ஜவஹர்லால் நேரு அமெரிக்காவுக்குச் சென்றபோது என்ன நடந்தது?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 21 முதல் 23வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது மோதியின் ஆறாவது அமெரிக்கப் பயணம். எனினும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுதான்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அமெரிக்காவுக்கு சென்ற போது என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 1949, 1956, 1960, 1961 என நான்கு முறை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 1960ல் மேற்கொண்ட பயணம், ஐ.நா. பொதுச் சபையில் நடந்த கூட்டத்தில் மட்டும் பங்கேற்பதற்காக மேற்கொண்ட பயணம். மற்ற மூன்று பயணங்களும் அரசு முறைப் பயணங்கள்.
இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்ற நேரு பல நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தாலும், அவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தது பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான். அது இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான காலகட்டமாக இருந்தது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. கெடுபிடிப் போர் துவங்கியிருந்தது. இந்த காலகட்டத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது "அணிசேராக் கொள்கையாக" இருந்தாலும், சேவியத்திற்கு நெருக்கமான நாடாகவே இந்தியா பார்க்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் பிரதமராகப் பதவியேற்றதும் முதல் முறையாக 1949 அக்டோபரில் மூன்று வாரப் பயணமாக அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார் நேரு. அக்டோபர் 11ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் நேருவின் விமானம் சென்று இறங்கியபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கே சென்று அவரை வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் நேரு பேசினார். இந்தப் பயணத்தின்போது நேருவின் மகள் இந்திரா காந்தியும் உடன் சென்றார்.
சிகாகோ, நியுயார்க், டெனிஸி வேலி, இலினாய்ஸ் ஆகிய இடங்களுக்கும் சென்ற நேரு, தொழிலதிபர்கள், கலைஞர்கள், பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசினார். அமெரிக்காவில் விவசாயத்தில் கருவிகள் பயன்படுத்தப்படுவது நேருவின் பார்வையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இந்தியா கோரிய பொருளாதார உதவிகளைச் செய்ய அமெரிக்கா அந்தத் தருணத்தில் மறுத்துவிட்டது. கெடுபிடிப் போர் நிலவிய காலகட்டத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடுநிலை வகிக்க இந்தியா முடிவுசெய்தது இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஜவஹர்லால் நேருவின் இந்த விஜயம்தான் இரு நாடுகளுக்கான உறவில், நட்புணர்வுடன் கூடிய பலன் மிகுந்த ஒப்புதலுக்கான துவக்கமாக அமைந்தது என கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி ப்ளிங்கென்.
மேலும், நேருவின் முதல் விஜயம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டு மில்லியன் டன் உணவு தானியங்களை அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
இதற்கு அடுத்ததாக, 1956ல் நேரு இரண்டாவதாக அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபராக இருந்த ட்விட் ஐசனோவரின் கெட்டிஸ்பர்க் பண்ணையில் ஒன்றரை நாட்களைச் செலவழித்தார்.
இது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த உதவியாக இருந்தது. இந்த விஜயத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான அமெரிக்க உதவி, 822 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. தொடர்ந்து, 1959ல் ஐசனோவர் இந்தியாவுக்கும் விஜயம் செய்தார்.
இதற்குப் பிறகு 1960ல் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மட்டும் நேரு அமெரிக்கா சென்றார்.
இதற்கு அடுத்த விஜயம் 1961ல் ஜான் எஃப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது நிகழ்ந்தது. இதுவே நேருவின் அமெரிக்காவுக்கான கடைசிப் பயணமாகவும் அமைந்தது.
முதலில் ரோட் ஐலாண்டில் வந்திறங்கிய நேருவும் இந்திராவும், பிறகு அங்கிருந்து வாஷிங்டன் டிசிக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த விஜயத்தின் போது பத்து நாட்கள் அமெரிக்காவில் இருந்த நேரு, நியூயார்க், கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றார். இந்த பத்து நாட்களும் நேருவின் பயணம் குறித்த விரிவான செய்திகளை அமெரிக்க செய்தித் தாள்கள் வெளியிட்டன.
இந்தப் பயணத்தின்போது வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை சந்தித்த நேரு, அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். பிறகு, நியுயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையிலும் உரையாற்றினார்.

பட மூலாதாரம், Getty Images
1949ல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்திலிருந்து இந்த கடைசிப் பயணம் வரையிலான காலகட்டத்தில் இந்திய - அமெரிக்க உறவு பல மடங்கு மேம்பட்டிருந்தது.
ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாகவும் கடனாகவும் அளித்திருந்த அமெரிக்கா, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான நிதியுதவியாக 1 பில்லியன் அமெரிக்க டாலரை அளிக்க முன்வந்தது.
இத்தனைக்கும் இந்த காலகட்டத்தில் இந்தியா சோவியத்துடன் நெருக்கமாக இருப்பதாக அமெரிக்கா கருதியதால் இரு தரப்பு உறவுகளில் பல நெருடல்கள் இருந்தன.
அணு ஆயுத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டுமென ஐ.நாவில் இந்தியா கோரிவந்தது அமெரிக்கவுக்கு எரிச்சலாகவே இருந்தது.
இந்திய - அமெரிக்க உறவு: நேரு முதல் மோதி வரை

பட மூலாதாரம், TWITTER
நேரு முதன் முதலில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது, உலகம் அப்போதுதான் இரண்டாம் உலகப் போரின் தாக்கத்திலிருந்து வெளியில் வந்துகொண்டிருந்தது. கெடுபிடி போர் காலம் துவங்கியிருந்தது.
இந்த காலகட்டத்தில், அப்போதுதான் சுதந்திரம் பெற்ற புதிய நாடான இந்தியா தன் பக்கம் நிற்க வேண்டுமென அமெரிக்கா கருதியது. ஆனால், இந்தியாவின் அணி சாரா கொள்கையை பின்பற்றப் போவதாக அறிவித்தது, அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் அமெரிக்க உறவுகள் பெரிதாக மேம்படவில்லை. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான யுத்தத்தில், அமெரிக்கா பாகிஸ்தான் பக்கமே நின்றது.
இதற்குப் பிறகு இந்தியா தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதும், அணு குண்டு சோதனைகளை நடத்தியதும் அமெரிக்காவுக்கு உவப்பானதாக இல்லை.
90களில்தான் இந்த நிலை மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது. 90களின் இறுதியில் மீண்டும் நிகழ்த்தப்பட்ட அணு ஆயுத சோதனை இந்த உறவின் வளர்ச்சிக்கு மீண்டும் ஒரு தடையாக அமைந்தாலும், 2004ல் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்றதும் மிக வேகமாக வளர ஆரம்பித்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய - அமெரிக்க உறவுகளில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது இந்த காலகட்டத்தில்தான். தனது பத்தாண்டு கால ஆட்சியில் எட்டு முறை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார் மன்மோகன் சிங்.
இதன் உச்சகட்டமாக, இந்தியா - அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த உறவின் தொடர்ச்சியை தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி முன்னெடுத்துச் செல்கிறார். இதற்கு முன்பாக, 2014 செப்டம்பர், 2016 மார்ச் - ஏப்ரல், 2016 ஜூன், ஜூன் 2017, செப்டம்பர் 2019 ஐந்து முறை அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருக்கும் நரேந்திர மோதி, தற்போது ஆறாவது முறையாக அந்நாட்டிற்குச் செல்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












