பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திரா; தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், FACEBOOK / YSJAGAN
- எழுதியவர், சுஜாதா
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று உடனடியாக தடையாணை பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை தமிழ்நாடு விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? கீழ்பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு செயல்படுகிறதா? தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? இந்த பிரச்னையின் பின்னணி என்ன?
கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கி.மீ. தொலைவு ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவும் பாய்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகமாக, 222 கி.மீ. தொலைவு பாலாறு பாய்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்றினால் பயன்பெறுகின்றன. விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய `நீர் எழுத்து` புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகள் பாலாற்றின் முக்கியத்துவத்தை விளக்கும்.
அதில், "பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின்கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும் நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியோ கால்வாய் (California Aquaduct) நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு இலவசமாக வடிவமைத்துத் தந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
எதிர்க்கும் தமிழ்நாடு
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்றில் சிறியதும் பெரியதுமாக 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இப்போது 23-வது தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி ஒதுக்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற பகுதியில்தான் தற்போது 22 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வைகோ தன் அறிக்கையில், "ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892-ம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையேயான நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது. எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை தெரிவித்துள்ள வேல்முருகன், "எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
பேச்சுவார்த்தையில் தொய்வு
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், "தடுப்பணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஆந்திர அரசு பகுதியில் கொண்டு சென்ற விஷயத்தை அறிந்த தமிழக பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இடைக்காலத் தடை வாங்கிய பிறகும் ஆந்திர அரசு வனப்பகுதியில் மேலும் 10 தடுப்பணைகளை கட்டியுள்ளது" என்றார்.
மேலும், இதுதொடர்பாக பாமகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த உத்தரவில், இரு மாநில அரசுகளும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியது. "பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு இதுவரை மேற்கொண்டதில்லை. தமிழக அரசை சார்ந்த அதிகாரிகளும் ஆந்திர அரசை சார்ந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. அதிமுக, திமுக அரசு இரண்டுமே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை" என்றார் அசோகன்.
ராமாதாஸும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். "உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்த பிரச்னையை இப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, "ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளை என்ன செய்வது? அவற்றை இடிக்க சொல்கிறீர்களா?" என்று கேட்டதாக அசோகன் குறிப்பிடுகிறார்.
புதிய தடுப்பணை கட்டாதவாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"தமிழகமும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்"
இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த விவசாயி வடிவேலு சுப்பிரமணியம், "ஆந்திர அரசுக்கு தடுப்பணை கட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் நீராதாரத்தை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து தடுப்பணைகளை கட்டி வருகின்றனர்" என்றார்.
தடுப்பணை பிரச்னை தவிர்த்து, தோல் மற்றும் சாக்கடை கழிவுகளும் பாலாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்திருப்பதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். பாலாற்றில் மணல் அள்ளுவதும் தொடர் பிரச்னையாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
"மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குப்பம் கணேசபுரத்தில் யானை வழித்தடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அரசாணை வாங்கி தடுத்து நிறுத்தினார். இதற்கான வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. அதையும் மீறி ஆந்திரா அரசு கட்டுவது சட்டத்தை மீறிய செயல்" என்றார்.
தமிழ்நாட்டுப் பகுதியிலும் சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுதொடர்பாக, திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், "நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆந்திர அரசு எதுவும் செய்யக்கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்" என்றார்.
அனைத்து நதிகளினுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கைகளில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












