உணவுக்காக சண்டையிடும் மக்கள்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பாகிஸ்தான் தொடர்பான பல வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலான வீடியோக்களில் மக்கள் கோதுமை மாவு மற்றும் ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.
பாகிஸ்தானின் பொருளாதார அவல நிலை மற்றும் விலைவாசி உயர்வின் அளவைக் காட்ட இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
வீடியோவில் சில நிபுணர்களின் கருத்துகளும் வைரலாகி வருகின்றன. இதேபோன்ற கருத்தை அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியர் முக்தர் கானும் கூறியுள்ளார். பேராசிரியர் முக்தர் கான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகன்.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகார சமநிலையின்மை பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்திருந்தால், நீங்கள் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்கியிருப்பீர்கள்” என்று முக்தர் கான் ஒரு பாகிஸ்தான் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.
“அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவிட்டது. இப்போது அமெரிக்காவின் ஆர்வம் பாகிஸ்தான் மீது இல்லை. அமெரிக்கா பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இனி பாகிஸ்தானை அது நம்ப முடியாது. இந்த ஆண்டு பாகிஸ்தான் இரண்டு போர்களை சந்திக்க வேண்டும். ஒன்று TTP (தெஹ்ரீக் -இ -தாலிபன் பாகிஸ்தான்) உடன் போராட வேண்டும். TTP இன் புதிய வரைபடத்தை பார்த்தால், அதில் PoK உள்ளது. தற்போது பாகிஸ்தான் சிக்கலில் உள்ளது. ஆனால் இந்தியா அதை மேலும் சிக்கலில் ஆழ்த்த முயற்சிக்கவில்லை,” என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஃபக்ர் யூசுப்சாயிடம் முக்தர் கான் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடன் மற்றும் சில உதவிகளைப் பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது. வெள்ளப் பெருக்கு சிக்கலில் இருந்து மீள்வதற்கு 9 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவி, திங்களன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த நன்கொடையாளர்கள் மாநாட்டில் பாகிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கருவூலம் வேகமாக காலியாகி வரும் நிலையில், இந்த செய்தி பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. பாகிஸ்தானிடம் சுமார் நாலரை பில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணி கையிருப்பே மீதமுள்ளது. அது சில வாரங்களின் இறக்குமதி செலவுக்கு மட்டுமே போதுமானது. இது தவிர பாகிஸ்தானுக்கு பல கடன்களை திருப்பிச்செலுத்தும் பொறுப்புகளும் உள்ளன. ஜெனீவா மாநாட்டில் 9 பில்லியன் டாலர் திரட்டியதை ஹாபாஸ் ஷெரீப் அரசு தனது சாதனையாக காட்டி வருகிறது.
'செளதியின் உதவியால் நிலைமை சீராகாது'

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக செவ்வாயன்று பாகிஸ்தானின் பழைய கடன் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக செளதி அரேபியா தெரிவித்தது. செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு வழங்கிய பழைய மூன்று பில்லியன் டாலர் கடனை ஐந்து பில்லியன் டாலராக உயர்த்துவதோடு கூடவே முதலீட்டை அதிகரிப்பது பற்றியும் பேசியுள்ளது.
இது தவிர அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் பிற அமைப்புகளிடமிருந்து 8.7 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடனாகப் பெறப்படுமா அல்லது மானியமாக கொடுக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஜெனீவாவில் பாகிஸ்தானின் காலநிலை குறித்த ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குமாறு இந்த மாநாட்டில் ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது. ஐ.நா மற்றும் பாகிஸ்தானின் முறையீட்டின் பேரில் பல அரசுகள், அமைப்புகள் மற்றும் மக்கள், 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவிக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளனர்.
மத்திய வங்கியில் 4.5 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு

பட மூலாதாரம், Getty Images
"ஜெனீவா மாநாட்டில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 9 பில்லியன் டாலர்களை திரட்டுவதில் வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,”என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ் ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளேடான ’டான்’ சமீபத்திய நிகழ்வுகள் குறித்து ஜனவரி 11 ஆம் தேதி ஒரு தலையங்கம் எழுதியுள்ளது.
டான் தனது தலையங்கக் குறிப்பில், "இங்குள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துவிட்டது போல அரசு அதிகாரிகள் பெருமிதம் கொள்கிறார்கள். இதனால் பாகிஸ்தானின் டாலர் தட்டுப்பாடு முடிவுக்கு வரப்போவதில்லை என்பதே உண்மை,” என்று எழுதியுள்ளது.
பாகிஸ்தானின் மத்திய வங்கியான எஸ்பிபியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 4.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த தொகை நான்கு வாரங்களுக்கும் குறைவான இறக்குமதி செலவை சமாளிக்க மட்டுமே போதுமானது. பாகிஸ்தானுக்கு அவசரமாக டாலர் தேவைப்படுகிறது. சர்வதேச செலாவணி நிதியத்துடனான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் இறுதி செய்யாத வரை, ஜெனீவா மாநாடு மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து உதவி கிடைப்பது கடினம்.
கவலையளிக்கும் நிலை

