எடப்பாடி vs ஓ.பி.எஸ்: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகம்?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
நீதிமன்றத்தின் புதிய உத்தரவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் எழுந்த கொந்தளிப்பு இன்னும் முழுமையாகத் தணியவில்லை. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியில் சேர்ந்து டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு பின்னர் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டோ போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
அது நிர்வாகிகள் மட்டத்தில் பிளவை உண்டாக்கியது மட்டுமின்றி, கட்சி விவகாரம் மீண்டும் நீதிமன்ற படியேறவும் வழிவகுத்தது.
இந்தப் போட்டியில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவருக்குச் சாதகமாக அமைய, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வரிசையில் அக்கட்சியின் சக்தி வாய்ந்த ஒரே தலைமையாக உருவெடுக்க அவர் வேகம் காட்டினார்.
அதிமுக பொதுக்குழுத் தீர்மானம், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளிட்ட அக்கட்சியின் பல பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுகையில் இருக்கும்போதே, கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மறுநாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பு கூறியது.

இதனால் துணுக்குற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது மனுவில் கோரியிருந்தது.
நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்னிலையில் அந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் வாதங்களை முன்வைத்தன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலைத் தொடர அனுமதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த பி.எச்.மனோஜ் பாண்டியனும் மற்றவர்களும் இடைக்கால நிவாரம் கேட்டுத் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதி தொடரும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகம்?
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தாலும்கூட, அதன் முடிவை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தங்களுக்கே சாதகம் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரண்டு தரப்பும் கொண்டாடி வருவதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துளளனர்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். அவர் கூறுகையில், "உயர்நீதிமன்ற உத்தரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். பொதுக்குழு வழக்கிலேயே உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு, அரசியல் தீர்வு காணாமல் நீதிமன்றத்தை நாடுவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆகவே, கட்சியில் உள்ள ஆதரவைப் பொருத்தே யாருடைய கை ஓங்கும் என்பது உறுதியாகும்.
சிவசேனா வழக்கில் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகிய மூன்றின் அடிப்படையில்தான் உண்மையான சிவசேனா யார் என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்தது. அதன் பின்புலம் குறித்து இப்போது பேசத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அந்த 3 காரணிகளில் முதலிரண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருப்பது கண்கூடு. அதிமுக விதிகளைத் திருத்தியது சரியா? அரசியல் சாசன விதிகள் மீறப்பட்டுள்ளனவா? என்பதை மட்டுமே நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதனைத் தவிர இந்த வழக்கில் வேறு ஏதும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"அதிமுகவைப் பொருத்தவரை, செயல்பாட்டளவில் கடந்த 4 ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒற்றைத் தலைமை போலவே செயல்பட்டு வந்துள்ளார். முதலமைச்சராக ஆட்சியில் தனித்து செயல்பட்ட அவர், கட்சி நிர்வாகத்திலும் கூட இணை ஒருங்கிணைப்பாளராக ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளார். ஓ.பி.எஸ்.சின் சகோதரரை கட்சியை விட்டு நீக்கும் விஷயத்தில் கூட ஓ.பி.எஸ்.சால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதே இதற்கு உதாரணம்.
அதிமுகவில் 4 ஆண்டுகளாக செயல்பாட்டளவில் இருந்த ஒற்றைத் தலைமையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவது ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வேகத்தடை மட்டுமே. ஆனால், குறிப்பிட்ட சமூகத்திற்கானவர் என்ற இமேஜைத் தகர்த்து, சாதிகள் கடந்த ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான தலைவராக தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டதற்கு, "சிறையில் இருந்து விடுதலையாகி வந்த போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சசிகலா தவறிவிட்டார். தற்போதைய நிலையில் அவரது அரசியல் செயல்பாடுகள் எடுபடுவதாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஓ.பன்னீர்செல்வமோ, ஒரு காலத்தில் ஜெயலலிதா, பின்னர் சசிகலா, அதனைத் தொடர்ந்து தற்போது பா.ஜ.க. என்று எப்போதும் யாரேனும் ஒருவருக்கு விசுவாசியாகவே இருந்து பழகிவிட்டார். தன்னை ஒரு தலைவராக அவர் முன்னிறுத்திக் கொண்டதே இல்லை. இப்போதும் கூட எடப்பாடி பழனிசாமியின் வேகத்திற்கு அணை போட்டு தாமதம் செய்து, பா.ஜ.க. தயவால் கட்சிக்குள் ஏதேனும் சமரசம் செய்து கொள்ளளலாம் என்கிற அளவில்தான் அவரது அரசியல் இருக்கிறது.
பேட்டிகள், வழக்குகள் மூலம் அரசியல் நடத்த முயன்றால் காணாமல் போய்விடுவார். அதற்குப் பதிலாக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்யலாம். அல்லது தனித்து இயக்கம் கண்டு மக்கள் ஆதரவைத் திரட்டி எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டு வர முயலலாம். அப்போதும் கூட நாடாளுமன்ற தேர்தலை பொருட்படுத்தாமல், அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி சமரசத்திற்கு முன்வருவது சந்தேகமே" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












