எதிர்க்கும் பாஜக அரசு: அசாம் முஸ்லிம் அருங்காட்சியகம் சர்ச்சையில் சிக்கியது ஏன்?

- எழுதியவர், திலீப் குமார் ஷர்மா, அசாம் & சோயா மதின், டெல்லி
- பதவி, பிபிசி செய்தி
தனது மகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திரும்பி வருவதற்காக பல நாட்களாக தாய் மொஹிடன் பீபி காத்திருக்கிறார்.
ஒரு மாதத்துக்கு முன்பு மொஹர் அலி கைது செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான அசாமின் கோல்பாரா மாவட்டத்தின் குக்கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறிய அருங்காட்சியகத்தை அவர் தொடங்கியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள வங்கமொழி பேசும் மியாஸ் முஸ்லிம்களின் கலாசாரத்துக்காக இந்த அருங்காட்சியகம் அர்பணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
உள்ளூர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான அலி, 7000 ரூபாய் செலவழித்து இந்த இடத்தில் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். முக்கியமாக இங்கு சில விவசாய கருவிகள், நெசவு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால், இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் அதிகாரிகள் இந்த அருங்காட்சியகத்தை மூடிவிட்டனர். தவிர அலியின் வீட்டுக்கும் சீலிட்டு விட்டனர். அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இந்த வீடு வணிக நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போலீசார் அலியையும், அவருக்கு அருங்காட்சியகம் அமைக்க உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களுக்கு எதிரான இந்த வழக்கு அருங்காட்சியகத்தோடு தொடர்புடையது அல்ல. மாறாக, அவர்களின் இரண்டு தீவிரவாத குழுக்களுடனான தொடர்புகளுக்காகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் மீதும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுக்கின்றனர். இந்த சட்டப்பிரிவுகள் காரணமாக அவர்களுக்கு ஏறக்குறைய பிணை கிடைப்பது சாத்தியமில்லை.
இந்த கைது நடவடிக்கையானது, அசாமில் உள்ள வங்க மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் திகைப்படைந்ததாக அவர்கள் கூறினர்.
"உண்மையில் என் மகன் செய்த குற்றம் என்ன?" என்று அலியின் தாய் கேட்கிறார். அவருடைய கண்கள் கலங்கியுள்ளன.
அசாமில் முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டுவதற்கான நீண்டகால முயற்சிகளின் விளைவே அண்மைகால கைதுகள் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒரு சிக்கலான மற்றும் பல இனங்களைக் கொண்ட மாநிலமான இங்கு, மொழி அடையாளமும், குடியுரிமையும் மிகப்பெரிய அரசியல் தவறுகளாக இருக்கின்றன.
அசாம் மாநிலமானது, வங்கம், அசாமி மொழி பேசும் இந்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரைக் கொண்டதாக இருக்கிறது. பல தசாப்தங்களாக அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த வெளி ஆட்கள் குடியேற்றத்துக்கு எதிரான பிரசாரங்களைக் காணமுடிகிறது. வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் பெரும்பாலும், ஆவணங்கள் ஏதும் இல்லாமல் குடியேறியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இந்துகள், பழங்குடியினர் ஆகியோர் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, தனது வாக்குத்தளத்தை தக்க வைத்துக்கொள்ள கொள்கைகளை அறிவித்தது. அந்த கொள்கைகள் முஸ்லிம்களை நோக்கிய பாரட்சமான செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் தங்களது பேச்சுக்கள் மூலம் அவர்களை குறிவைத்துத் தாக்குகின்றனர்.
2021ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, பாஜக அரசால் சட்டவிரோத ஆக்கிமிப்புகள் என்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் மூலம் ஆயிரகணக்கானோர் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'அசாம் பூர்வகுடிகள் சமூகத்தினர்' என ஐந்து முஸ்லிம் குழுக்கள் வகைப்படுத்தப்பட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவார்கள் என்ற அச்சத்தை இது எழுப்புவதாக இருக்கிறது.
"வங்கத்தைப் பூர்விகமாக கொண்ட முஸ்லிம்கள் அரசியலின் ஒரு எளிதான தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர்களாக மாறி வருகின்றனர்," என, அந்த சமூகத்தினர் மத்தியில் பணியாற்றும் டாக்டர் ஹபீஸ் அகமது என்ற அறிஞர் கூறுகிறார்.
"மியா சமூக மக்கள் அசாமி சமூகத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று பெரும்பான்மை (மக்கள் தொகையினர்) இனத்தவரிடம் வெளிப்படுத்துவதன் யோசனை என்பது அவர்கள் எதிரிகள் என்று சொல்வதுதான்," என்றார்.
எனினும் மூத்த பா.ஜ.க தலைவர் விஜய் குமார் குப்தா, இதனை மறுக்கிறார். சமூகங்களுக்கு இடையே இன்னொரு தரப்பினர் சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்கின்றனர் என்று சொல்கிறார்.
"ஓர் அருங்காட்சியகம் என்பது ஒரு சமூகத்தின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதுதான். ஆனால், அப்படி ஒன்று எதுவும் இங்கு நடக்கவில்லை," என்றார் அவர்.
தெற்கு ஆசியா முழுவதும் மியா என்ற வார்த்தையானது முஸ்லிம் ஆண்களுக்கு மரியாதை அளிக்கும் வார்த்தையாக உபயோகிக்கப்படுகிறது.
ஆனால், அசாமில் இந்த வார்த்தை இழிவான ஒரு வார்த்தையாக கருதப்படுகிறது. இப்போது வங்கதேசமாக இருக்கும் கிழக்கு வங்கத்தின் பகுதிகளாக இருந்த இடங்களில் இருந்து புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் விவசாயிகளை குறிப்பிடுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. அண்டை நாட்டுடன் 900 கி.மீ நீள எல்லையை அசாம் பகிரந்து கொண்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், பிரம்மபுத்திரா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் தீவுகளாக மாறி வரும் நன்னீர் பகுதிகளில் குடியேறி இருக்கின்றனர். இங்கு இதர சமூகத்தினரை சேர்ந்தோரும் தங்கியிருக்கின்றனர்.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்களாக உள்ளனர். நதியின் மாறும் போக்கை சார்ந்தே அவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் உள்ளது.

