேள்வி.
சில சமயங்களில் "பிறப்புறுப்பு விதைப்பு" (vaginal seeding) எனும் முறை ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
இதில், தாயின் பிறப்புறுப்பு திரவத்தை குழந்தையின் தோல் மற்றும் வாயில் தடவி, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் குடலில் வேரூன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.
ஆனால், ஆபத்தான தொற்று நோய்க்கிருமிகளை இது பரப்பக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனென்றால் பல பல பெண்களின் பிறப்புறுப்பில் குரூப்-பி ஸ்ட்ரெப் என்ற கிருமி இருக்கலாம்,
அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம்.
மேலும், 2019இல் செய்யப்பட்ட பேபி பயோம் ஆய்வு, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் தாயின் பிறப்புறுப்பில் இருந்து வரவில்லை என்பதைக் காட்டுகிறது.
மற்றொரு வழி, மல நுண்ணுயிர் மாற்று (faecal microbial transplant).
இதில், தாயின் மலத்தை குழந்தையின் குடலுக்கு மாற்றலாம்.
சிறிய அளவிலான சோதனைகள் நம்பிக்கை தருகின்றன என்றாலும், இது இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை.
"தற்போது, ஒரு தாயின் பிறப்புறுப்பு திரவத்தை அளிப்பது அல்லது மல நுண்ணுயிரியை ஒரு குழந்தைக்குக் கொடுப்பது சரியானது தானா என்பது எங்களுக்குத் தெரியவில்லை, அது நன்மை பயக்காமலும் போகலாம். அதில் நமக்கு இன்னும் புரியாத, தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்" என்கிறார் ஃபீல்ட்.
ஆனால், புரோபயாட்டிக் சப்ளிமெண்ட்ஸ் (probiotics) சில சமயங்களில் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
மிக முன்கூட்டியே பிறந்த அல்லது குறைந்த எடை குழந்தைகளை நெக்ரோடைசிங் என்டரோகொலைட்டிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான குடல் நோயிலிருந்து பாதுகாக்கலாம். மற்ற ஆய்வுகள், இவை முன்கூட்டிய பிரசவ அபாயத்தைக் குறைக்கலாம் என்கின்றன. ஆனால், எந்த பாக்டீரியாவை வழங்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
"ஒரு குழந்தையின் குடல் நுண்ணுயிர் அமைப்பு உருவாகும் செயல்முறையில் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில், மனித தலையீட்டால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதிலோ அல்லது மீட்டெடுப்பதிலோ கவனம் செலுத்த வேண்டும்" என்று லீச் கூறுகிறார்.
மிஸ்ரா வாய்வழி செலுத்தப்படும் புரோபயாட்டிக் நடைமுறை பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் ஒவ்வொரு குழந்தையின் குடலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், முடிவுகள் பரவலாக வேறுபடுகின்றன.
எதிர்காலம், மிகச் சிறப்பான நுண்ணுயிர் அடிப்படையிலான மருத்துவத்தை நோக்கி நகரும் என அவர் கருதுகிறார்.
அது குழந்தையின் மரபியல், உணவுப் பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தப்படும்.
"இதை தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிர் மருத்துவம்' என நினைத்துக் கொள்ளுங்கள்"என்கிறார் மிஸ்ரா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












