குஜராத் தேர்தல்: பாஜக தலைவர்களின் கருத்துக்கு பாகிஸ்தான் கூறிய பதில் என்ன?

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA
2002ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பாஜக தலைவர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்தில் பாஜக தலைமையின் நேரடித் தலையீட்டை, இந்தக் கருத்து உறுதிப்படுத்துவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2002 குஜராத் கலவரத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷங்கர் சிங் வகேலாவின் சமீபத்திய அறிக்கை, பாகிஸ்தானின் நீண்ட கால நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கும், வன்முறையைத் தூண்டியதற்கும் அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசுதான் பொறுப்பு என்று பாகிஸ்தான் நீண்ட காலமாக கூறி வருகிறது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டதாகவும், பாஜக எடுத்த தீர்க்கமான நடவடிக்கையால் குஜராத்தில் நிரந்தர அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை குறிவைத்து மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த மாபெரும் குற்றத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக செய்தது கண்டிக்கத்தக்கது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இந்த சோக சம்பவம் நடந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும், தனது பிளவுபடுத்தும் கொள்கைகளின் கீழ் அதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள பாஜக முயற்சிப்பது வருத்தமளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் கீழ் இந்தியா தனது சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை நடத்தும் விதம் பாரபட்சமானது, அவமானகரமானது, வெறுப்பு மற்றும் வன்முறை நிறைந்தது என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.
அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதிக்கு 2002 கலவரத்தில் எந்தப்பங்கும் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கி, 11 மனுக்களை தள்ளுபடி செய்தது.
அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) ஒரு மனுவும் அடங்கும். 2002 குஜராத் கலவரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது என்று பாகிஸ்தான் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தற்போதைய இந்தியப் பிரதமர் 2014-ஆம் ஆண்டு வரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது என்ற உண்மை மறுப்பதற்கில்லை என்றும் குஜராத் முதல்வராக இருந்தபோது மனித உரிமைகள் தொடர்பான அவரது செயல்பாடு மோசமாக இருந்ததே இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் இயங்குகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையில், கோத்ரா சம்பவம் மற்றும் குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க, சுதந்திரமான விசாரணை கமிஷனை அமைக்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளது.
சர்வதேச சமூகம் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் இஸ்லாமோஃபோபியா( முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு) பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.
ஷங்கர் சிங் வாகேலாவும் அமித் ஷாவும் சொன்னது என்ன?

பட மூலாதாரம், NURPHOTO
சில நாட்களுக்கு முன் கோத்ராவை பற்றி பேசிய குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷங்கர் சிங் வாகேலா, கோத்ரா வன்முறை நடக்காமல் இருந்திருந்தால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்காது என்று கூறியிருந்தார்.
கோத்ராவில் கலவரம் நடக்கவில்லை என்றால், ரயில் பெட்டி எரிக்கப்படவில்லை என்றால், அப்போது ராஜதர்மம் பின்பற்றப்பட்டிருந்தால், பாஜக ஆட்சிக்கு வரும் பேச்சுக்கே இடமில்லை. குஜராத்தில், பாதுகாவலர்களே வேட்டையாடுபவர்கள் ஆனார்கள் என்று நியூஸ்லாண்ட்ரிக்கு அளித்த நேர்காணலில் ஷங்கர் சிங் வாகேலா குறிப்பிட்டார்.
2002 கலவரத்திற்குப் பிறகு அடல் பிஹாரி வாஜ்பாய் நரேந்திர மோதியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். ஆனால் அத்வானி பிடிவாதமாக இருந்தார் என்று சமீபத்தில் பிபிசி உடனான உரையாடலில் ஷங்கர் சிங் வாகேலா கூறியிருந்தார்.
“2002 ஏப்ரலில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மோதியை குஜராத் முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வாஜ்பாய் முடிவெடுத்தார். ஆனால் அத்வானி இதற்கு தயாராக இல்லை. 2016ல் அத்வானியின் மனைவி கமலா அவர்கள் காலமானபோது நான் அவரை சந்திக்கச் சென்றேன். கோவாவில் நீங்கள்தான் மோதியை காப்பாற்றினீர்கள். ஆனால் கட்சியில் உங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என்று நான் அவரிடம் கூறினேன். அத்வானி எதுவும் பேசாமல் அழ ஆரம்பித்தார்,” என்று வாகேலா தெரிவித்தார்.
மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேடாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியின்போது, 2002 குஜராத் கலவரத்தை குறிப்பிட்டார்.
2002ல் நரேந்திர மோதி ஆட்சிக்காலத்தில் கலவரத்தை தூண்ட முயற்சி நடந்தது. 2002க்கு பிறகு இப்போது 2022 வந்துவிட்டபோதிலும் யாரும் தலையை தூக்கமுடியாதபடி அப்போது பாடம் புகட்டப்பட்டது. கலவரக்காரர்கள் குஜராத்திற்கு வெளியே சென்றுவிட்டனர். பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் அமைதியை நிலைநாட்டியது. ஊரடங்கு இல்லாத மாநிலமாக அதை மாற்ற பாஜக பாடுபட்டது. காங்கிரஸ் இருந்தபோது அடிக்கடி மதக்கலவரங்கள் நடந்தன,” என்று அந்தப்பேரணியில் அமித்ஷா குறிப்பிட்டார்.
2002 இல் என்ன நடந்தது?
2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் சபர்மதி விரைவு ரயிலின் S-6 பெட்டியில் தீ பிடித்தது. அதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியிலிருந்து அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இதையடுத்து குஜராத் முழுவதும் கடுமையான கலவரம் பரவியது.

