You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - இருவர் கைது
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர்.
ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளை வேன் தொடர்பில் அறியவில்லை என கூறியுள்ளதாகவும், ஆனால் வெள்ளை வேன் விவகாரத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் இருந்ததாக கூறிய அவர், குறித்த இராணுவ அதிகாரிகளின் கீழேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மொனராகலை பகுதியிலுள்ள இடமொன்றிற்கு கடத்தப்படுபவர்கள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில். துன்புறுத்தல்களின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, உடலை வெட்டி, முதலைகளுக்கு உணவாக வீசியதாகவும் அன்றைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சாரதி என தன்னை கூறி கொண்டவர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் இவ்வாறே காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதிலும், போலீஸார் விசாரணைகளை நடத்த முயற்சித்தபோது அதனை விசாரணை செய்ய வேண்டாம் என உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த ஆட்கடத்தல் விவகாரத்திற்கு போலீஸார் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பினரும் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர் கூறியிருந்தார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்கள், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த இரண்டு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பலர் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு, காணாமல் செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த இரண்டு பேரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் சாரதிகளாக பணியாற்றியிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்