You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பொருளாதார நெருக்கடி: "யாரோ இருவரால் மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது" - அர்ஜூன ரணதுங்க
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்? தவறு எங்கே நடந்தது? என்பது குறித்து பிபிசியுடன் விரிவாக கலந்துரையாடினார், இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க. அவரின் பேட்டியிலிருந்து:
கேள்வி: இந்த நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு காரணமான தவறு எங்கு நேர்ந்தது?
பதில்: அது ஒரு நீண்ட கதை. ஆனால், 2019-ல் புதிய அதிபர், அறுதிப் பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த போது, இரண்டு உறுப்பினர்களை விலைக்கும் வாங்கி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருந்தார். அயல் நாட்டினரைக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வந்து, அசைக்க முடியாத வலிமை பெற்றிருந்தார். திறமையில்லாத அராஜக அரசு என்று தான் எனக்குத் தோன்றியது. தன்னிடம் அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் சென்றது, நாட்டுக்குக் கேடு வருவதைக் கூடக் காண முடியாத அளவுக்குக் கண்ணை மறைத்துவிட்டது.
கேள்வி: அப்படியானால், இதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: ஒரு தலைவன் என்று இருக்கும் போது, தலைவன் தான் பொறுப்பு. கிரிக்கெட்டில் கூட, வெற்றியோ தோல்வியோ, தலைவன் தான் பொறுப்பாகிறான். அணியினருக்கும் பொறுப்புண்டு. அதிபர், பிரதமருடன் அமைச்சரவையும் திறமையின்றிச் செயல்பட்டனர். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கல் வரவிருப்பதை உணர்ந்தேயிருந்தோம். ஆனால், எதிர்க்கட்சியும் பொருளாதார வல்லுநர்களும் கூறிய கருத்துகளுக்கு அரசு செவி மடுக்கவில்லை. தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது. என்னைப் பொறுத்தவரை, அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவை தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
கேள்வி: இந்த நிலையைத் தவிர்த்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஆரம்பகட்டத்தில் சர்வதேச செலாவணி நிதியத்தை அரசு நாடவில்லை என்பது என் கருத்து. பிற நாடுகளையும் பிற அமைப்புகளையும் உதவி கோரியிருக்கலாம். ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அவற்றைச் செலுத்துவதைக் காட்டிலும் முறைப்படுத்தியிருக்கவேண்டும். இது திறமையின்மையைத் தான் காட்டுகிறது.
யாரோ இருவர் செய்த தவறினால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்களித்த 69 லட்சம் பேர் மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் இறங்கிப் போராடியவர்கள் அனைவரும் அரசியல் நோக்கம் கொண்டவர்களல்லர். அவர்கள் நாட்டின் இளைய சமுதாயத்தினர்.
இரண்டு ஆண்டுகளாக அவதிக்குள்ளாகியிருந்து, இந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டே ஆகவேண்டுமென்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள். தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட அதிகாரம் இழந்த நிலையில், சாலையில் இறங்கிப் போராட விரும்பியதை நானே பார்த்திருக்கிறேன். இது அவர்களுக்குப் புரியவில்லை என்பது தான் துரதிருஷ்டவசமானது.
கேள்வி: நீங்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்திருக்கிறீர்கள். எரிபொருள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்று நினைக்கிறீர்கள்?
பதில்: 2015 முதல் 2020 வரை நாங்கள் அரசாங்கத்தில் இருந்தோம். இப்படி ஒரு சூழலை நாங்கள் எதிர்கொண்டதில்லை. மக்களுக்கு பல சலுகைகளும் கூட வழங்கினோம். ஒரு நாட்டை நடத்த மட்டுமன்று அரசு. மக்களின் நலனைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது.
நான் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் விலையைக் குறைத்தோம். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது நாங்களும் சற்று விலையை உயர்த்தும் போக்கைக் கொண்டு வந்தோம்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் ஐந்து ரூபாய் பெட்ரோல் விலை உயர்த்தியபோது இந்தப் பிரதமர், பைக்கில் போகத் தொடங்கினார். ஆனால், இப்போது துரதிருஷ்டவசமாக நாடு முழுவதும் தவிக்கிறது. ஆனால், அவர்களுக்கு இலவசமாக அநேகமாக எல்லாமே கிடைத்துவிடுவதால், மக்களின் துயரத்தை அவர்கள் உணர்வதில்லை.
கேள்வி: நீங்கள் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள். அதன் நிலை இப்போது என்ன?
பதில்: நாங்கள் சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருந்தோம். எங்களிடம் மின்சாரம் இல்லாத நிலையில், போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், எப்படி பயணிகளை வரச்சொல்ல முடியும்? இது தான் இவர்களின் திறமையின்மை.
