வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு அரசியல் சக்தி வலுவடைகிறதா? - ஜமாத் அமைப்பின் கூட்டணி வியூகம்

பட மூலாதாரம், @BJI_Official
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் ஷேக் ஹசினாவை ஆட்சியிலிருந்து அகற்ற தொடங்கிய இயக்கத்தை வழிநடத்தியவர்கள், இந்த ஆண்டு பிப்ரவரியில் 'தேசிய குடிமக்கள் கட்சி' (என்சிபி) என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்கள்.
தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) வங்கதேசத்தில் மாற்று அரசியல் பற்றிப் பேசி வருகிறது. ஆனால் அதன் விமர்சகர்கள் இதனை ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் 'பி டீம்' என்று அழைத்தனர்.
என்சிபி தலைவர்கள் இந்திய அரசின் கொள்கைகளை பகிரங்கமாக விமர்சித்து வந்துள்ளனர். கடந்த 11 மாதங்களில், இந்தியாவுக்கு எதிராகப் பேசும் ஒரு கட்சியாகவும் என்சிபி பெயர் பெற்றுள்ளது.
தற்போது, தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக என்சிபி அறிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், என்சிபி என்பது ஜமாத்தின் 'பி டீம்' என்ற வாதம் வலுப்பெற்றுள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராக இருந்தது. வங்கதேசத்தின் சுதந்திரத்தையே எதிர்த்த அந்த அமைப்புடன் இணைந்து தற்போது என்சிபி தேர்தலைச் சந்திக்கப் போவதாக தெரியவந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், என்சிபியின் தெற்கு தலைமை அமைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா, வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான 'செவன் சிஸ்டர்ஸ்' தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை கூட்டாக 'செவன் சிஸ்டர்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
செவன் சிஸ்டர்ஸ் மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, டாக்காவில் உள்ள இந்திய தூதரை வெளியேற்ற வேண்டும் என்று ஹஸ்னத் அப்துல்லா கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், வங்கதேசத்தின் மதச்சார்பற்ற மற்றும் தாராளவாத பிம்பத்தைப் பேண வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த மாணவர் இயக்கத் தலைவர்கள், தீவிர கருத்துக்களை கொண்ட ஜமாத் அமைப்புடன் கூட்டணி அமைத்திருப்பதை, ஜமாத்-இ-இஸ்லாமிக்கு கிடைத்த வெற்றியாகவே சில விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
என்சிபி குறித்து ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
ஜமாத் - என்சிபி இடையிலான கூட்டணி குறித்து இந்தியாவிலும் விவாதிக்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தியாவின் உத்தி விவகாரங்கள் ஆய்வாளர் பிரம்மா செல்லானி எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.
அதில், "வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கம் வன்முறை மூலம் அகற்றப்பட்டபோது, இஸ்லாமிய சக்திகள், குறிப்பாக ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர் பிரிவு, தெருப் போராட்டங்களை கணிசமாக வலுப்படுத்தியது. இப்போது, அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்களால் வழிநடத்தப்படும் என்சிபி கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமியுடன் முறைப்படி கூட்டணி அமைத்துள்ளது" என்று கூறியிருந்தார்.
"இரண்டாவது பெரிய கூட்டணியை வழிநடத்தும் வங்கதேச தேசியவாதக் கட்சியும்(பிஎன்பி), இஸ்லாமிய சக்திகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. பிஎன்பி கட்சி 'ஜமியத் உலமா-இ-இஸ்லாம்' அமைப்புடன் கூட்டணி வைத்துள்ளது," என்றும் செல்லானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நாட்டின் மிகப்பெரிய மற்றும் மதச்சார்பற்ற கட்சியாகக் கருதப்படும் அவாமி லீக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி தேர்தல் இப்போது இரண்டு இஸ்லாமிய சார்பு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக மாறியுள்ளது. இது வங்கதேசத்தின் ஸ்தாபக அடிப்படைக் கொள்கைகளிலிருந்து ஒரு முக்கியமான மற்றும் அடையாள மாற்றத்தைக் குறிக்கிறது"என்றும் அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தி இந்து நாளிதழின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.
