You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் பதவி, இடைநடுவில் வெற்றிடமாகும் பட்சத்தில், அதற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தேர்வு செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இன்று இடம்பெற்றது.
இலங்கையில் இதற்கு முன்பு முதல் முறையாக நாடாளுமன்றத்தால் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' தெரிவு 1993ஆம் ஆண்டு இடம்பெற்றது.
அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, கொழும்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தருணத்தில், விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பம், இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவிக் காலத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அரசியலமைப்பின் 38 (01) (அ) ஷரத்திற்கு அமைய, புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும்.
இதன்படி, 1993ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஏகமனதாக டீ.பீ.விஜேதுங்கவை, இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நியமித்தது.
அவர், 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, டீ.பீ.விஜேதுங்க பதவியை துறந்தார்.
அதையடுத்து, நாட்டை ஆட்சி செய்ய சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, தனது இரண்டு பதவி காலங்களையும், மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டு பதவி காலங்களையும், மைத்திரிபால சிறிசேன, தனது ஒரு பதவி காலத்தையும் முழுமையாக நிறைவு செய்திருந்தனர்.
எனினும், 2019ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு தப்பிச் சென்று, பின்னர் தனது ராஜினாமாவை அறிவித்திருந்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவிக் காலத்தில் ராஜினாமாவை அறிவிக்கும் பட்சத்தில், அரசியலமைப்பின் 38 (01) (ஆ) ஷரத்திற்கு அமைய, புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர், தனது பதவி காலத்தில் ராஜினாமா கடித்தை கையளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதையடுத்து, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ஆம் தேதி கடமைகளை பொறுப்பேற்றார். எனினும், வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு ஒருவரை நாடாளுமன்றம் உடனடியாக கூடி, தெரிவு செய்ய வேண்டும்.
இம்முறை ரணில் விக்ரமசிங்கவையோ வேறு ஒருவரையோ ஏகமனதாக தெரிவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்தி, ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்தார். இதையடுத்து, நேற்றைய தினம் வேட்பு மனுக்கள் கோரப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், ஜனாதிபதி தேர்வுக்கான போட்டிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரை வாக்கெடுப்பில் மூலம் தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.
இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டது முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
டீ.பி.விஜேதுங்க ஏகமனதாக தெரிவாகியிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வாக்குகளின் ஊடாக இன்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
டீ.பி.விஜேதுங்க, ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரணசிங்க பிரேமதாஸ உயிரிழந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக 1993ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி பதவிக்காக, அதே கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்