யுக்ரேன் - ரஷ்யா மோதலால் இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிப்பு - எப்படி ?

இலங்கை சுற்றுலா
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

தெற்காசிய நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்ற போதிலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணிகளினால், சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு, நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

இந்த நிலையில், யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

உள்நாட்டு போருக்கு பிறகு மோசமாகும் நிலை

சுமார் 30 வருட காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இலங்கையின் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து வந்தது. வருடாந்தம் சுமார் 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வகைத் தர ஆரம்பித்திருந்தனர்.

எனினும், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னைய ஆண்டான 2018ம் ஆண்டு இலங்கைக்கு 2,333,796 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

மாதமொன்றிற்கு சுமார் ஒரு லட்சம் முதல் 2 வரையான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அது ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னராக காலத்தில் குறைந்தது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 244,328 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னராக மே மாதம் 37,802 சுற்றுலா பயணிகளாக குறைவடைந்திருந்தது.

இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, பாரிய சிரமத்திற்கு மத்தியில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது. 2019 டிசம்பர் மாதம் 241,663 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தார்கள். கடந்த 2019ம் ஆண்டு இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,913,702 ஆக பதிவாகியிருந்தது.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

கடந்த, 2020ம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களிலும் 2 லட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகள் பதிவான நிலையில், மார்ச் மாதம் நாட்டில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இலங்கைக்கு ஒரு சுற்றுலா பயணி கூட வருகைத்தரவில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட் பரவலுக்கு மத்தியில் 393 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.

2020ம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாக 507,704 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர். எனினும், 2021ம் ஆண்டு இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது. 2021ம் ஆண்டு முழுவதும் 194,495 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சற்று அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகைத் தந்ததை அவதானிக்க முடிந்தது.இதன்படி, டிசம்பர் மாதம் 89,506 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.

அதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 82,327 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 96,507 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாததே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளதாக பதிவாகியுள்ளது. எனினும், தற்போது மேலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக அவதானிக்க முடிகின்றது.

ரஷ்ய - யுக்ரேன் மோதலினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு

இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு 2022ம் ஆண்டு அதிகளவிலான சுற்றுலா பயணிகள், தற்போது யுத்தம் நிலவி வரும் ரஷ்யாவிலிருந்தே வருகைத் தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ரஷ்யாவிலிருந்து இந்த ஆண்டு 28,818 சுற்றுலா பயணிகள் முதல் இரண்டு மாதங்களிலும் வருகைத் தந்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவிலிருந்து 24,495 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 18,084 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 13,119 சுற்றுலா பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

இந்த நாடுகளுக்கு அடுத்தப்படியாக மோதல் நடைபெற்று வரும் யுக்ரேனிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 13,062 பேர் வருகைத் தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ரஷ்யா மற்றும் யுக்ரேனிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 41,880 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையினால், அடுத்தடுத்த மாதங்களில் இந்த நாடுகளிலிருந்து வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாகவே குறைவடையும் சாத்தியம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு இலங்கைக்கு வருகைத் தந்த 96,507 சுற்றுலா பயணிகளில், யுத்தம் நிலவி வரும் ரஷ்யா மற்றும் யுக்ரேனிலிருந்து மாத்திரம் 41,880 பேர் வருகைத் தந்துள்ளனர். இந்த நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்தமானது, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: