தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அமைச்சர்களை வளைக்கும் வழக்குகள் - திமுக என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமலாக்கத் துறை சோதனைகள் ஒருபுறமிருக்க, நீதிமன்றங்களிலும் தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது தி.மு.க.?

ஐ.பெரியசாமி மீதான வழக்கு என்ன?

தற்போதுள்ள தி.மு.க. அரசில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்துவரும் நிலையில், அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான முறைகேடு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்துவந்தார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான சி. கணேசன் என்பவர் வீட்டு வசதி வாரியத்திற்கு மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தான் ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாகவும் அதற்கு பெரிய அளவில் வாடகை செலுத்திவருவதால் தனக்கு வீட்டு மனை ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். அவருடைய மனு 2008ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 'குறையற்ற, நேர்மையான' அரசு அதிகாரி என்ற வகையில் சென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு மனை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு மார்ச் 10ஆம் தேதியே அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், அவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு ஒன்றில் 1,180 ரூபாய் வாடகைக்கு குடியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், X/IPERIYASAMY MLA

சிறப்பு நீதிமன்றத்தால் ஐ.பெரியசாமி விடுவிப்பு

2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சபாநாயகர் பி. தனபால் இது தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி அளித்தார். ஆனால், இந்த வழக்கிற்கு ஆளுநர்தான் அனுமதி தர வேண்டுமே தவிர, சபாநாயகர் அல்ல என்றும் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டு தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஐ. பெரியசாமி வழக்குத் தொடர்ந்தார்.

எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2016 ஜூலை 6ஆம் தேதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. 2022 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றமும் டிசம்பரில் உச்சநீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதிசெய்தன. 2023 பிப்ரவரி 21ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தொடர்ந்தார் ஐ. பெரியசாமி. அந்த வழக்கில் தன் மீதான வழக்கிற்கு ஆளுநரே அனுமதி அளிக்க வேண்டும் என்று மீண்டும் வாதத்தை முன்வைத்தார் ஐ. பெரியசாமி. இந்த முறை இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்து 2023 மார்ச் 17ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images

வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போது அமைச்சரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், இதுபோன்ற வழக்குகளில் போதுமான காரணங்கள் இல்லையென விசாரணை நீதிமன்றம் கருதினால், வழக்கை ரத்து செய்ய அந்நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என வாதாடினார். அமைச்சர் விதிமுறைகளின்படியே வீட்டு மனையை ஒதுக்கீடு செய்திருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் கூறினார். இதுபோன்ற சிறப்பு நீதிமன்றங்களின் விடுவிப்பு உத்தரவை உச்ச நீதிமன்றம் பல முறை அங்கீகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட மூவர் மீதான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை தினமும் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். யாராவது வழக்கை இழுத்தடிக்க முயற்சி செய்தால் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை அவ்வப்போது சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், PONMUDI

அமைச்சர்களை வளைக்கும் வழக்குகள்

கடந்த சில மாதங்களில் மத்திய சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளின் மூலம் பின்னடைவைச் சந்திக்கும் மூன்றாவது தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி. இதற்கு முன்பாக, மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் பெற்றுக்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார். தற்போதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக, சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிபோனது.

இதுதவிர, தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முடித்துக்கொள்ள முடிவுசெய்ததை எதிர்த்து, வழக்கை விசாரிக்கிறது நீதிமன்றம். பொன்முடி வழக்கைப் பொறுத்தவரை, அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கை விசாரிக்கிறது நீதிமன்றம்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்குகளில், ஆட்சி மாற்றத்தின் பிறகு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்ததால்தான், வழக்குகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை அப்படி முடிவு செய்தது சரியா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் முடிவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சரியா என்பதையும் தான் விசாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஆனந்த் வெங்கடேஷ்.

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், @THANGAMTHENNARASU TWITTER

திமுகவுக்கு எந்த அளவுக்கு நெருக்கடி தரும்?

இதுபோல வழக்குகள் வரிசை கட்டுவது தி.மு.கவை எந்த அளவுக்கு எந்த அளவுக்கு நெருக்கடியை அளிக்கும்?

"கண்டிப்பாக தி.மு.கவுக்கு இது மிகப் பெரிய நெருக்கடிதான். பொதுவாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளில் இல்லாத பல விஷயங்கள் இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளன. வழக்கில் தாமதம் செய்தால், ரிமாண்ட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் பிணையாக செலுத்த வேண்டும் சொல்லப்பட்டுள்ளது. இதுபோல கேள்விப்பட்டதில்லை.

மற்றொரு பக்கம், தங்கள் மீது நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்ததை எதிர்த்து தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவு செல்லாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மீதான வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வதெனத் தெரியவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

ஆனால், இது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை நிச்சயம் பாதிக்காது என்கிறார் அவர். "தமிழ்நாட்டில் வழக்குகளில் சிக்கியவர்களை எம்.எல்.ஏக்களாகவும் முதலமைச்சராகவுமே மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் தேர்தல் முடிவுகளைச் சுத்தமாகப் பாதிக்காது" என்கிறார் அவர்.

தமிழ்நாடு - திமுக என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், FB/STALIN

திமுக என்ன செய்யப் போகிறது?

இதுபோன்ற விவகாரங்களால் தி.மு.கவின் பெயரைக் கெடுக்க முடியாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டீன்.

"இந்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் முதன்முதலில் எடுத்துக்கொண்ட போதே, அதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. Seen என்று மட்டும்தான் எழுதியிருந்தார். இருந்த போதும் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பட்டியலிடப்பட்டன. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான் இவரே விசாரிக்கும்படி கூறப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவ்வளவு அவசரத்துடன் இந்த வழக்குகளை ஏன் எடுத்துக்கொண்டனர்?

ஒரு பக்கம் அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் தி.மு.கவைக் குறிவைக்கின்றன. இன்னொரு பக்கம் நீதிமன்றமும் இதில் ஈடுபடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து கொண்டு தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்ற பிம்பத்தை கட்டியெழுப்ப நினைக்கிறார்கள்.

ஆனால், தமிழக மக்கள் மிகுந்த அரசியல் கொண்டவர்கள். எதிர்பாராமல் சில விஷயங்களைப் புரிந்துகொள்வார்கள். 2011ல் இருந்து 2021வரை தி.மு.க. ஆட்சியில் இல்லை. எங்கள் மீது தவறு இருந்திருந்தால் அந்தப் பத்தாண்டுகளில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடவடிக்கை எடுத்திருக்கலாமே? 2014ல் ஆட்சிக்கு வந்த அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாமே?

பா.ஜ.க.வைப் பொருத்தவரை காங்கிரசிற்குப் பிறகு தி.மு.கவைப் பார்த்துத்தான் மிகவும் பயப்படுகிறார்கள். ஒரு நடவடிக்கையை யார் எடுக்கிறார்கள் என்பதை வைத்தே அதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். இதனால் எல்லாம் தி.மு.கவின் பெயரைக் கெடுக்க முடியாது. 2019ல் 39 இடங்களில் ஒரு இடத்தை தி.மு.க இழந்தது. இந்த முறை 39 இடங்களையும் தி.மு.க. பிடிக்கும்" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

தி.மு.க. அமைச்சர்கள் மீது மட்டுமல்லாமல் இதே காரணங்களுக்காக அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் வளர்மதி மீதான வழக்கிற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)