பட மூலாதாரம், AMY VITALE
குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் உயிரிழந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 223 பேர் காணாமல் போயுள்ளனர், 2500 பேர் காயமடைந்தனர். இது தவிர கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாயின.
நரேந்திர மோதி, குஜராத் கலவரம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
2002ல் குஜராத்தில் கலவரம் நடந்தபோது, அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோதி இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் பரவலான வன்முறைகள் நடந்ததாகவும், இந்த வன்முறைக்கு அரசு ஆதரவளித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது எஸ்ஐடி அவரிடம் நீண்ட காலம் விசாரணை நடத்தியது. ஆனால் இறுதியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு க்ளீன் சிட் கிடைத்தது.
குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்பி எஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை உச்சநீதிமன்றம் ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.

பட மூலாதாரம், DIPAM BACHECH
2002 குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதி உட்பட 59 பேருக்கு எந்தப்பங்கும் இல்லை என்று எஸ்ஐடி தெரிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
”குஜராத் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து தெரியவருகிறது,” என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் அமித் ஷா கூறியிருந்தார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பிரதமர் மோதி மீது சுமத்தப்பட்டிருந்த எல்லா குற்றச்சாட்டுகளையும் நீக்கிவிட்டது என்று அமித்ஷா கூறினார்.
"பிரதமர் மோதியிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் எந்த எதிர்ப்பு ஆர்பாட்டமும் இருக்கவில்லை. நாங்கள் நீதி வழங்கும் நடைமுறையை ஆதரித்தோம். நானும் கைது செய்யப்பட்டேன், ஆனால் எந்த போராட்டமும் இருக்கவில்லை" என்று அமித் ஷா கூறினார்.
கலவரங்கள் நடந்தன, அதில் முதல்வர் மோதிக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எல்லாமே தெளிவாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
"கலவரங்கள் நடந்தன, அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் மாநில அரசு கலவரத்தை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கலவரம் தூண்டுதலின் பேரில் நடந்தது. முதல்வர்கூட இதில் சம்ம்மந்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.”
”ஆனால், அமைதி காக்கும்படி முதல்வர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். கலவரத்தை தடுக்க மாநில அரசு சாத்தியமான அளவு முயற்சி செய்தது என்பதை இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது,” என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA
"குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் இன்று அதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அப்படி நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது," என்றார்அவர்.
“ பிரதமர் மோதி இந்த வேதனையை அனுபவித்ததை மிக அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். நீதித்துறை நடவடிக்கைகள் நடந்துவரும் நிலையில், என் பக்கம் உண்மை இருக்கும்போதிலும் நான் எதுவும் பேச மாட்டேன்’ என்ற உறுதிப்பாட்டை அவர் கொண்டிருந்தார். மிகவும் வலிமையான ஒரு மனிதரால் மட்டுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க முடியும். "
குஜராத் கலவரத்தின் போது தாமதமாக நடவடிக்கைகள் எடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, ”குஜராத் அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் எந்தத் தாமதமும் செய்யவில்லை. குஜராத் பந்த் அறிவிக்கப்பட்ட அன்றே நாங்கள் ராணுவத்தை அழைத்தோம்,” என்றார்.
குஜராத் கலவரத்திற்கு கோத்ரா சம்பவமே காரணம் என்று அமித்ஷா கூறினார்.
கோத்ரா ரயில்பெட்டி எரிப்புதான் கலவரத்திற்கு முக்கிய காரணம் . இதன் காரணமாக கலவரங்கள் மூண்டன. பின்னர் நடந்த கலவரங்கள் அரசியல் தூண்டுதலால் நிகழ்ந்தவை என்று அமித் ஷா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