அதில், "என்சிபி கட்சி உருவாக்கப்பட்ட நேரத்தில், அதன் தலைவர்கள் தங்களை வங்கதேசத்தின் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு நடுநிலையான மற்றும் சீர்திருத்தவாத மாற்றாக முன்வைத்தனர்."
"ஆனால் இப்போது அதே கட்சி, வங்கதேசத்தின் விடுதலைப் போரை எதிர்த்த மற்றும் 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய அதே ஜமாத்-இ-இஸ்லாமி சக்திகளுடன் முறைப்படி கூட்டணி சேர்ந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஜமாத் அமைப்புடன் கூட்டணி அமைக்கும் முடிவு என்சிபி-க்குள் பிளவுகளை ஆழப்படுத்துவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கட்சியின் இரண்டு முக்கியப் பெண் தலைவர்கள் உட்பட பல தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

பட மூலாதாரம், @ChiefAdviserGoB
வங்கதேச அரசியல் குறித்து சர்வதேச ஊடகங்களுக்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர் மொபாஷிர் ஹசன், என்சிபியின் எதிர்காலம் அதன் இந்திய எதிர்ப்புப் பிரசாரம் எவ்வளவு தூரம் தொடர்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கிறார்.
இருப்பினும், தேர்தல் உடன்பாடு இரு கட்சிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
வங்தேசத்தில் வளர்ந்து வரும் இந்திய எதிர்ப்பு உணர்வே என்சிபி-ஜமாத் ஒற்றுமைக்கு ஒரு காரணம் என்று ஹசன் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
"இது வெற்றி பெறுமா இல்லையா என்பதை காலம் தான் வெளிப்படுத்தும்."என்றார்.
இருப்பினும், டாக்கா பல்கலைக்கழக பேராசிரியர் ஷமீம் ரெசா, கூட்டணியில் என்சிபி சேர்ந்திருப்பது ஜமாத்திற்கு ஓரளவுக்குப் பலன் அளித்துள்ளதாகக் கருதுகிறார். ஏனெனில் என்சிபியின் பிம்பம் ஜமாத் முகாமுக்கு வெளியேயுள்ள வாக்குகளை ஈர்க்க உதவும்.
தொடர்ந்து பேசிய அவர், ''ஜமாத் உடனான கூட்டணியால் என்சிபி நிச்சயமாக சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று பிபிசி வங்க சேவையிடம் கூறினார்.

பட மூலாதாரம், Monira Sharmin/Facebook
எதிர்ப்பு ஏன்?
சனிக்கிழமையன்று, ஜமாத் அமைப்புடன் எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் வைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, என்சிபி கட்சியின் மத்தியக் குழுவைச் சேர்ந்த 30 தலைவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நாகித் இஸ்லாமிற்கு கடிதம் எழுதினர்.
பிபிசி வங்க சேவையின் செய்தியின்படி, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் காதர், நாகித் இஸ்லாம் 'மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்' என்று தனது முகநூல் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
"இளைஞர் அரசியலுக்கான கல்லறை தோண்டப்பட்டு வருகிறது. என்சிபி இறுதியாக ஜமாத் அமைப்புடன் நேரடி கூட்டணி அமைக்கிறது. ஒரு சில தலைவர்களின் நலன்களுக்காக, நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நசுக்கி, இந்த தற்கொலை முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்"என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தையின் போது ஜமாத் தரப்பிலிருந்து அதிக சலுகைகள் அல்லது பலன்கள் கிடைக்கும் என்ற உறுதிமொழியின் காரணமாக, என்சிபி-யின் உயர்மட்டத் தலைமை அவர்களுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான 'தி டெய்லி ஸ்டார்', ஆய்வாளரும் எழுத்தாளருமான மொஹியுதீன் அகமதுவை மேற்கோள் காட்டி, "என்சிபி 'அரசு அதிகாரத்தை மையமாகக் கொண்ட அரசியலை' செய்கிறது மற்றும் சூழ்நிலை சாதகமாக இருக்கும் இடமெல்லாம் கூட்டணி அமைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இத்தகைய கூட்டணி தேர்தலுக்குப் பிறகு நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் அகமது கூறியுள்ளார்.
