தமிழகத்தில் பெருகி வரும் ஆப்ரிக்க நத்தைகளால் மனித உயிருக்கே ஆபத்தா? எப்படி?

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் வசிக்கும் கமலேஸ்வரி கிருபாகரனுக்கு தனது வீட்டைச் சுற்றியுள்ள ஆப்ரிக்க நத்தைகளை வெளியேற்றுவது அன்றாடப் பணிகளில் ஒன்றாக உள்ளது.

இவரது வீட்டுக்கு அருகில் வயல்வெளிகள் இருப்பதால் சுவர்களில் ஆப்ரிக்க நத்தைகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. "மூன்று வருடங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டிக் குடியேறினோம். அப்போது இருந்தே இந்த நத்தைகளைப் பார்த்து வருகிறேன்," என்கிறார் அவர்.

கொஞ்சம் மழை பெய்தால்கூட வீட்டின் சுவர்களில் ஆப்பிரிக்க நத்தைகள் அதிகளவில் ஊர்வதாகக் கூறும் கமலேஸ்வரி கிருபாகரன், "அதன் பசை போன்ற அமிலம் சுவர்களில் படிகிறது. செடி, வாழை மரங்களில் அமர்ந்து கடிக்கிறது. வீட்டுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது" என்கிறார்.

கமலேஸ்வரி மட்டுமல்ல, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஆப்ரிக்க நத்தைகளைக் கடக்காமல் செல்வதில்லை. மனித உயிர்களுக்கும் இந்த நத்தைகளால் ஆபத்து ஏற்படுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்குள் ஆப்ரிக்க நத்தைகள் நுழைந்தது எப்படி? இதனைக் கட்டுப்படுத்தும் வழி என்ன?

சென்னை மக்களுக்கு மழைக்காலம் வந்துவிட்டாலே உள்ளூர பதற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால், மழைக்கு இணையாக ஆப்ரிக்க நத்தைகளின் பெருக்கம் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

குச்சிகள் மூலம் இவற்றை அப்புறப்படுத்துவது அன்றாட வேலையாக இருப்பதாகக் கூறுகிறார், படப்பையில் வசிக்கும் கமலேஸ்வரி கிருபாகரன்.

"நத்தைகள் உள்ளே வந்துவிட்டால் பூ, செடிகளில் கை வைக்க முடியாது. செடியின் அடியில் சென்று தங்கிவிடுகிறது. வாழை குருத்தில் அமர்ந்து இந்த நத்தைகள் கடிக்கின்றன. இதனால் வாழை இருந்தும் பயன்படுத்த முடியவில்லை," என அவர் ஆதங்கப்பட்டார்.

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான படப்பை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்பட பல பகுதிகளில் ஆப்ரிக்க நத்தைகளைப் பார்க்க முடிகிறது. எந்தவொரு வீட்டைக் கடந்து சென்றாலும் அங்குள்ள சுவர்களில் இவை தென்படுகின்றன.

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை
படக்குறிப்பு, படப்பையில் வசிக்கும் கமலேஸ்வரி கிருபாகரன்.

67 ஆயிரம் நத்தை இனங்கள்..ஆனால்?

சென்னை புறநகர் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிகப் பெரிய தீமையை இவை விளைவித்துக் கொண்டிருப்பதாக பூச்சியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"கிழக்கு ஆப்ரிக்க நத்தைகள் (East African Snail) நிலப் பகுதிகளில் வாழக் கூடியவை. நத்தை இனங்களில் மிகப் பெரியதாக இவை உள்ளன" என்கிறார், சென்னை லயோலா கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும் பூச்சியியல் நிபுணருமான முனைவர் மரியபாக்கியம்.

தான்சானியா, கென்யா போன்ற கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு பயன்தரக் கூடியதாக இந்த நத்தைகள் உள்ளதாகக் கூறும் அவர், "அங்கு உயிரினங்களின் பன்மைத்துவத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியாவில் இயற்கையுடன் இவற்றின் உறவு சமநிலையில் இல்லை" என்கிறார்.

உலகில் 67 ஆயிரம் வகை நத்தை இனங்கள் உள்ளதாகக் கூறும் அவர், "இவை மற்ற நத்தைகளின் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் இதர நத்தைகள் அழியக் கூடிய சூழல் ஏற்படுகின்றன." என்கிறார்.

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை

இந்தியாவுக்குள் நுழைந்த பின்னணி

இந்தியாவில் 1847-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெல்லுடலியல் ஆய்வாளரான ஹென்றி வில்லியம் பென்சன் மூலமாக இந்தியாவுக்குள் கிழக்கு ஆப்ரிக்க நத்தைகள் வந்துள்ளன.

