ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: செளதி, கத்தார் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MOHSEN KARIMI/AFP via Getty
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை ஆப்கானிஸ்தான் தாக்கியது. இந்த வாரம் காபூலில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காபூல் குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், இதற்கான "விளைவுகள்" குறித்து பாகிஸ்தான் ராணுவத்தை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதற்கு பாகிஸ்தான் தெளிவான பதில் எதையும் வழங்கவில்லை.
சனிக்கிழமை இரவு இரு நாட்டு எல்லைப் பகுதிகளின் பல இடங்களில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளையும் மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து "எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல்" எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு "முழு பலத்துடன்" பதிலடி கொடுத்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
மூன்று பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியதாக தாலிபன் படைகள் கூறிய நிலையில், தங்கள் பாதுகாப்பு படைகள் பல ஆப்கானிய புறக்காவல் நிலையங்களை அழித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் ராணுவம் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் துருப்புக்கள் மீது பெரிய அளவிலான பதிலடித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் தொடர்பாக பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. இருப்பினும், தற்போது இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், பாகிஸ்தான் இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றும் தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையிலான இந்த மோதல்களுக்கு பிற நாடுகளும் எதிர்வினையாற்றியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் குறித்து செளதி அரேபியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் சிக்கல்களை நிதானத்துடன் அணுகி, பதற்றங்களைத் தணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ள கத்தார், இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இரு தரப்பையும் வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Elke Scholiers/Getty
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பிபிசியிடம் என்ன சொன்னார்கள்?
ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணம், தென்கிழக்கு கோஸ்ட், பாக்டியா மற்றும் தெற்கு ஹெல்மண்ட் ஆகிய இடங்களில் துரந்த் எல்லைக்கோட்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
தாலிபன் படைகள் மாலையில் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பலுசிஸ்தானில் உள்ள அங்கூர் அட்டா, பஜௌர், குர்ரம், தீர், சித்ரால் மற்றும் பலூசிஸ்தானின் பாரம் சாஹ் போன்ற இடங்களில் ஆப்கானியப் படைகள் எந்தவித காரணமும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது.
எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் குர்ரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பிபிசி பேசியபோது, இரு தரப்பிலிருந்தும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடைபெறுவதாகவும், இதுவரை இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், @Spa_Eng
செளதி அரேபியா மற்றும் கத்தாரின் எதிர்வினைகள்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள செளதி அரேபியா வெளியுறவு அமைச்சகம், இந்த விவகாரத்தை கவலையுடன் கண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பதற்றங்களைத் தணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ராஜ்ஜிய தீர்வை நாட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அண்மையில் செளதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் மோதல்கள், பிராந்தியத்தின் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தனது கவலையை கத்தார் தெரிவித்துள்ளது.
பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய பாதையை ஏற்றுக்கொள்ளுமாறு கத்தார் வெளியுறவு அமைச்சகம் இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், X/@MoDAfghanistan2
வெள்ளிக்கிழமை, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசின் பாதுகாப்பு அமைச்சகம், பாகிஸ்தான் தனது வான்வெளியை மீறி காபூல் உட்பட இரண்டு இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலைமை மேலும் பதற்றமடைந்தால், அதன் விளைவுகளுக்கு பாகிஸ்தான் ராணுவமே பொறுப்பேற்க வேண்டும் என்று தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பெஷாவரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த மோதல் குறித்து கேட்டபோது, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் செளத்ரி தெளிவான பதில் எதையும் கூறவில்லை என்று பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.
"பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், தொடர்ந்து எடுக்கப்படும்" என்று மட்டுமே அவர் கூறினார்.

தாலிபன் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை குறித்து பாகிஸ்தான் என்ன கூறியது?
மறுபுறம், இந்தியாவிற்கு வந்துள்ள தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் அறிக்கைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
"பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னை என்ற ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் கூற்றை பாகிஸ்தான் நிராகரிக்கிறது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் ஆப்கானிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாதக் கூறுகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் பலமுறை பகிர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தான் மீது சுமத்துவதன் மூலம், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அதன் கடமைகளிலிருந்து ஆப்கானிஸ்தானின் அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ''தீவிரவாதிகளுக்கு'' ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாகவும், அவர்கள் ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது.
அதேசமயம், தற்போது இந்தியாவில் இருக்கும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் முத்தக்கி, தனது நாட்டில் ஒரு தீவிரவாத அமைப்பு கூட இல்லை என்று கூறினார்.
"தீவிரவாதிகளில் ஒருவர் கூட ஆப்கானிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குல நிலம் கூட இப்போது அவர்களின் (தீவிரவாதிகளின்) கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கினோம், இப்போது அங்கு அப்படிப்பட்ட யாரும் இல்லை." என முத்தக்கி கூறினார்
"அமைதிக்காக, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்ததுபோல், பிற நாடுகளும் செயல்பட வேண்டும்" என்று முத்தக்கி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