தவிர அவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். அசாம் மொழி பேசுவோர் மற்றும் பழங்குடியின மக்களின் வேலைகள், நிலங்கள், கலாசாரத்தை பறித்துக் கொள்ள வந்த ஊடுருவல்காரர்கள் என்றும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றனர்.
ஆனால் பல ஆண்டுகளாக, வங்கமொழி பேசும் முஸ்லிம் சமூகத்தில் பலர் தங்கள் வரலாற்றை ஏற்றுக்கொண்டனர், மேலும் மியா என்ற வார்த்தையை தங்கள் அடையாளத்தின் தனித்துவமான அடையாளமாக மீட்டெடுக்க முயன்றனர்.
கோல்பாராவில் உள்ள மியா அருங்காட்சியகம் ஒரு சிறிய அறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான விவசாயக் கருவிகள், மூங்கிலால் செய்யப்பட்ட மீன்பிடி சாதனம் மற்றும் அசாமின் பாரம்பரியமான 'கமுசா' எனும் கையால் நெய்த ஆடை ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் மியா மக்களின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என அலி கூறுகிறார்.
சமூகத்தினரிடையே பிரிவினையை அவர் உருவாக்குகிறார் என்று பல பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அசாமியர்களை அடையாடப்படுத்துவதாக இந்த கலைப்பொருட்கள் உள்ளன. வங்கமொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை அடையாளப்படுத்துவதாக இல்லை என்று சொல்கின்றனர்.
அருங்காட்சியம் சீல் வைக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பேசிய முதலமைச்சர் சர்மா, மியா என்று அழைக்கப்படும் பெயரில் ஏதேனும் சமூகம் உள்ளதா? என்று கேட்டார்.
இதுபோன்ற ஒரு முக்கிய கலாசார மையமாக அருங்காட்சியகம் அமைக்கப்படுவதற்கான யோசனை, மியா சமூகத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ் தலைவர் ஷெர்மன் அலி அகமதுவால் கடந்த 2020ஆம் ஆண்டு முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது சர்மாவின் அரசாங்கத்திடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.

அதற்கும் முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு , மியா பாடல் என்று அழைக்கப்பட்ட கடுமையான உணர்வுகளைக் கொண்ட எதிர்ப்புக் கவிதைகளை அசாமி மொழிக்கு பதிலாக மியா சமூகத்தின் பேச்சுவழக்கில் எழுதியதாக சில கவிஞர்கள் பிரச்னையில் சிக்கினர். அவர்களில் பத்து பேர் மீது, மத அடிப்படையில் மக்களுக்கு இடையே விரோதத்தை வளர்ப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பிபிசியிடம் பேசிய ஷெர்மன் அலி அகமது, அரசு அளித்த வீட்டில் அலி ஓர் அருங்காட்சியகம் திறந்தது அவரது உரிமை என்று நான் கருதவில்லை. ஆனால், இந்த தண்டனை மிகையான ஒன்று என்றார்.
"அவர் எந்த ஒரு பெரிய குற்றத்திலும் ஈடுபடவில்லை. ஆனால், சமூகத்தை பயமுறுத்தியதாக அவருக்கு எதிராகவும் பிறர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது," என்று கூறினார்.
"புலம்பெயர்ந்தவர்களிடம் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்று நீண்ட காலமாக அஞ்சும் அசாம் மாநிலத்தின் மக்கள்தொகையினரிடம் நிலவும் சிக்கலைப் பயன்படுத்திக் கொள்ளவும், அசாமிய மக்களின் கவலைகளில் விளையாடவும். சூழ்நிலையில் பிரிவினை ஏற்படுத்தவும் அரசாங்கம் முயல்கிறது," என அறிஞர் அகமது கூறினார்.
இதற்கிடையே, இந்த கைதுகளால் அலியின் கிராமம் சலசலப்பில் உள்ளது. மேலும் சிக்கல்கள் வரும் என்பதால், பெரும்பாலான மக்கள் அருங்காட்சியகத்தைப் பற்றி பேசவே மறுக்கின்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பிறர் கூறுகின்றனர். " எங்களுக்கு அருங்காட்சியகம் தேவையில்லை. எங்களுக்கு வேலை, சாலைகள், மின்சாரம் ஆகியவைதான் தேவை," என்கிறார் அங்கு வசிக்கும் ஷாகீத் அலி என்பவர்.
அருங்காட்சியகம் என்பது பயனற்றது என்பது தனது சொந்த கருத்தாக இருந்தபோதிலும், இந்த சமூகத்துக்கு தங்களின் கலாசாரத்தை பாதுகாக்க உரிமை உள்ளது என்று டாக்டர் அகமது கூறினார்.
"பல வருட இடையூறுகளுக்குப் பிறகு, மியா முஸ்லிம்கள் தங்களுக்கான நற்பெயரை நிறுவ முயற்சிக்கின்றனர்," என்று அவர் கூறுகிறார்.
"ஒரு சமூகம் அதன் கலாசாரம் இல்லாமல் எப்படி நீடித்திருக்கும்?"
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