"அவர் ஒரு ஜோடி கிழக்கு ஆப்ரிக்க நத்தைகளைக் கொண்டு வந்து கல்கத்தாவில் ஆய்வு நடத்தினார். அதனை அருகில் வசித்த ஒருவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். பத்தாண்டுகளில் அவை பல்கிப் பெருகின," என்கிறார் முனைவர் மரியபாக்கியம்.

"வேறு சிலர் ஆய்வுகளை நடத்துவதற்காக மும்பை, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து இவை தமிழ்நாட்டுக்குள் வந்திருக்கலாம். இதன் ஓடுகள் அழகாக இருக்கும். இவை 20 செ.மீ வரை நீளம் உள்ளதாக உள்ளன." எனவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 500 முட்டைகள்.. என்ன ஆபத்து?

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை
படக்குறிப்பு, முனைவர் மரியபாக்கியம்

இதன் தாக்கம் மனிதர்களுக்கு எதிராக உள்ளதை அறியாமல் சிலர் வளர்த்ததாகக் கூறும் முனைவர் மரியபாக்கியம், "ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை முட்டைகள் இடும். ஒவ்வொரு முறையும் 150 முதல் 200 முட்டைகள் வரை வெளியிடும். இவற்றில் 90 சதவீத முட்டைகள் பொரிக்கப்பட்டு நத்தையாக வெளிவருகின்றன." என்கிறார்.

"கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள உயிரினங்கள், இவற்றை உணவாக உண்டு வாழ்கின்றன. ஆனால், இங்குள்ள உயிரினங்கள் எதுவும் அவற்றைச் சாப்பிடுவதில்லை. மனிதர்களும் உணவாக உண்பதில்லை. அதுவே இதன் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம்," என்கிறார் அவர்.

பூச்சியினங்களில் அமெரிக்கன் போல்வார்ம் (American Bollworm), ஆசியன் கேட்டர்பில்லர் (Asian Caterpillar) ஆகியவை காய்கள், இலைகள், தண்டுகளை உண்கின்றன.

"மேற்கூறிய பூச்சிகள், 180-க்கும் மேற்பட்ட உணவுப் பயிர்களை பாதிக்கிறது. ஆனால், ஐநூறுக்கும் மேற்பட்ட உணவுப் பயிர்களை கிழக்கு ஆப்ரிக்க நத்தைகள் உண்கின்றன. வாழை, கொய்யா, பப்பாளி பூ, அதன் பழம், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் என எதைவும் விட்டுவைக்காமல் உண்கின்றன," எனக் கூறுகிறார், முனைவர் மரியபாக்கியம்.

இதனால் சிறு குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை
படக்குறிப்பு, விவசாய நிலத்தில் ஆப்பிரிக்க நத்தைகள்

அவர் கூறுவதைப்போல ஆப்ரிக்க நத்தைகளால் நேரடி பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார், செங்கல்பட்டு மாவட்டம், காயார் ஊராட்சியில் வசிக்கும் விவசாயி டில்லிராம்.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இவர் விவசாயம் செய்து வருகிறார். பிபிசி தமிழ் அங்கு சென்றபோது தனது விவசாய நிலத்தில் இருந்த ஆப்ரிக்க நத்தைகளை ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டிருந்தார்.

"விதைகள் மீது இந்த நத்தைகள் ஊர்ந்து செல்லும்போது அதை நாசம் செய்துவிடுகிறது. முளைப்புத் திறனும் குறைவதாக கருதுகிறோம். பூச்சி மருந்து அடிக்கும்போது அவை இறந்துவிடுகின்றன. ஆனால், அதன்பிறகும் தொடர்ந்து வருவதால் செலவு அதிகமாகிறது" என அவர் கூறுகிறார்.

"மழைக் காலங்களில் இதன் பரவலைத் தடுக்க முடியவில்லை" எனக் கூறும் அவர், "நம்மூர் நத்தைகள் உழவு ஓட்டும்போது இறந்துவிடும். இவற்றுக்கென தனியாக மருந்து வாங்கி அழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த ரசாயனங்களால் மண் புழுவும் பூச்சிகளும் இறந்துபோகின்றன. மண்வளம் கெடுகிறது," என்கிறார்.

அவரது வயலில் நெல் பயிர்களின் மீது ஆப்ரிக்க நத்தைகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. "இறந்துபோன நத்தைகளின் ஓடுகள், வயல்களில் கிடக்கின்றன. வேலை செய்யும்போது அதன் ஓடுகளால் கால்களில் காயம் ஏற்படுகிறது" என்கிறார்.

காயார் ஊராட்சியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடப்பதாகக் கூறும் டில்லிராம், அனைத்து விவசாயிகளுக்கும் ஆப்ரிக்க நத்தைகளால் பிரச்னைகள் உள்ளதாகக் கூறினார்.

