மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்; சட்டப் பேரவையைக் கூட்டிய அரசு - விரிவான பின்னணி

பட மூலாதாரம், Getty Images
தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில், அந்த மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக, நாளை (நவம்பர் 18) அவசர சட்டமன்றக் கூட்டத்தினை கூட்டியுள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாகக்கூறி, தமிழ் நாடு அரசு கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (நவம்பர் 20) அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகிறது.
இதற்கிடையில், கடந்த வாரம், பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் கடத்தி வருவது தொடர்பாக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மாநில அரசுகள் உச்சநிதிமன்றத்தை அணுகிய பின்னர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநர்களின் போக்கு குறித்து வேதனை தெரிவித்தார் .
மேலும், ஒவ்வொரு முறையும் மாநில அரசுகள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்குத்தள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் தான், ஜனவரி 13, 2020 முதல் ஏப்ரல் 28, 2023 வரை தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
எந்தெந்த மசோதாக்களை திரும்பி அனுப்பினார் ஆளுநர்?
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருந்த 12 மசோதாக்களும் உயர் கல்வித்துறை சார்ந்தவையே. அவற்றில், இரண்டு மசோதாக்கள் 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் ஆளுநருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரண்டு சட்டத்திருத்த மசோதக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022 மே மாதத்தில் இருந்து மாநில அரசு நிர்வாகிக்கும் மெட்ராஸ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை இனி ஆளுநர் நியமிப்பதற்கு பதிலாக, மாநில அரசு நியமிக்கும் வகையிலான சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
தற்போது, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதாக்களைத் தான் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Madras University
மசோதாக்கள் நிலுவையால் யாருக்கு பாதிப்பு?
தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்கள் அனைத்தும் உயர்கல்வித்துறை சார்ந்தவை என்பதால், இந்த மசோதாக்கள் காலதாமதமாவதால் பாதிக்கப்படுவது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்தான்.
தமிழ்நாட்டில் தற்போது, சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவைக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல், ஒருங்கிணைப்பாளர் குழுதான் கல்லூரியின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், மாணவர்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாவதாகவும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகளே ஸ்தம்பிப்பதாகவும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் காந்திராஜன் கூறினார்.
பிபிசியிடம் பேசிய காந்திராஜன், “ஆளுநர் மற்றும் தமிழ் நாடு அரசுக்கு இடையில் நடக்கும் இந்த மோதலால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். துணை வேந்தரை நியமிக்கும் வரையில் ஒருங்கிணைப்புக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கும்தான். ஆனால், எந்த ஒரு விஷயத்தை அமல்படுத்த வேண்டும், அல்லது ஒப்புதல் வாங்க வேண்டும் என்றாலும், நான்கு பேரும் ஒரே முடிவை எடுக்க வேண்டும், யாரேனும் ஒருவர் மாற்றுக்கருத்தை முன்வைத்தால், அந்த விஷயம் முன்னெடுக்க முடியாது, ஒப்புதல் கிடைக்காது,” என்றார்.
மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும், அல்லது கல்லூரியில் கொடுத்துள்ள மதிப்பெண் சான்றிதழை பெற வேண்டும் என்றால் கூட குறைந்தது ஒரு மாதம் ஆவதாகக் கூறினார், காந்திராஜன்.
“மாணவர்கள் எந்த வேலையாக இருந்தாலும், துணை வேந்தரின் கையொப்பம் வேண்டும். ஆனால், துணை வேந்தர் இல்லாத இடத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் கையொப்பம் வேண்டும். அவர்கள் கூடும்போதே கையொப்பம் கிடைக்கும். அவர்களின் அலுவலகத்திற்கு, கோப்புகளை அனுப்பினால், குறைந்தது, ஒவ்வொருவரிடமும் கையொப்பம் பெற ஒரு மாதம் ஆகும். இவையெல்லாம் மாணவர்களை கடுமையாக பாதிக்கும்,” என்றார் அவர்.

கல்வியை வைத்து அரசியல் செய்வது சரியா?
இந்த விஷயத்தில், தமிழ் நாடு அரசோ அல்லது தமிழ் நாடு ஆளுநரோ, யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால்தான் தமிழ்நாடு மாணவர்களுக்கு நன்மை நடக்கும் என்றார் காந்திராஜன்.
அதேவேளையில், தமிழ் நாடு ஆளுநர் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார் மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகராஜன்.
“தமிழ்நாடு சட்டமன்றத்தில மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, ஜனநாயகமும் கேள்விக்குள்ளாகிறது,” என்றார்.
மேலும், தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர் நியமனம் மட்டுமின்றி, கல்வியிலும் அரசியல் செய்வதாகவும், தலையிடுவதாகவும் நாகராஜன் கூறினார்.
“எப்போதும் இதுபோன்ற நியமனங்களில் ஆளுநர்கள் தாங்கள் விரும்பிய நபர் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இவர் ஒரு படி மேலே சென்று, கல்வியில் என்ன தலைப்பில், ‘யார் செமினார்’ எடுக்க வேண்டும் என்பது வரை சுற்றறிக்கை அனுப்புகிறார். இதெல்லாம் கல்வி நிலையங்களில் ஆளுநரின் உச்சபட்ச தலையீடு,” என்றார் நாகராஜன்.

மரபுகளை மீறுகிறாரா ஆளுநர்?
மத்திய அரசின் அரசியல் நோக்கத்திற்காக ஆளுநர் செயல்படுவதால் தான் இதுபோன்ற காலதாமதங்களுக்கு காரணம் எனக் கருதுகிறார் அரசியல் விமர்சகரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ் துறைத்தலைவருமான அ.ராமசாமி.
“எல்லாக் காலத்திலும் மாநில ஆளுநர்கள், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வதற்கு ஏற்பதான் நடப்பார்கள். அது முன்பெல்லாம் இவ்வளவு வெளிப்படையாக இருக்காது. ஆனால், இவர் வெளிப்படையாக பாஜக,வின் நபராக அறியப்படுகிறார். தமிழ் நாட்டில் பாஜக.வுக்கு செல்வாக்கை அதிகரிக்க, அந்தக்கட்சிக்கு மறுபுறமாக இவரும் செயல்படுகிறார். இது அடிப்படையில், இந்த அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் சிக்கல்,” என்றார் ராமசாமி.
ஆளுநர் இவ்வாறாக காலவரையரையின்றி தாமதப்படுத்துவதற்கு நமது அரசியல் அமைப்பிலும் சிக்கல் இருப்பதாக ராமசாமி கருதுகிறார்.
“ஆளுநருக்கான அதிகாரம் உள்ளிட்டவை அனைத்தும் ஒரு மேற்கத்திய சிந்தனை. எந்த ஒரு காலவரையறையும் நிர்ணயிக்காமல் இருப்பதும் அதிலிருந்து வந்ததே. காரணம், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் மரபுகளை மதிப்பவர்கள், மீறமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், அதனை மீறி, தனி நபர் நினைப்பதை செயல்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கே ஆபத்து,” என்றார் பேராசிரியர் ராமசாமி.

பட மூலாதாரம், Getty Images
ஆளுநர்களும் பாஜக இல்லாத மாநில அரசுகளும்
பெரும்பாலும், பாஜக, அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நீதிமன்றத்தை நாடிய பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மன் தலைமையிலான ஆம் ஆத்தி அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தெலுங்கானாவில், பிஆர்எஸ் கட்சியின் கே சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு உள்ளது.
அதேபோல, கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரளாவும், திமுக ஆட்சியில் இருக்கும் தமிழ் நாடும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடின.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