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க வேண்டும். சாலையில் இறங்கிப் போராடுபவர்கள் பெரிதாக எதையும் கேட்கவில்லை. குழந்தைகளுக்கான பால் பௌடர், சமையல் எரிவாயு, எரிபொருள் இவற்றின் விலையைக் குறைக்கச் சொல்லிக் கோருகின்றனர். உணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. சோப்பு கூட நூறு ரூபாய் விலை உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மக்கள் கேட்பது எல்லாம் அன்றாடத்தேவைக்கான பொருட்களின் விலை இறக்கம். இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணராதது தான் கொடுமை.
நாடாளுமன்றத்தில் சிரிக்கிறார்கள். அவர்கள் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து விவாதிப்பதை விடுத்து, தங்கள் பெரும்பான்மையைத் தக்க வைப்பது குறித்துக் கவலை கொண்டுள்ளார்கள். நல்ல வேளை நான் அங்கு இல்லை என்பது ஆறுதலளிக்கிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியதை விட்டு விட்டார்கள். அரசாங்கம் இப்போதும் கூட, ஆமாம், சிக்கல் உள்ளது, மீண்டு வருவோம் என்று தோள் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. இதனால் தான் மக்கள் கோபமடைந்து சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள்.
கேள்வி: சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு உங்களிடம் ஏதேனும் யோசனை உள்ளதா?
பதில்: நாட்டின் உயர்மட்ட புத்த/குருமார்கள் கூட இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. செயல்படாத அரசு பெயரளவில் இருந்தால் மக்களுக்குத் துயரம் தான் தொடரும். ஆட்சியாளர்களில் சிலர் உட்பட நாடு முழுவதும், இந்த அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழும்பியுள்ளனர். ஆனால், ராஜபக்ஷ இதற்குச் செவி மடுக்க மாட்டார்.
கேள்வி: அரசியலில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள்?
பதில்: ஆம். இந்த அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, நான் ஒரு சிறிய ஓய்வெடுக்க விரும்பினேன். இரண்டாண்டுகள் ஓய்வெடுத்தேன். இப்போது அரசியல் அமைப்பைத் தாண்டிய ஒரு தேசிய அமைப்பை உருவாக்க விழைகிறேன், கடந்த 19 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்தேன். 19 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆனால், வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்திருந்தேன். எஸ்.எல்.எஃப்.பி-ல் இருந்தேன். அதில், என் தந்தை, ஒரு மூத்த உறுப்பினராக இருந்தார்.
அதன் பிறகு, சரத் ஃபொன்சேகாவின் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜெ.வி.பி)-ல் இணைந்தேன். அதன் பிறகு யூ.என்.பி-ல் இணைந்தேன். காரணம், நான் நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வை நோக்கியே சென்றேன். அரசியல் நோக்கம் இல்லை. பல கட்சிகளிலும் இருந்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு தீர்வைத் தருவது போல் இருந்தாலும், நாட்டின் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை.
அதனால் தேசிய அளவில் ஒரு இயக்கத்தை உருவாக்க எண்ணியுள்ளேன். பல அமைப்புகளுடன் இணைந்து நாட்டுக்கான கொள்கைகளை வகுத்துத் தீர்வு காண விழைந்துள்ளேன். மக்களின் வரவேற்பிருந்தால் தொடர்வேன். அல்லது இப்போது போலவே மகிழ்ச்சியாக இருப்பேன்.
கேள்வி: நாடு தற்போது ஒரு சிக்கலில் உள்ளது. ஒரு இடைக்கால அரசு அமைந்தால் நீங்கள் ஏதேனும் பொறுப்பேற்பீர்களா?
பதில்: இப்போது நான் நாடாளுமன்றத்தில் இல்லை. எனவே நான் பொறுப்பேற்பது எளிதன்று. ஆனால், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன். எனவே, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஏற்பேன், ஆனால், ராஜபக்ஷவுடன் நிச்சயமாக இல்லை.
கேள்வி: இதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
பதில்: இந்தியா பெரிய அளவில் உதவி வருகிறது. இது முதல் முறையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, இரு தரப்பு உறவுகள் குறித்து, இந்தியப் பிரதமருடன் நடந்த பல கலந்துரையாடல்களில் நானும் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா வழங்கிய கடனுதவியால் மட்டக்களப்பு விமான நிலையத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அளித்த நிதியுதவியால் தொடங்கப்பட்ட அத்திட்டத்தை இவர்கள் கை விட்டனர். இந்த ராஜபக்ஷ அரசு, சிறுபான்மையினர், கட்சிகள், மதங்கள் எனப் பிரித்தாளும் முறையைக் கை கொள்கிறார்கள். நான் இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறேன்.
தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள் என அனைவருடனும் நான் பணியாற்றுகிறேன். அனைவரும் சேர்ந்தது தான் இலங்கை என்ற எண்ணம் கொண்டவன் நான். கடந்த 20 ஆண்டுகளாக, இந்த உணர்வை வேரறுக்கிறார்கள் ராஜபக்ஷ அரசினர்.
இப்போது இந்தத் தலைமுறையினர், காலி முகத் திடலுக்குச் சென்றால் பார்க்கலாம். நான் அரசியல்வாதியாக இருப்பதால் நான் செல்வதில்லை, ஆனால் ஒரு முறை கிரிக்கெட் வீரர்களுக்கான நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். அப்போது, சிங்கள, தமிழ், இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக உண்டு உறங்கி ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் வாழ்கிறார்கள்.
இந்த நாட்டின் இளைஞர்கள் இலங்கைவாசிகளாகத் தான் தங்களை உணர்கிறார்கள். அவர்களிடையே பேதமில்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பொருளாதாரச் சீரழிவிலும் இந்த ஒற்றுமை மிகப்பெரிய பலமாகும். இது தொடர்ந்தால், சிக்கலிலிருந்து மீள முடியும். நாடு வளம் பெறும்.
கேள்வி: இலங்கையில் தற்போது கிரிக்கெட்டின் நிலை எப்படி இருக்கிறது?
பதில்: இலங்கையில் இப்போது கிரிக்கெட் என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கிரிக்கெட்டின் நிலை மிகவும் தாழ்ந்து விட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற போது விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கூட நான் இது பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால், ராஜபக்ஷ அரசு எதற்கும் செவிமெடுப்பதில்லை.
இந்த நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் திறமைசாலிகள். அவர்களை நிர்வகிப்போரிடம் தான் சிக்கல். நாட்டின் பெருமையை முன்னிறுத்தாமல் பணம் சேர்க்கும் நோக்கில் உள்ளவர்களே 2015 முதல் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நிர்வாகத்தில் இருந்து வருகிறார்கள்.
பண முறைகேடுகள் நிறைந்துள்ளன. இவர்கள், யார் அமைச்சராக வந்தாலும் அவரையும் பிடித்துப் போட்டு விடுகிறார்கள். நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்ற போது, இவரது பிரதமர், பெரியப்பா அதிபர், எனவே இவர் துறைக்கு எதுவாகிலும் செய்வார் என்று நம்பினேன்.
ஆனால் இவரும் ஊழல் பேர்வழிகளிடம் சிக்கிவிட்டார். எனவே, கிரிக்கெட் மிகவும் தரம் தாழ்ந்து போனது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில், தகுதிச் சுற்று ஆட்டங்களில் எங்கள் வீரர்கள் பங்கு பெற வேண்டியுள்ளது. கிராமங்களிலும் வயல்வெளிகளிலும் பெண்கள் கூட மிகத் திறமையாகக் கிரிக்கெட் விளையாடக்கூடியவர்கள் கிடைப்பார்கள், ஆனால், நிர்வாகம் சரியில்லாததால், அனைத்தும் வீணாகின்றன.
கேள்வி: நிர்வாகத்திற்கு உங்களிடம் ஏதேனும் யோசனைகள் உள்ளனவா?
பதில்: கிரிக்கெட்டை மீட்க ஆறு மாதங்கள் போதும். அதைத் தான் 2015-ல் நாங்கள் முயன்றோம். அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரான நவீன் திஸனாயக-வை நியமித்தோம். ஒரு இடைக்கால ஆணையம் அமைத்தோம். இரண்டாண்டுகள் இந்த ஆணையம் கிரிக்கெட்டை நிர்வாகம் செய்ய ஐசிசியுடனும் பேசினோம்.
எங்களிடம் 136 வாக்குகள் இருக்கின்றன. இந்தியாவிடம் 20, ஆஸ்திரேலியாவிடம் சுமார் 50. ஆனால் இங்கு ஊழல் வாக்குகள் உள்ளன. அவர்களின் வாக்குகள் கிரிக்கெட்டுக்காகவோ நல்ல வீரர்களுக்காகவோ அல்லாமல் ஊழலுக்குத் துணை போகின்றன. அரசியலமைப்பில் மாற்றம் செய்து இதை மாற்ற நாங்கள் முயன்றோம்.
ஆனால், தேசிய அரசு அதிகாரம் பெற்று, மறு தேர்தல் நடத்தியது. துரதிருஷ்டவசமாக, அது அப்படியே முடங்கியது. இப்போது புதிய அரசு அமைந்தால், நான் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமானால், அல்லது நான் அரசில் பங்கெடுப்பதாக இருந்தால், கிரிக்கெட்டை மீட்டெடுப்பதை ஒரு நிபந்தனையாகவே வைப்பேன். அது நடக்கவே பிரார்த்திக்கிறேன். நம்புகிறேன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்