You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: "காலி முகத்திடலில் வன்முறையை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது உண்மையே" - முன்னாள் அமைச்சர்
(இன்றைய (மே 19) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்றவர்களை தடுக்க வேண்டாம் என, பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் உண்மை என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் சுட்டிக்காட்டியதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதை அறிவிப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அவரை வழியனுப்பி வைப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கூட்டம் நிறைவடைந்தபோது சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்ததை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் அழுத்தம் மற்றும் தூண்டுதலை தொடர்ந்தே ஒருசிலர் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி சென்றார்கள்.
அலரி மாளிகைக்கு வந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி செல்லும்போது நான் அலரி மாளிகையில் இருந்தேன். அவர்களை தடுக்குமாறு அறிவுறுத்தினேன். எவ்வித பிரச்னையும் இல்லை, வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே இதுதொடர்பாக உரையாடினேன்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை" என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?"
நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன் என, பிரதமர் ரணில் விக்ரம்சிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு மரிக்கார் எம்.பியின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"பிரதி சபாநாயகராக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்று நான் கூறியதை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எனது யோசனையை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்காக நான் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இதேபோல் ஆளுங்கட்சியினரும் எனது யோசனைகளை கேட்பார்கள், அதற்கு ஒரு வாரம் தேவை. அந்த ஒரு வாரத்தைத் தாருங்கள். ஆளுங்கட்சியினரையும் சரி செய்கிறேன்" எனவும் ரணில் தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "நாட்டை நான் விற்றுவிட்டதாக 2018ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த கூறினார். 2020ஆம் ஆண்டு தற்போதையை எதிர்க்கட்சியினரும் அதனையே கூறினார்கள். எனவே, நான் இரு பக்கங்களிலும் எவரையும் பாதுகாக்கப் போவதில்லை. சட்ட ரீதியாகவே நான் செயற்படுவேன்" என அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
160 மில்லியன் டாலர்களை இலங்கை பெறுகிறது
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நேற்று 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
"ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை விரைவில் மானியம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பெட்ரோல் மற்றும் உர நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் நிதியைப் பெறுவதற்கும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் இலங்கைத் தூதுவர்களுடன் கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்