இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே சம்பவம்?

பட மூலாதாரம், EPA
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் நாடு எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார நிலைமையை அரசு கையாளத் தவறியதாகக் கூறி ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்தன. இந்த நிலையில், முதல் முறையாக துப்பாக்கி பிரயோகம் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக கேகாலை - ரம்புக்கன போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முக்கிய இறக்குமதிகளுக்கு பணம் இல்லாமல் போனதில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிரான உணர்வை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தாலும் பதவி விலக மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அவர் புதிய அமைச்சரவையை நியமித்தது பல இலங்கையர்களை கோபப்படுத்தியது. இலங்கையின் பிரதான எரிபொருள் சில்லறை விற்பனை விலையை ஏறக்குறைய 65% அளவுக்கு அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
15 மணி நேர போராட்டம்
ரம்புக்கன மக்கள் எரிபொருள் கோரி சுமார் 15 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசி சிங்கள சேவையின் ரங்க சிறிலால் தெரிவித்துள்ளார்.
"ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. அவர்கள் சில டயர்களுக்கு தீ வைத்தனர், அதனால் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பிற பொருட்களை போராட்டக்காரர்கள் எறிந்ததாகவும், அதில் பல காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மறுபுறம் காயமடைந்த போராட்டக்காரர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சுடப்பட்டிருக்கலாம் என கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் மரணத்திற்கான சரியான காரணத்தை பிரேத பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.
சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள்
இதற்கிடையே, ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள், தலைநகர் கொழும்பை கண்டி நகருடன் இணைக்கும் அருகிலுள்ள நெடுஞ்சாலையை மறித்து டயர்களை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
1948இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, தீவு நாடான இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
இது வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையின் ஒரு பகுதியாகும், இந்த நிலைமை காரணமாக, இலங்கையில் பிரதான உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாது, இது கடுமையான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அதிக விலையேற்றத்துக்கு வழிவகுக்கிறது.
மறுபுறம் இலங்கையின் பல மாவட்டங்களில் அரை நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மின்வெட்டு, பொதுமக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆர்ப்பாட்டங்கள் 2019இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு பிரபல்யத்தில் ஒரு பெரிய திருப்புமுனையைக் குறிக்கிறது,
இலங்கையில் நிலையான ஆட்சி, வலுவான சக்தியுடன் நாட்டை ஆளுவோம் என உறுதிமொழி அளித்து ஆட்சியைப் பிடித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
இதேவேளை, ஆட்சிக்கு வந்ததும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரை அமைச்சரவையில் சேர்த்தது, ஆளுகையில் மலிந்து ஊழல் காணப்பட்டதாக எழுந்த சர்ச்சை போன்றவை கோட்டாபய ஆட்சி மீது எதிர்கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்த காரணமாக அமைந்தது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ராஜபக்ஷ ஆகியோர் தங்களுடைய அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்களை சேர்த்துள்ளனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"புதிய அமைச்சரவையில்" ராஜபக்ச சகோதரர்களான சமல் மற்றும் பசில் ராஜபக்ஷ, அவர்களின் மருமகன் நாமல் ராஜபக்ஷ இடம்பெறவில்லை. அவர்கள் முன்னர் முக்கிய இலாகாக்களை வகித்தனர். ஆளும் கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கு எதிராக மக்களின் கோபம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி கோட்டாபய அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீங்கலாக மற்றவர்கள் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்தனர். இதைத்தொடர்ந்து ஏழு அமைச்சர்களும் அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை 17 பேர் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












