You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் - காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்
1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.
2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.
3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.
4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.
5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.
6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். 'நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்' என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.
7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,
8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.
9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.
10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.
11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.
12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.
13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.
14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்