பட மூலாதாரம், Getty Images
"ஐஎம்எஃப் ஒப்பந்தத்திற்காக பொருளாதார சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்படக்கூடாது என்று பிரதமர் விரும்புகிறார். இந்த சீர்திருத்தங்கள் - ஒற்றை சந்தை அடிப்படையிலான மாற்று விகிதம், மின் கட்டணம் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்பு. IMF நிதி மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில உறுதியான உதவிகளை வழங்க பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள நெருக்கடி இந்தக் கடன்கள், உதவிகள் மூலம் உறுதிமொழிகள் மூலம் தீர்க்கப்படும் என்று தோன்றவில்லை,” என்று டான் எழுதியுள்ளது.
"ஜெனீவா மாநாட்டில் எட்டு பில்லியன் டாலர்களை திரட்ட ஷாபாஸ் ஷெரீப் இலக்கு நிர்ணயித்திருந்தார். ஆனால் அதை விட அதிகமாக தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பிரச்னைக்கு தீர்வல்ல. பாகிஸ்தான் நீண்ட கால பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் டான் நாளேட்டின் தலையங்கம் கூறுகிறது.
ஜெனீவா மாநாடு, செளதி அரேபியா மற்றும் பிற அமைப்புகள் உறுதி கூறியுள்ள உதவி குறித்து பாகிஸ்தானிய சமூக ஊடகங்கள் விவாதித்து வருகின்றன.
பாகிஸ்தானின் பொருளாதார கட்டுரையாளர் ஃபாரூக் சலீம், கபரியா சேனல் பப்ளிக் நியூஸின் விவாத நிகழ்ச்சியில், "பாகிஸ்தானிடம் நாலரை பில்லியன் டாலர்கள் உள்ளது. அது 20 நாட்களுக்கு மேல் நீடிக்காது. இது மிகவும் ஆபத்தான நிலை. பாகிஸ்தானை யாரேனும் காப்பாற்ற முடியும் என்றால் அது சர்வதேச நாணய நிதியம் தான் என்று நான் நினைக்கிறேன். செளதி அரேபியாவிலிருந்து பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம்,” என்று கூறியுள்ளார்.
அதிகரிக்கும் விலைவாசி
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ருபாயின் மதிப்பு 240 ரூபாய். எரிபொருளில் இருந்து உணவு பொருட்கள் வரை எல்லா பொருட்களின் விலையும் வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.
பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 240 ரூபாயாக உள்ளது. எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க, சந்தைகள், மால்கள் மற்றும் திருமண மண்டபங்களை முன்கூட்டியே மூட பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களை இரவு 8.30 மணிக்குள் மூட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் கடந்த வாரம் கூறியிருந்தார். அதேநேரம் இரவு 10 மணிக்குள் திருமண மண்டபங்கள் மூடப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறாயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் என்கிறார் குவாஜா ஆசிப்.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு டாலர்கள் கடத்தப்படுவதாகவும், இதனால் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வெளிநாட்டு நாணய டீலர் ஒருவர் கூறுகிறார்.
"ஒவ்வொரு மாதமும் இரண்டு பில்லியன் டாலர்கள், அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு செல்கிறது. ஆப்கான் கடப்பு வர்த்தகம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எல்லா எல்லைகளில் இருந்தும் கடத்தல் நடக்கிறது. இதனால் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு நேரடியாக பாதிக்கப்படுகிறது," என்று கடந்த மாதம் பாகிஸ்தானின் எக்ஸ்சேஞ்ச் கம்பெனிகள் சங்கத்தின் தலைவர் மாலிக் போஸ்தான் கூறினார்.
1965 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆப்கான் கடப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை ஆப்கானிஸ்தான் பயன்படுத்திக்கொள்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