"சாப்பிடுவது, இனப்பெருக்கம் செய்வது என ஆப்ரிக்க நத்தைகளுக்கு இரண்டே வேலைகள் தான்" எனக் கூறும் பூச்சியியல் நிபுணர் முனைவர் மரியபாக்கியம், "குறைந்த காலகட்டத்தில் அதிக உணவுகளை உட்கொள்வது, அதிக முட்டைகளை வெளியிடுவது இதன் பணியாக உள்ளது" என்கிறார்.

'அதீத காய்ச்சல் முதல் மரணம் வரை'

ஆப்ரிக்க நத்தைகள், தமிழ்நாடு, விவசாயிகள், மழை, வானிலை
படக்குறிப்பு, சிவகங்கையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

கிழக்கு ஆப்ரிக்க நத்தைகளால் இந்தியாவில் உடல்சார்ந்த பிரச்னைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"எலியின் கழிவுகளில் ஆஞ்சியோ ஸ்ட்ராங்கிலியாஸிஸ் (angiostrongyliasis) என்ற ஒட்டுண்ணி உள்ளது. இதனை சுமந்து செல்லும் வாகனமாக ஆப்ரிக்க நத்தைகள் உள்ளன" என்கிறார், சிவகங்கையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

"ஆப்ரிக்க நத்தைகளைத் தொடுவது உள்பட பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்கு இந்த ஒட்டுண்ணி எளிதில் பரவுகிறது. இதன்மூலம் மூளைக் காய்ச்சல் (Meningoencephalitis) ஏற்படுகிறது" என்கிறார் அவர்.

"இந்த ஒட்டுண்ணி, நத்தையின் பசைத் தன்மையுள்ள நீர்மப் பொருளில் உள்ளது. இது கீரையில் படர்ந்தால் அதனை சரியாக கழுவி சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்," என்கிறார், முனைவர் மரியபாக்கியம்,

பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவை மூலமாக இந்தப் புழுக்கள் பரவி மனிதர்கள் இறக்கும் நிலைக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

"ஆப்ரிக்க நத்தை உடனான தொடர்புகளை மனிதர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறும் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, "அதீத காய்ச்சல், தலைவலி, பின்கழுத்து இறுக்கம், பிதற்றல் நிலை எனப் படிப்படியாக சென்று இறுதியாக மரணம் ஏற்படும். 0.5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மரண விகிதம் உள்ளதால் முறையான சிகிச்சை எடுத்தால் தற்காத்துக் கொள்ளலாம்," என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கட்டுப்படுத்தும் வழிகள் என்ன?

இருபால் உயிரினமாக ஆப்ரிக்க நத்தைகள் உள்ளன. "ஒரு நத்தைக்குள் ஆண், பெண் உறுப்புகள் உள்ளன. ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் முட்டையை இவற்றால் உற்பத்தி செய்ய முடியும்" எனக் கூறுகிறார், முனைவர் மரியபாக்கியம்.

"இந்த நத்தைகள் வளர்ச்சி நிலை அடையும்போது விந்தணுக்களை இன்னொரு நத்தைக்குள் செலுத்தி முட்டைகளை உற்பத்தி செய்கிறது. நத்தை கிடைக்காதபோது தனக்குள் உள்ள விந்தணு மூலம் முட்டைகளை உற்பத்தி செய்கிறது" எனக் கூறும் அவர், "இனப்பெருக்கத்துக்கு இன்னொரு நத்தை அவசியம் இல்லை." என்கிறார்.

இதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார்.

* ஆப்ரிக்க நத்தைகள் தென்பட்டால் ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் கல் உப்பு எடுத்து வீட்டின் ஓரங்களில் தெளிக்கலாம்.

* வயல்வெளிகளின் ஓரங்களில் உப்புக் கரைசலைப் பயன்படுத்தி ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்தலாம்.

*உப்பு கலந்த நீரை கோணிப்பையில் தெளித்து வைத்துவிட்டால் வயல்களின் உள்ளே வராமல் போய்விடும்.

*ஆப்ரிக்க நத்தைகளைக் கையுறை அணிந்து எடுத்து சுடுநீர் அல்லது உப்பு திரவத்தில் போட்டால் இறந்துவிடும்.

*நத்தைகளை அழிக்கும் ரசாயனத்தை மருந்து கடைகளில் வாங்கலாம். அவற்றை நீரில் கலந்து தெளிக்கும்போது அழிந்துவிடும்.

- "இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (zoological survey of india) ஆகியவை தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன" என்கிறார், முனைவர் மரியபாக்கியம்.

"ஆந்திராவில் ஆப்ரிக்க நத்தைகள் குறித்து ஆய்வுகளை நடத்தியுள்ளனர். ஆனால், மக்கள் மத்தியில் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை," எனவும் அவர் தெரிவித்தார்.

ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியல் துறை பேராசிரியர் சுவாமிநாதன்.

இதுதொடர்பாக, வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ரசாயன மருந்துகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு