36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய இந்தியாவை கில்-ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராஞ்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து டெஸ்ட் தொடரை வென்றது.
டெஸ்ட் தொடர் வெற்றி
2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்து இருந்தது. 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்த அறிமுக வீரர் ஜூரெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய பேட்டர்கள் தடுமாற்றம்
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் சேர்த்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 192 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
3-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மா 24, ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் சேர்த்த நிலையில், ரூட் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
4வது நாளில் ஆடுகளம் மந்தமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி ரூட், பசீர், ஹார்ட்லி மூலம் நெருக்கடி கொடுத்தது. ஆடுகளம் மிகவும் மோசமானதால், பேட்டரின் முழங்காலுக்கு மேல் பந்து எழும்பவில்லை. இதனால் இந்திய பேட்டர்கள் பந்தை எதிர்கொண்டு விளையாட சிரமப்பட்டனர்.
அடுத்துவந்த சுப்மான் கில், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். வேகமாக ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா 69 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹார்ட்லி பந்துவீச்சில் ரோஹித் சர்மா 55 ரன்கள் சேர்த்து போக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ஓரளவுக்கு வேகமாகச்சென்றது. அவர் ஆட்டமிழந்தபின் ரன்களும் வருவதும் கடினமாக இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறியது.
36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் பசீர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 4 டெஸ்ட் போட்டிகளாக பட்டிதாருக்கு வாய்ப்பு தரப்பட்டும், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்துவந்த ஜடேஜா 4 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் பசீர் சுழலிலும் சிக்கி வெளியேறினர். 99 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய 20 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆட்டம் மெல்ல இங்கிலாந்து கைகளுக்கு மாறுவதுபோல் இருந்தது.
இந்திய அணியை கில்-ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி?
ஆனால், 6-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில்லுடன், ஜூரெல் இணை சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணி அளித்த நெருக்கடியை இருவரும் சமாளித்து பேட் செய்தனர்.
இருவரின் பேட்டிலிருந்து ரன்கள் பெரிதாக வரவில்லை என்றாலும், விக்கெட்டை இழந்துவிட்டால் அடுத்ததாக நிலைத்து ஆட பேட்டர்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டதால், தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். பொறுமையாக பேட் செய்த சுப்மான் கில் 122 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இருவரையும் பிரிக்க இங்கிலாந்து சழற்பந்துவீச்சாளர்கள் கடினமாக முயன்றும் முடியவில்லை. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இ்ந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஆட்டத்தின் திருப்புமுனை!
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சேர்த்த 40 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரும் சேர்த்த அந்த ரன்கள் இந்திய அணியின் பேட்டர்களின் சுமையையும், நெருக்கடியையும் குறைத்தது. ஒருவேளை குறைவான ரன்களைச் சேர்த்து, விக்கெட்டையும் இழந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு இன்று மாறியிருக்கக் கூடும்.
தவறவிட்ட இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளராக மெக்கலம் ஆகியோர் வந்தபின் இழக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஹைதராபாத் டெஸ்ட் வெற்றிக்குப்பின், டெஸ்ட் தொடரை வெல்லவும் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை பயன்படுத்தவில்லை. தொடர்ந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் இல்லை.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சோயிப் பசீர், டாம் ஹார்ட்லி இருவரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இருவரும் இளம் வீரர்களாக இருந்தாலும், பந்துவீச்சில் பெரிய அளவிலான முதிர்ச்சி தென்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் வலுவாக இருந்தது.
ஆனால், பசீர், ஹார்ட்லி இருவரின் சுழற்பந்துவீச்சால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. சிறப்பாகப் பந்துவீசிய பசீர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வெற்றி நாயகர்கள்

பட மூலாதாரம், Getty Images
அதேபோல இந்திய அணியின் வெற்றிக்கு 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் யாதவின் பந்துவீச்சும், முதல் இன்னிங்ஸில் ஜூரெல் சேர்த்த 90 ரன்களும் முக்கியமானவை. அதிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து தடுமாறியது.
அப்போது அறிமுக வீரராக ஜூரெல், குல்தீப் யாதவுடன் சேர்ந்து சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது மிகப்பெரிய பணி. அதிலும் டெய்ல் எண்டரான குல்தீப் யாதவை வைத்துக்கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜூரெல் இந்திய அணியை மீட்டது அற்புதமான பேட்டிங்கிற்கு சான்றாகும்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தவுடன், தனது பேட்டிங்கில் கியரை மாற்றி அதிரடிக்கு மாறி இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவினார். முதல் போட்டியிலேயே சதத்தை நெருங்கிய ஜூரெல் 10 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்கில் இந்திய அணி கவுரமான ஸ்கோரைப் பெறுவதற்கு ஜூரெல் பேட்டிங் முக்கியமாகும்.
2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் ஆகிய இருவரின் மாயஜாலப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வெற்றி இலக்கு இந்திய அணிக்கு இலகுவானது.
இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது இல்லை என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது.
சவாலான டெஸ்ட் போட்டி
வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ மிகவும் கடினமான டெஸ்ட் தொடராக இருக்கிறது. ஏராளமான சவால்களைச் சந்தித்தோம். அதற்கு அமைதியாக பதிலடியும் கொடுத்துள்ளோம். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வந்துள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
பெரிய சவாலுக்கு நன்றாக பதில் அளித்தனர். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம். அவர்களின் ஸ்டைலில் பேட்டிங் செய்யவும் அனுமதித்தோம். ஜூரெல் அமைதியாக விளையாடி அனைத்து ஷாட்களையும் ஆடினார். அவரின் 90 ரன்கள் முக்கியமானவை.
முக்கிய வீரர்களை இந்த நேரத்தில் இழப்பது வேதனைதான். இருந்தாலும் குழுவாக சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் இடத்தை நிரப்புவது கடினம்தான். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் வெல்ல முயல்கிறோம், சிறந்த டெஸ்ட் தொடராக இதை மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
'முடிவைப் பற்றி கவலை இல்லை'

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ சிறந்த டெஸ்ட் போட்டி. ஸ்கோர் பெரிதாக இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல் பந்துவீசினர்.
இருப்பினும் பெரிதாக பெருமைப்பட முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஆடுகளம் 4வது நாளான இன்று மாறும் என எதிர்பார்த்தோம். அப்படி எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை.
ஜோ ரூட் அற்புதமான பேட்டர். அவர் மீதான விமர்சனம் நியாயமற்றது. பசீரின் பந்துவீச்சைப் பார்த்து பெருமைப்படுகிறேன். முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், நம்முடைய முழுப் பங்களிப்பை மட்டும் வழங்குவோம் என வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












