இலங்கை வீதிகளில் ராணுவம் - 36 மணி நேர ஊரடங்கு உடனடி அமல்

இலங்கை இன்று (ஏப்ரல் 2) முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இன்று (ஏப்ரல் 2) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை ( ஏப்ரல் 4) அதிகாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையில், நாடு முழுவதும் சுமார் 13 மணித்தியாலங்களை கடந்த மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த நிலையில், கடந்த 31ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, பாதுகாப்பு பிரிவினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பெரும்பாலானோர் காயமடைந்ததுடன், 390 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு இதனால் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 50திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்றைய தினம் அவசர கால சட்டத்தை அமல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நாளை போராட்டம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (03) நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளத்தில் விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்கு பெருமளவிலான ஆதரவு வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்த ஊரடங்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசாங்கத்தின் பதில்

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவது பொதுமக்களின் ஜனநாயக உரிமை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போர்வையில், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வர்த்தக நிலையங்களை உடைத்தல் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு மத்தியில், அமைதியாக இருப்போரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்யும் போது, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு போலீஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இலங்கை அவசரகால நிலைமை எப்படியிருக்கும்?

இலங்கையில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்;வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேக நபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும்.

இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

போராடும் உரிமையை இழக்கும் பொதுமக்கள்

இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், பொதுமக்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குவதே இந்த வர்த்தமானியின் நோக்கம் என சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தற்போது குறைபாடுகள் காணப்படுவதாக கூறிய அவர், அதை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இதனூடாக பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

ஒரு விதத்தில் இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையி;ல இந்த சட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :