இலங்கையை வீழ்த்திய வங்கதேசத்தின் புது ஆயுதம் - த்ரில் ஆட்டத்தில் திருப்பம் தந்த சிக்ஸர்கள்

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமீப காலமாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்குமோ அதற்கும் சற்று குறையாத ஆர்வம் வங்கதேசம்-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கும் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை-வங்கதேசம் மோதிக்கொண்டாலே களத்தில் ஏதாவது ஸ்வாரஸ்ய சம்பவங்கள் நடக்கும். நாகி டான்ஸ், கேலிப் பேச்சுகள், போட்டியில் இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங் முதல் கிண்டல் வரை ஆவேசமாக நடந்து கொள்வார்கள் என்பதாலேயே ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

அந்த வகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இலங்கை - வங்கதேசத்துக்கு இடையிலான ஆட்டத்திலும் கடைசி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆட்டம் நகர்ந்தது.

டல்லாஸ் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் டி பிரிவில் நடந்த 15-வது ஆட்டத்தில் இலங்கை அணியை வங்கதேசம் எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியை 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம். 125ரன்கள் எனும் எளிதான இலக்கை துரத்திய வங்கதேசம் 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியை இதுவரை வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாற்றை வங்கதேசம் மாற்றி எழுதி, இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘ஸ்லோ-பால்’ எனும் ஆயுதம்

வங்கதேசத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். குறிப்பாக முஸ்தபிசுர் ரஹ்மான், சுழற்பந்துவீச்சாளர் ரிசாத் ஹூசைன், தஸ்கின் அகமது ஆகியோர் சேர்ந்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

இதில் ரிசாத் ஹூசைன் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாலாஸ் ஆடுகளம் மெதுவானது என்பதைப் புரிந்து கொண்டு அதிகமான ஸ்லோவர் பந்துகளை முஸ்தபசுர் வீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டார். அதேபோல ரிசாத் ஹூசைன் பந்துவீச்சில் பந்து மெதுவாக வந்தது இலங்கை பேட்டர்களுக்கு தலைவலியாக இருந்தது.

பேட்டிங்கில் வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையில் நடுவரிசை பேட்டர்கள் லிட்டன் தாஸ்(30) ஹிர்தாய்(40) அமைத்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை உறுதி செய்தது. திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் இலங்கை பக்கம் படிப்படியாக நகர்ந்த நிலையில் அனுபவ வீரர் மெகமதுல்லா அடித்த சிக்சரும் நிதான ஆட்டமும் வெற்றியை உறுதி செய்தன.

இலங்கை ஏன் தோற்றது?

இலங்கை அணியைப் பொருத்தவரை 124 ரன்களை வைத்துக் கொண்டு அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. பேட்டிங்கில் நிசங்காவை(47) தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. 100 ரன்கள் வரை இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அடுத்த 25 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பால் எனும் ஆயுதத்தை கையில் எடுத்ததால் இலங்கை பேட்டர்களால் நினைத்த ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ஒவ்வொரு பேட்டரும் கிராஸ்பேட் போட்டு அடிக்க முற்பட்டு தங்களின் இயலாமையை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இலங்கை அணி 124 ரன்கள் சேர்த்ததில் பெரும்பங்கு தொடக்க ஆட்டக்காரர் நிசங்காதான். 28 பந்துகளில் நிசங்கா 47 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 167 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும்கூட நிசாங்காதான் ஓரளவுக்கு பேட் செய்து இரட்டை இலக்க ரன் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் நிசாங்கா களத்தில் இருந்த வரை இலங்கையின் ரன்ரேட் 7 என்ற அளவில் நல்ல நிலையி்ல் இருந்தது. 9-வது ஓவரில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் நிசாங்கா ஆட்டமிழந்த பின்புதான் இலங்கையின் சரிவு தொடங்கியது.

அடுத்த 54 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இலங்கை அணி மளமளவென இழந்தது. தனஞ்செய டி சில்வா(21), சரித் அசலங்கா(19), மேத்யூஸ்(16), குஷால் மென்டிஸ்(10) ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவகையில் பெரும்பாலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

17-வது ஓவரிலிருந்து 20 ஓவர் வரை ஒவருக்கு ஒரு விக்கெட் வீதம் இலங்கை அணி இழந்தது. இலங்கை பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் 12 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தனர். கடைசி 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே இலங்கை பேட்டர்கள் அடித்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பெரும்பாலான பந்துகள் ஸ்லோவர் பால், கட்டர்களை வீசியதால் அதை அடிக்க முற்பட்டு இலங்கை பேட்டர்கள் ஏமாந்தனர். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்துக்கு சென்ற இலங்கை பேட்டர்கள் கிராஸ்போட்டு காட்டடிக்கு முயன்ற போது, விக்கெட்டை இழக்கத் தொடங்கினர்.