மற்றொரு ஆய்வாளரான அல்தாஃப் பர்வேஸ், "என்சிபி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதற்குள் வலதுசாரி சார்பு இருந்து வருகிறது. இரண்டாவதாக, இடைக்கால அரசாங்கத்தின் தோல்விகளுக்கு என்சிபி-யும் ஒரு காரணம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனெனில், இந்த அரசாங்கம் மாணவர்களால் நியமிக்கப்பட்டது என்று அரசாங்கத்தின் தலைவரே கூறியுள்ளார். மேலும், பல ஆலோசகர்கள் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற கருத்தும் மக்களிடையே பரவலாக உள்ளது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நன்மை என்ன?
இந்தக் கூட்டணி ஜமாத் அமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அல்தாஃப் பர்வேஸ் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் அதன் 84 ஆண்டுகால வரலாற்றில் ஜமாத் இவ்வளவு பெரிய உளவியல் ரீதியிலான வெற்றியைப் பெறுவது இதுவே முதல் முறை. மக்கள் எழுச்சியை வழிநடத்திய ஒட்டுமொத்த சக்தியையும் அது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது"என்றார்.
"இதன் விளைவாக, தான் ஒரு ஷரியா அடிப்படையிலான கட்சியாக இருந்தபோதிலும், தனது ஈர்ப்பு தாராளவாத நடுத்தர வர்க்கம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது உலகிற்கு காட்ட முடியும்," என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இரண்டாவதாக, பிப்ரவரி 12 தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் அரசியல் தொடரும். தேர்தலில் ஜமாத் தோற்றாலும், என்சிபி அதற்கு அளிக்கும் ஆதரவு, ஜமாத் தலைமையில் எதிர்க்கட்சி உருவாக்குவதை எளிதாக்கும். நடைமுறையில், இது மற்ற எந்த கட்சிக்கும் இடம் இல்லாமல் செய்துவிட்டது," என்றார்.
இருப்பினும், ஆய்வாளர் மொஹியுதீன் அகமது 'தி டெய்லி ஸ்டார்' நாளிதழிடம், என்சிபி ஜமாத் முகாமிற்குச் செல்வதை தேர்தலுக்கு முந்தைய ஒரு இயற்கையான அரசியல் செயல்முறையாகவே தான் கருதுவதாகத் தெரிவித்தார்.
வங்கதேச வரலாற்றில் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் இத்தகைய கூட்டணிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"ஜமாத் உடனான என்சிபியின் கூட்டணியை நான் ஒரு அசாதாரண நிகழ்வாகக் கருதவில்லை. அதிகார அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது. என்சிபி சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. அதன் தலைவர்கள் யாரும் 1971-ஐ பார்த்ததில்லை, எனவே அவர்களுக்கு அதனுடன் எந்த உணர்வுப்பூர்வமான தொடர்பும் இல்லை. அவர்கள் அரசு அதிகாரத்தை மையமாகக் கொண்ட அரசியலைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் எங்கு சாதகமான சூழலைக் காண்கிறார்களோ அங்கு செல்கிறார்கள்"என்றார் அவர் .
மேலும்,"அவர்கள் (என்சிபி) பிஎன்பியுடனும் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதை நாம் அறிவோம், ஆனால் முடிவுகளில் அவர்கள் திருப்தி அடையவில்லை. ஜமாத் உடனான பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம், அதனால்தான் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் " என்றும் குறிப்பிட்டார்.
1971ம் ஆண்டு சுதந்திரத்திற்கான மக்கள் போராட்டத்தின் சாதனைகளுக்கு உரிமை கோரும் போக்கு அவாமி லீக்கிடம் இருந்தது போலவே, 2024 மக்கள் இயக்கத்தின் சாதனைகளுக்கு உரிமை கோரும் போக்கு என்சிபியிடமும் உள்ளது என்று மொஹியுதீன் அகமது குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












