மலேரியா இல்லாத நாடு இலங்கை - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

மலேரியா நோய் அற்ற நாடு என்ற சான்றிதழை இலங்கை பெற்றுள்ளது
படக்குறிப்பு, மலேரியா நோய் அற்ற நாடு என்ற சான்றிதழை இலங்கை பெற்றுள்ளது

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் உள்நாட்டில் மலேரியா காய்ச்சல் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தினால் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் மலேரியா இலங்கையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ சான்றிதழ் தற்போது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக சுகாதார நிறுனத்தின் 69-வது தென் கிழக்கு ஆசிய பிராந்திய அமர்வின் போது சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை இரண்டாவது நாள் அமர்வின் போது உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் நாயகம் டாக்டர் மார்கரெட் சென் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்காசிய பிராந்திய இயக்குநரான டாக்டர் பூணம் கெத்திபால் ஆகியோர் கூட்டாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்னவிடம் இந்த சான்றிதழை அளித்தனர்

இலங்கையில் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் மலேரியா பதிவாகவில்லை
படக்குறிப்பு, இலங்கையில் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் மலேரியா பதிவாகவில்லை

2006 - 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள் நாட்டில் வருடமொன்றுக்கு ஆயிரம் மலேரியா காய்ச்சல் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை பூஜ்யம் என கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டுகின்றது

ஏற்கனவே ''யானைக் கால் நோய் அற்ற நாடு'' என்ற சான்றிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாக பெற்றிருகின்ற இலங்கை, இப்போது மலேரியா இல்லாத நாடு என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 21 ஆம் நாள் இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாகவும் சுகாதார நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

கொசு (நுளம்பு) மூலம் பரவும் யானைக்கால் நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்கள் தற்போது இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கொசு மூலம் பரவும் மற்றுமோர் தொற்று நோயான டெங்கு காய்ச்சலை ஒழிப்பது தொடர்பான சவாலை தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ளது.