வங்கதேசத்தை காப்பாற்றிய ஹிர்தாய், தாஸ்

வங்கதேசம் அணி குறைந்த இலக்கை துரத்திய போது, இலங்கை பந்துவீச்சாளர்களும் அவர்களை ரன் சேர்க்க விடாமல் நெருக்கடி ஏற்படுத்தினர். முதல் ஓவரிலேயே சவுமியா சர்க்காரை டக்அவுட்டில் வெளியேற்றினார் டி சில்வா. பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் தன்சித் ஹூசைன், கேப்டன் சான்டோவை ஆட்டமிழக்கச் செய்து துஷாரா நெருக்கடி ஏற்படுத்தினார்.

திருப்புமுனை சிக்ஸர்கள்

4வது விக்கெட்டுக்கு ஹிர்தாய், லிட்டன் தாஸ் கூட்டணி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிலும் 12வது ஓவர் வரை ரன்ரேட் மந்தமாக இருந்தது. ஆனால், ஹசரங்கா வீசிய 12வது ஓவரில் ஹிர்தாய் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தை புரட்டிப்போட்டது. ஹிர்தாய் அடித்த 4 சிக்ஸர்களும் ஹசரங்கா பந்துவீச்சில் அடிக்கப்பட்டவை. இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். லிட்டன் தாஸ்(36), ஹிர்தாய்(40) ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 5 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹசனும் 8 ரன்னில் ஆட்டமிழக்கவே வங்கதேசம் பதற்றமடைந்தது. துஷாரா வீசிய 18-வது ஓவரில் ரிசாத் ஹூசைன், தஸ்கின் அகமது அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்த போது ஆட்டம் திடீரென இலங்கை கரங்களுக்கு மாறியது.

2 ஓவர்களில் 11 ரன்கள் வங்கதேச வெற்றிக்குத் தேவைப்பட்டது. சனகா வீசிய 19-வது ஓவரில் அனுபவ வீரர் மெகமதுல்ல சிக்ஸர் விளாசவே பதற்றம் தணிந்தது. அதன்பின் 2 சிங்கிள்கள், ஒரு வைட் என 3 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரிலேயே இலங்கை வீரர்களின் மோசமான பீல்டிங் காரணமாக, ஓவர்த்ரோவில் 2 ரன்களைப் பெற்று வங்கதேசம் எளிதாக வென்றது.

பேட்டர்களை சாடிய இலங்கை கேப்டன்

இலங்கை கேப்டன் ஹசரங்கா கூறுகையில் “ எங்களின் பேட்டர்கள் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பேட் செய்தனர். நடுப்பகுதி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. எங்களின் பந்துவீச்சுதான் எங்கள் பலம் என்பது எங்களுக்குத் தெரியும்.

150 ரன்களுக்கு மேல் குவித்திருந்தால் நிச்சயம் எங்கள் பந்துவீ்ச்சால் வென்றிருப்போம். கடந்த 2 போட்டிகளிலும் பேட்டர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்விஅடைந்துவிட்டோம். பந்துவீச்சாளர்கள் பணியை சிறப்பாகச் செய்துவிட்டனர்” என்று தெரிவித்தார்

"120 சதவீதம் பங்களித்தோம்"

வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சான்டோ கூறுகையில் “ ஒவ்வொருவரின் உடல்மொழியும் சிறப்பாக இருந்தது, 120 சதவீதம் பங்களிப்பு செய்தோம். கடந்த 15 நாட்களாக திட்டமிட்டோம்,அனைத்து வீரர்களும் தங்களின் பங்களிப்பு சிறப்பாகச் செய்தனர். இலங்கை அணியும் நன்றாக பந்துவீசியது, ஆனால் இந்த விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. லிட்டன் தாஸ் தடுமாறி வந்தாலும் இந்த ஆட்டத்தில் அவரின் பங்களிப்பு சிறப்பானது. ஹிர்தாய் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்”எ னத் தெரிவித்தார்.

இலங்கை வெளியேறுமா?

வங்கதேசம் அணி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்கியுள்ளது. இலங்கையை வென்றதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 0.379 என்று 3-வது இடத்தில் இருக்கிறது.

இலங்கை அணிக்கு இது 2வது தோல்வியாகும். இதனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் இலங்கை வென்றாலும் கூட சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வது கடினமாகும். நேபாளத்தையும், நெதர்லாந்தை வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக இலங்கை காத்திருக்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)