You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் அவசரநிலை - இது எப்படியிருக்கும்? 300 வார்த்தைகளில் விளக்கம்
இலங்கையில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 2) அமலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.
மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள இடத்தை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அவசரகால நிலைமை என்றால் என்ன?
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155ஆவது உறுப்புரையினூடாக அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்தப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் என்பது சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இலங்கையில் இருந்து வருகிறது.
அவசர காலம் என்பதனை - விதிவிலக்கான சந்தர்ப்பம், ஆபத்து அல்லது அனர்த்தம் தெளிவானதாக காணப்படும் சந்தர்ப்பம் என பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் வரைவிலக் கணப்படுத்துகிறது. இச்சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலைக் கையாளும் பொருட்டு சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்கள் அரசுக்கு வழங்கப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியவசியத் தேவைகள் என்பனவற்றைப் பேணும் பொருட்டு - அவசரகால நிலையை, ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்.
அவசரகால நிலைமையின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கான தத்துவம் ஜனாதிபதிக்கு உள்ளது. யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்குவது, எவ்வாறான நடைமுறைகளையெல்லாம் அமுல்படுத்துவது அல்லது நீக்குவது என்பது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை அவர் உருவாக்க முடியும். அல்லது வலுவில் இருக்கின்ற ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தலாம்.
ஒரு மாத காலத்துக்கு வலுவிலிருக்கும் வகையிலேயே அவசரகால நிலைமையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி 14 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொள்தல் வேண்டும். அனுமதி கிடைக்காது விட்டால், அவசரகால நிலை இல்லாமல்போகும். ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றின் அனுமதியைப் பெறுவதன் ஊடாகவே, அவசர கால நிலையை நீடிக்க முடியும்.
என்னென்ன உரிமைகளுக்கு ஆபத்து?
அரசியல் யாப்பினூடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான;
· ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராக இருத்தலுக்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரம் உட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துறைவராக இருத்தல் (சரத்து - 10)
· ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தல் ஆகாது (சரத்து - 11) ஆகியவை தவிர்ந்த ஏனைய அனைத்து அடிப்படை உரிமைகளும், அவசரகால நிலைமையின் கீழ் மட்டுப்படுத்தப்படும்.
சுமந்திரன் எம்.பி கோரிக்கை
இந்த நிலையில், "அவசரகால நிலைமை பிரகடனத்தின் ஊடாக கொண்டுவரப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமானது, பொதுமக்களின் பாதுகாப்புக்காவே அமுல்படுத்தப்படுதல் வேண்டும், ஆனால், பொதுமக்களை அடக்குவதற்காகவே, அவசர கால நிலை பிரகடனத்தின் ஊடாக, அந்த கட்டளைச் சட்டத்தை ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார்" என்கிறார் மூத்த சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.
மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதற்காக அவசர கால நிலைமையின் மூலம் இந்தக் கட்டளைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார். எனவே அவசர கால நிலைமையை இல்லாமல் செய்யுமாறு ஜனாதிபதியிடம் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்