இலங்கைத் தமிழர் நிலை: போராடி போராடி உறவுகளை காணாது முடங்கிய செல்வராணி

செல்வராணி
    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன போதிலும், அதனால் ஏற்பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட வலிகளும் இன்றும் அவ்வாறே இருந்து வருகின்றன.

போர் இடம்பெற்ற மற்றும் அதன் பின்னரான காலப் பகுதிகளில் பல்வேறு காரணங்களால் தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்றும் வீதியில் போராடி வருகின்றனர்.

'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்' என்று அழைக்கப்படும் இவர்களின் உறவினர்கள், இன்றும் தமது உறவுகளை தேடி போராடி வருகின்ற நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட பலர், போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், உடலில் வலுவின்மை போன்ற காரணங்களில் பெற்றோர் போராட முடியாத நிலைமைக்கு உள்ளாகின்றனர். அதேவேளை, தமது உறவுகளை தேடி போராட்டங்களை ஆரம்பித்து, வீதிகளில் போராடி போராடி, இறுதி வரை காணாமல் போன உறவுகளை கண்டறிய முடியாது, இன்று வரை 108 பேர் உயிரிழந்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் சங்கம் தெரிவிக்கிறது.

இவ்வாறு போராடி வரும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணொருவரின் சோக கதையே இது. இவர் தங்கராசா செல்வராணி வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் வாழும் இவருக்கு வயது 70. 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது வீட்டிலிருந்து அனைத்து ஆண்களையும் தொலைத்த இந்த பெண், அவர்களை தேடி இன்றும் போராடி வருகின்றார்.

தங்கராசா செல்வராணி, தனது மகன், பேரன் மற்றும் மருமகன் ஆகியோரையே இவ்வாறு தொலைத்து, தேடி வருகின்றார். தனது மருமகனை இராணுவத்தினர் நேரடியாகவே வீட்டிற்கு வந்து அழைத்து சென்ற நிலையில், அவர் காணாமல் போயுள்ளதாக செல்வராணி தெரிவிக்கிறார்.

அதேபோன்று, தனது மகன் மற்றும் பேரன் ஆகியோர் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்கு சென்ற வேளையில், திடீரென காணாமல் போனதாகவும் அவர் கூறுகிறார்.

தனது மகன் மற்றும் பேரன் ஆகியோர் காணாமல் போன இடத்தில், இலங்கை பாதுகாப்பு பிரிவினர் நடமாடியமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 2008 முதல் தொடங்கிய தேடல், இன்றும் தொடர்ந்து வருவதாக கூறுகிறார் செல்வராணி.

எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, செல்வராணி ஒரு இடத்திலேயே முடங்கி விட்டார். வயது முதிர்வு மற்றும் நோய் தாக்கம் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

உறவுகள்

பட மூலாதாரம், BBC Sport

தனது உறவுகள் காணாமல் போன தருணம் முதல் போராட ஆரம்பித்த இவர், கடந்த சில வாரம் வரை போராடி வந்தார். எனினும், கடந்த சில வாரங்களாக ஒரு இடத்திலேயே முடங்கி விட்டார் செல்வராணி.

''சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். ஒரு பிள்ளையும் இல்லாம இன்றைக்கு இருக்குறேன். போகாத இடமும் இல்ல. கூப்பிடாத யாரும் இல்ல. ஒருக்கா எங்கட பிள்ளைகள என்ன ஏதுனு பாத்துருவோனு நாங்களும் படாத கஷ்டம் முழுக்க பட்டு, இன்னும் தான் ஒரு முடிவும் இல்லையே. சர்வதேச சமூகத்தை கூப்பிட்டு, கூப்பிட்டு மண்டாடிக் கொண்டிருக்கோம். ஒரு முடிவும் எங்களுக்கு கிடைக்குது இல்லையே..." என கண்ணீர் மல்க செல்வராணி கூறுகின்றார்.

காணாமல் போனோரின் உறவுகளுக்கு நட்டஈடு வழங்குவதாகவும், மரண சான்றிதழ் வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு குறித்தும் செல்வராணி கருத்து வெளியிட்டார்.

உறவுகள்

''கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன். நான் வேண்ட மாட்டேன். எனக்கு பிள்ளைகள் தான் தேவை. என்னன்டு அவங்க மரண சான்றிதழ் தருவாங்க. எங்கட பிள்ளைகள யார் கொண்டு போன, எவர் கொண்டு போன, என்ன நடந்தது என்டு யாராச்சு பார்த்தா எங்களுக்கு மரண சான்றிதழ் தர போறாங்க. பிள்ளைகள வச்சுக் கொண்டு தான் தாறாங்களோ? வைக்காம தாறாங்களோ? யார் கண்டது. மரண சான்றிதழுக்கு நான் கையொப்பம் வைக்க மாட்டேன்" என அவர் குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜெனீவாவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் தற்போது ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான தருணத்திலேயே, தமது உறவுகளை தேடி போராடிய செல்வராணி, சுகவீனமுற்றுள்ள இந்த தருணத்தில் இவ்வாறு தனது கவலையை பகிர்ந்துக்கொண்டிருந்தார். இலங்கையினால் வழங்கப்படுவதாக கூறப்படும் நட்டஈடு மற்றும் மரண சான்றிதழ்களை நிராகரித்த அவர், தனது பிள்ளைகளை இறுதி நொடியிலேனும் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: