You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய ஒருநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.
நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. அதிகபட்சமாக, வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன.
பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனாரத் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், "பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கவும் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவில் வெளியானது.
நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேகநபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும்.
இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என வழக்குரைஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், பொதுமக்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.
அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தற்போது குறைபாடுகள் காணப்படுவதாக கூறிய அவர், அதை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றார்.
இதனூடாக பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
ஒரு விதத்தில் இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் இந்த சட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
எனினும், இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்