இலங்கை வெள்ளம் - தமிழர் பகுதிகளில் பெரும் பாதிப்பு

இலங்கையில் வெள்ளம் - தமிழர் பகுதிகள் பெரிதும் பாதிப்பு

பட மூலாதாரம், Saravanan

இலங்கையின் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு ஒருவர் காணாமல் போயுள்ளார்.

20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 943 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 2609 குடும்பங்களைச் சேர்ந்த 8553 பேர், 90 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால் 1421 குடும்பங்கபளைச் சேர்ந்த 4848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால் 39,849 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கையில் வெள்ளம் - தமிழர் பகுதிகள் பெரிதும் பாதிப்பு

பட மூலாதாரம், Saravanan

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால் 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 51,223 குடும்பங்களைச் சேர்ந்த 1,70,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 826 குடும்பங்களைச் சேர்ந்த 2622 பேர் 20 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

வட மாகாணத்தில் 17,062 குடும்பங்களைச் சேர்ந்த 55,453 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களும் மழையுனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களே மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு, மாந்தை கிழக்கு, மணலாறு, ஒட்டுச்சுட்டான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதுடன், பிரதான சில பாலங்களும் உடைந்துள்ளன.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பெருக்கெடுத்துள்ளது.

கனகாம்பிகை குளம் பெருக்கெடுத்துள்ளமையினால், ஆனந்தபுரம், இரத்தினபுரம் பகுதிகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் வெள்ளம் - தமிழர் பகுதிகள் பெரிதும் பாதிப்பு

பட மூலாதாரம், Saravanan

இலங்கையில் தற்போது கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மாணவர்கள் இராணுவத்தின் உதவியுடன் படகுகளில் மூலம் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியிலுள்ள பிரதான பாலமொன்று உடைந்துள்ளது.

இதனால் உருத்திரபுரம் பகுதிக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் - வேலணை, ஊர்காவற்துறை, நல்லூர், கோப்பாய், சண்டிலிபாய், உடுவில், தெல்லிப்பழை, சாவக்கச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

ஊவா, சப்ரகமுவ, மத்திய, வடமேல் உள்ளிட்ட பல மாகாணங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே அதிகளவிலான வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மலையக பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக வாழ் மக்களின் இயல்வு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: