முன்பு காண்டாமிருக வேட்டைக்காரர்கள், இன்று பாதுகாவலர்கள்: அதிரடி மாற்றம் நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதாஞ்சலி கிருஷ்ணா & சாலி ஹோவர்ட்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
வட இந்தியாவின் ஒரு காட்டுப் பகுதியில், இன ரீதியிலான மோதலுக்குள் சிக்கியிருந்த இனக் குழு ஒன்றுக்கு அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் காண்டாமிருகம் காரணமாக இருந்துள்ளது.
2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று நள்ளிரவில் அந்த அழைப்பு வந்தது. காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து 400 கி.மீ தொலைவில் அசாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டிருந்த பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இரண்டும், அந்தக் காட்டுப் பகுதியின் வெளிப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நிகழக்கூடிய எந்தவொரு மோதலும் அங்கு காண்டாமிருகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு அழிவாக அமைந்துவிட்டிருக்கக்கூடும்
"500-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் காண்டாமிருகங்களைப் பார்க்க கூடியிருந்ததைப் பார்த்தபோது என் இதயம் படபடத்தது," என்று அந்த இரண்டு காண்டாமிருகங்களையும் கண்காணித்துக் கொண்டிருந்த இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் இளம் காண்டாமிருக ஆராய்ச்சியாளராக இருந்த தேபா குமார் தத்தா நினைவு கூர்ந்தார்.
தத்தா அருகில் நெருங்கி, கிராம மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தார். "அந்த உயிரினம் மங்களகரமானது என்று மக்கள் நம்பியதால், அவற்றின் சாணத்தைச் சேகரித்தார்கள்," என்று அவர் நினைவு கூறினார். அந்தப் பொழுதில், ஒவ்வொரு காண்டாமிருகத்தின் காலடித் தடத்தையும் மூங்கில் குச்சிகளால் அடையாளப்படுத்துவதைப் பார்த்தபோது, மானஸ் வெட்டவெளியை மீண்டும் காடாக மாற்றுவது வெறும் கனவல்ல என்பதை உணர்ந்தார். மனித-காட்டுயிர் மோதல் ஏற்படுமோ என்று அவர் அஞ்சினார். ஆனால், கிராம மக்கள் காண்டாமிருகத்தின் இருப்பை அவர் எதிர்பார்க்காத வகையில் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், அங்கு நிலைமை எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
கொந்தளிப்பு நிறைந்த கடந்த கால வரலாறு
அசாமின் போடா தொல்குடி மக்கள், பூடானின் அடிவாரத்திற்குக் கீழே பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையிலுள்ள காடுகளில் வாழ்கின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வேறுபட்டு இருந்த அவர்களின், போடோலாந்து என்ற தனி மாநிலத்திற்கான கோரிக்கை 1980-களின் பிற்பகுதியில் ஆயுதப் போராட்டமாக மாறியது.
போடோலாந்து விடுதலை புலிகள் மற்றும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி போன்ற ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுவினர் மனாஸ் காட்டுப் பகுதியில் ஒளிந்துகொண்டனர்.
"காட்டுப் பாதுகாப்பு, வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அனைத்தும் செயலற்றுவிட்டன. காடுகளை அழித்தல் மற்றும் வேட்டையாடுதல் ஆகியவை மட்டுமே ஒரே வாழ்வாதாரமாக மாறியது," என்று உள்ளூர் பாதுகாப்பு அமைப்பான நியூ ஹொரைசனின் செயலாளர் மகேஷ் மோஷாஹரி நினைவு கூர்கிறார்.
மனாஸில் இருந்த 100 காண்டாமிருகங்களும் அழிந்துவிட்டன. யானை, கரடி மற்றும் சிறுத்தை ஆகியவற்றின் எண்ணிக்கையும் அங்கு கணிசமாகக் குறைந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் நுழைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1992-இல் ஆபத்திலுள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் ஒரே பகுதியாக மனாஸ் இருந்தது. 2003-அம் ஆண்டில், இந்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் போடோலாந்து தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றுடன் நடந்த முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக, போடோலாந்து வட்டாரக் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
"மனாஸின் அழிவுக்கு முழு உலகமும் போடோ மக்களைக் குற்றம் சாட்டியதால் நாங்கள் அவமானமாக உணர்ந்தோம், குற்ற உணர்ச்சியோடு இருந்தோம். மனாஸை அதன் முந்தைய பெருமைக்கு மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் எங்கள் சொந்த இனப் பெருமையின் மறுமலர்ச்சியுடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தது," என்று 54 வயதான கம்ப போர்கோயரி நினைவு கூர்ந்தார். இவர், அந்த நேரத்தில் போடோலாந்து தன்னாட்சிப் பகுதியின் துணை முதல்வராகவும் காடுகள் மற்றும் கல்விக்குப் பொறுப்பான அமைச்சராகவும் இருந்தவர்.
போடோ பழங்குடிகள்தான் உண்மையான ஹீரோக்கள்
2006-ஆம் ஆண்டில், விவேக் மேனன் மனாஸில் பிக்மி பன்றிகளைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு ராஜ நாகத்தை அங்குப் பார்க்க நேர்ந்தது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் உலகின் மிக நீளமான நச்சுப் பாம்புக்கு மனாஸ் வாழ்விடமாக இருப்பது, அந்தப் பகுதியை மீண்டும் மீட்டுருவாக்குவதற்கான ஊக்கத்தை அவருக்கு அளித்தது.
அந்தக் காடு மற்றும் புல்வெளியில் இல்லாமல் போன உயிரினங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவர் உணர்ந்தார்.
விவேக் மேனன் மற்றும் கூட்டுப் பணியாளர்கள், உள்ளூர் மக்களுக்கு காடுசாராத வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் காடுகளைப் பாதுகாக்கவும் காண்டாமிருகங்கள், யானைகள், சதுப்புநில மான்கள், சிறுத்தை மற்றும் காட்டெருமைகள் ஆகியவற்றை மீண்டும் அங்குக் கொண்டுவருவதற்கான சமூக அடிப்படையிலான பாதுகாப்பு திட்டங்களைத் தொடங்கினார்.

பட மூலாதாரம், Rajib Bordoloi/IFAW-WTI
கிழக்கே 250 மைல் தொலைவிலுள்ள காசிரங்காவில் உள்ள காட்டுயிர் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட நிராதராவக இருந்த காண்டாமிருக கன்றுகள் மற்றும் கருங்கரடி குட்டிகள் மனாஸில் விடுவிக்கப்பட்டன.
அதேநேரத்தில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் நன்கு வளர்ந்த காண்டாமிருகங்களை அசாமின் பிற பகுதிகளிலிருந்து மனாஸுக்கு மாற்றத் தொடங்கியது. இருப்பினும், மனாஸ் பகுதி மீட்டுருவாக்கப்படுவதில் பங்களித்த உண்மையான ஹீரோக்கள் போடோ பழங்குடி மக்கள் தான்.
"மனாஸ் எங்கள் தாய். அது தலைமுறை, தலைமுறையாக உணவு, தண்ணீர், விறகு ஆகியவற்றைக் கொடுத்து எங்களைத் தாங்கி வருகிறது. அதன் அழிவுக்கு நாங்கள் காரணமாக இருக்கலாம் என்றாலும், அதன் மறுமலர்ச்சிக்கும் நாங்கள் பொறுப்பாக இருக்க விரும்பினோம்," என்று போர்கோயரி கூறுகிறார்.
இந்த முயற்சியின்போது, அங்கிருந்த மக்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை வழங்குவதே முதல் பணியாக இருந்தது. 35 வயதான உள்ளூர் ராதிகா ரே, தனது கிராமத்தில் உள்ள பெண்கள் எரிபொருள், காடு சார் பொருட்கள் மற்றும் இறைச்சிக்காக காட்டை நம்பியிருந்ததை நினைவு கூர்ந்தார். இப்போது அப்படி இல்லை, பெண்கள் உள்ளூர் ஆடைகள், டோகோனா, சால்வைகள், துண்டுகள் மற்றும் பலவற்றை உள்ளூர் சந்தைகளில் வாங்கும் பட்டு மற்றும் பருத்தியிலிருந்து நெசவு செய்து விற்கிறார்கள்.
"காடுகளுடனான எங்கள் தலைமுறையின் பந்தம் அசைக்க முடியாதது. ஆனால் இப்போது, என் சமூகத்தில் உள்ள பல பெண்களைப் போலவே, நானும் நெசவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறேன், மேலும் நாங்கள் உயிர்வாழ காட்டின் வளங்களை இழக்க வேண்டிய அவசியமில்லை," என்று ராதிகா ரே கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வேட்டைக்குப் பிறகான வாழ்க்கை
இந்த முயற்சிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், போடோலாந்து தன்னாட்சிப் பகுதி மற்றும் பிற அமைப்புகள் இணைந்து, 400-க்கும் மேற்பட்ட வேட்டைக்காரர்களை மாதாந்திர உதவித் தொகை வழங்குவதன் மூலம் காடுகளின் பாதுகாவலர்களாக மாற்றியுள்ளன.
மகேஷ்வர் பாசுமதி, அன்புடன் ஒன்டாய் (உள்ளூர் மொழியில் பாறை என்று அர்த்தம்) என்றழைக்கப்படுபவர். இப்போது மனாஸில் விருது பெற்ற விலங்கு பராமரிப்பாளர். அவரும் 1980-களில் வேட்டைக்காரராக இருந்தார்.
பாசுமதி 2005-ஆம் ஆண்டில் உள்ளூர் நிர்வாக அதிகாரியிடம் தனது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, கிரேட்டர் மனாஸ் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டு நிராதரவான சிறுத்தை குட்டிகளின் மறுவாழ்வுக்கு உதவத் தொடங்கினார்.
அதிலிருந்து, அவர் வேட்டையாடுபவர்களைப் பிடிக்கவும் சட்டவிரோத பொருட்களைப் பறிமுதல் செய்யவும் காட்டுயிர் கணக்கெடுப்புகளை நடத்தவும் மனாஸில் நிராதரவாக இருக்கும் காண்டாமிருக கன்றுகளைப் பராமரிக்கவும் உதவுகிறார்.
"என் சொந்த குழந்தைகளைப் போலவே, பல காண்டாமிருக கன்றுகள் மற்றும் பிற காட்டுயிர் குட்டிகளுக்கு உணவளித்துள்ளேன். அவற்றில் சில, இப்போது வெற்றிகரமாகத் தங்களுடைய சொந்த குட்டிகளை ஈன்றுள்ளதைக் கண்டு பெருமிதமாக உள்ளது. நாம் காப்பாற்றும் ஒவ்வோர் உயிரினமும் அதன் வாழ்விடத்தை வளப்படுத்துகிறது," என்று கூறுகிறார், ஒன்டாய் என்று அன்புடன் அழைக்கப்படும் மகேஷ்வர் பாசுமதி.
முன்பு காண்டாமிருகங்களை வேட்டையாடியவர்களுக்கு உதவிய மனிதர் இன்று, அதே உயிரினங்களை பாதுகாத்து காட்டை வளப்படுத்துவதில் பங்கு வகிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"மனாஸ் என் வீடு"
இன்னும் பல பழைய வேட்டைக்காரர்கள் மனாஸை சுற்றி வளர்ந்த பல உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளில் இணைந்து, அசாம் வனத்துறையுடன் தன்னார்வ ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மனாஸ் மாஜிஜென்ட்ரி சுற்றுச்சூழல் சுற்றுலா சங்கத்தின் பொதுச் செயலாளர், ருஸ்டம் பாசுமதாரி, "அவர்களுடைய கண்காணிப்பு திறன்கள் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனாஸ் ஒரு நிலையான சுற்றுலா தலமாக மாற வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம். ஆகவே அதன் பாதுகாப்பில் உள்ளூர் மக்கள் அதிகப் பங்கு வகிக்கிறார்கள்," எனக் கூறியுள்ளார்.
2003-ஆம் ஆண்டில் போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில், மனாஸ் அதன் காண்டாமிருகங்கள் மற்றும் சதுப்பு நில மான்களின் மொத்த எண்ணிக்கையையும் இழந்திருந்தது. 2021-ஆம் ஆண்டில், மனாஸ் 52 காண்டாமிருகங்கள், 48 புலிகள், 1,000-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள், பிக்மி பன்றிகள் போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் வாழ்விடமாக மாறியது.
இதற்கிடையே, அதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் மக்களில் ஒருவரான ஒன்டாய், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் காட்டிற்குள் விடுவிக்கப்பட்ட 3 காண்டாமிருக கன்றுகளைக் கண்காணிக்க, தனது தொலைநோக்கி மற்றும் கண்காணிப்புக் கருவியுடன் கொட்டும் மழையில் காட்டிற்குள் செல்கிறார்.
அவர் கூறுகிறார்: "மனாஸ் என் வீடு. அது செழித்தால் நாங்கள் செழிக்கிறோம். அது இல்லாமல் போனால், நாங்களும் இல்லாமலே போவோம்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













