You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: பணவீக்கம் விரைவில் 40 சதவீதமாக அதிகரிக்கும் - மத்திய வங்கி ஆளுநர்
(இன்றைய (மே 20) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும் தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதன் காரணமாக தான் ஏற்கெனவே கூறியதைப் போன்று பதவியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "வெளிநாட்டு நாணயமாற்றுச் சட்டத்தின்படி, ஒருவர் கைகளில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய அளவான 15,000 டாலர்களை 10,000 டாலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தைக் கையிருப்பில் வைத்திருப்போர் மற்றும் முறையற்ற வழிகளில் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும்.
தற்போது 30 சதவீதமாக உள்ள பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. எனினும், நாணயக்கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில தீர்மானங்கள் மூலம் எதிர்வருங்காலங்களில் பணவீக்கத் தாக்கங்கள் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலிகக் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளல், வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் எதிர்வரும் வாரத்தில் மருந்துப்பொருட்களைக் கொள்முதல் செய்யவிருப்பதுடன், அடுத்த வாரம் எரிபொருள் மற்றும் எரிவாயுக் கப்பல்களுக்கான கொடுப்பனவை மேற்கொள்ளவிருப்பதால், தற்போதைய நிலை மேலும் சுமுகமடையும் என எதிர்பார்க்கின்றோம்" எனவும் அவர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது"
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
மேலும், "எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர்களாக நியமிக்கப்படுவோர், சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எரிவாயு நெருக்கடி தீர ஒன்றரை மாதம் ஆகும்"
எரிவாயுக்கான நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லும் என்று தெரிவித்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், நாள்தோறும் 35,000 சிலிண்டர்களை மட்டும் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், "சீரற்ற வானிலையினால் ஏற்கெனவே நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தாய்லாந்து எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதத்தின் முதலாவது வாரமளவில் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்