ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது முறையாக அரையிறுதியில் இந்தியா - சாதனை படைத்த ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
செயின்ட் லூசியாவில் நேற்று (திங்கள், ஜூன் 24) நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்து.
இந்திய அணி விதித்த 206 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்திருந்தால், அரையிறுதிக்குச் சென்று இந்தியாவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கும். ஆனால், 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் அதிக அளவு வெற்றிகளைப் பெற்று இலங்கை அணிய பின்னுக்குத் தள்ளி 34 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது.
வரும் 27-ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்பது 3-வது முறையாகக் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் செயின்ட் லூசியாவின் கிராஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் குவித்திருந்தது.


பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘மனநிறைவாக இருக்கிறது’
வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் விளையாடியவிதம் தனக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார்.
“எதிரணியின் மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரியும், அதனால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடிவு செய்தோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோர், இதுபோன்ற ஆடுகளத்தில் காற்றின் வேகத்துக்கு மத்தியில் சேஸ் செய்வது கடினம். இந்தச் சூழலை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம்,” என்றார்.
மேலும், “ குல்தீப்பின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அவரைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தினோம். அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆனால், குல்தீப் பங்கு அடுத்ததாக பெரிதாக இருக்கும் என நினைத்தேன். அரையிறுதி என்பதால் புதிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், வழக்கம்போல் விளையாடினோம். ஒவ்வொரு வீரரும் சூழலை அறிந்து விளையாடினார்கள், சுதந்திரமாக இருந்தார்கள். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சிறப்பு. பெரிதாக அணியில் மாற்றம் இருக்காது,” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மாவின் சாதனைகள்
இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரோஹித் சர்மா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அதனை ஈடுகட்டிவிட்டர்.
19 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிவிரைவாக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 6 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 20 பந்துகளிலும், 2012ல் கெய்ரன் பொலார்ட் 20 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தனர். அதை ரோஹித் சர்மா முறியடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய பேட்டர் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 2010-ஆம் ஆண்டில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருப்பவர் பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியாவுக்கு எதிராக கெயில் கேப்டனாக இருந்தபோது 98 ரன்களைப் பதிவு செய்திருந்தார்.
இதற்கு முன் 2016-இல் லாடர்ஹில்லில் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே ரோகித் சர்மாவின் சிறந்த பேட்டிங்காக இருந்தது. அந்தச் சாதனையை அவரே முறியடித்து, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சாதனை படைத்தார்.
இந்திய அணி பவர்ப்ளே ஓவர்களை முடிப்பதற்குள் நேற்று ரோகித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளே ஓவர்கள் முடிப்பதற்குள் அரைசதம் அடித்த 4-வது பேட்டர் என்று ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் ஸ்டீபன் மைபுர்க், கேஎல் ராகுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய பேட்டர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பெற்று, யுவராஜ் சிங் சாதனையை ரோகித் முறியடித்தார். யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 203 சிக்ஸர்களை பதிவு செய்தார். டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 150 சிக்ஸர்களுக்கு மேல் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் (173) உள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4,165 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசமின் 4,145 சாதனையைக் கடந்தார்.
இந்த ஆட்டத்தில் மட்டும் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசியது டி20 உலகக் கோப்பையில் 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2014-இல் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் சேர்ந்து 30 சிக்ஸர்களை அடித்திருந்தன.
இந்திய அணி 205 ரன்கள் சேர்த்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்தான். அவர் ஆட்டமிழக்கும்வரை இந்திய அணியின் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் வரை இருந்தது. ரோகித் ஆட்டமிழந்து சென்றபின் துபே (28) சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் முடிந்தவரை சிறந்த பங்களிப்பு செய்தனர்.
ஸ்டார்க் பந்தை வெளுத்த ரோகித்
ஆட்டம் தொடங்கியது முதலே ரோகித் சர்மா அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்தார். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 29 ரன்களை ரோகித் விளாசினார்.
ஸ்டார்க்கின் சர்வதேசக் கிரிக்கெட்டில் மோசமான ஓவராகவும், டி20 உலகக் கோப்பையிலும் மோசமானதாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வழங்கியதுதான் ஸ்டார்க்கின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதைவிட நேற்றைய பந்துவீச்சு மோசமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கோலியின் மோசமான ஃபார்ம்
2023-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கண்ணீருடன் மைதானத்தை விட்டு நடந்து சென்றதற்கு பழிதீர்க்கும் விதத்தில், ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது.
விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்.
ஆனாலும் ரோகித் சர்மாவின் அதிரடியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 5-வது ஓவரில் 19 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்தது. 8.4 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி எட்டியது. 13.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.
ரோகித்தின் அதிரடி ஆட்டம்
ரோகித் சர்மா அரைசதம் அடித்தபோது, ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அதாவது இந்திய அணியின் ஸ்கோரில் 99% ரோகித் சர்மாவின் அரைசதம்தான். ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய பலமுறை ஸ்டார்க் ஷார்ட் பந்துகளையும், ஸ்விங் செய்யவும் முயற்சித்தார். ஆனால், அனைத்துமே தவறாக முடிந்து, ரோகித் பேட்டிங்கிற்கு இரையானது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 21 முறை ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடினார் இதில் 71 ரன்களைச் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் ஃபிரன்ட்புட் ஷாட்டில் அடிக்கப்பட்டவை.
கம்மின்ஸ், ஸ்டாய்னிஷ், ஆடம் ஜம்பா ஓவர்களையும் ரோகித் சர்மா விட்டுவைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் 2முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஓவரில் ரோஹித் சர்மா காலை மடக்கி ஸ்வீப்பில் அடித்த சிக்ஸர் அரங்கின் மேற்கூரையில் விழுந்தது.
ஆடம் ஜம்பா ஓவரை பதம்பார்த்த ரோகித் சர்மா 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டாய்னிஷ் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார், ஸ்டாய்னிஷ் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரிகளை ரோகித் வெளுத்தார்.
குறைந்த ரன்ரேட்
ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா 92 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறியநிலையில் இந்தி அணியின் ரன்ரேட் சற்று குறையத் தொடங்கியது. ரோகித் சர்மா 2-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் சேர்ந்து 87 ரன்களும், சூர்யகுமாருடன் சேர்ந்து 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
15-வது ஓவர் முதல் 18-வது ஓவர் வரை 21 பந்துகளாக இந்திய அணி பவுண்டரிகூட அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
தப்பித்த ஹேசல்வுட்
ஆஸ்திரேலிய அணியில் உயிர்தப்பி பந்துவீசியது ஹேசல்வுட் மட்டும்தான். 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.
வார்னர் ஏமாற்றம்
206 ரன்கள் எனும் கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலையே வார்னரை (6) வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட், மார்ஷ் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் விதத்தில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.
திருப்புமுனையான அக்ஸர் படேல் கேட்ச்
குல்தீப் யாதவ் ஓவரில் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்கவே, அதை அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஹெட்-மார்ஷ் இடையிலான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்து மார்ஷ் 37 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் வந்த ஆஸ்திரேலிய பேட்டர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பந்துவீச்சுக்கு திணறினர். மேக்ஸ்வெல் 20 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஹெட் (76) ஸ்டாய்னிஷ் (2), மேத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி 3 ஓவர்களில் 51 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டியிதிருந்தது. ஆனால் கம்மின்ஸ் (11), ஸ்டார்க் (4) ரன்களில் இறுதிவரை போராடியும் முடியாததால் தோல்வி அடைந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












