சிறிசேன உரை: "இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்"

யுத்தத்தின் போது காணப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக நிலவிய சர்வதேச அழுத்தங்களை 90 சதவீதம் தான் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை ஆற்றிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

சர்வதேச நீதிமன்றத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்த சவால்களை எதிர்நோக்கி நாட்டின் ஐக்கியம் தொடர்பிலான சவால்களை முகம்கொடுக்க நேர்ந்ததாகவும் அவர் கூறினார்.

அனைத்து சவால்களிலிருந்தும் தற்போது இலங்கை மீண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களிடத்திலும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களிடையே சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி ஊழல், மோசடி

இலங்கையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்த ஜனாதிபதி தான் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அதனூடாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமன்றி, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விலை மனுக் கோரலின் ஊடாக தடயவியல் கணக்காய்வினை மேற்கொண்டு தற்போது 05 கணக்காய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அறிக்கைகளில் வியப்படையும் வகையிலான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அந்த விடயங்களை நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் தாக்குதல்

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தம்மால் தவிர்த்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகளை தான் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவமானது, மிகவும் துன்பியல் சம்பவம் எனவும், இதைவிட தான் இந்த சம்பவம் தொடர்பில் வேறொன்றையும் கூற விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தானே அதிகாரத்தை குறைத்த ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரத்தை குறைத்துக் கொண்ட ஜனாதிபதியாக தானே வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் தனக்கிருந்த அளவற்ற அதிகாரங்களை தான் நாடாளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் நீதிமன்றத்திற்கும் கையளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

அத்துடன், 6 வருடங்களாக காணப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையை, தான் ஐந்து வருடங்களாக குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்ததையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூறினார்.

இந்த நடவடிக்கைகளை எண்ணி தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார்.

பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கையே குழப்ப நிலைமைக்கு காரணம்

இலங்கைக்கு பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், ஜனநாயக சமூக மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே தமது அரசாங்கத்தில் நிலவிய குழப்பகர நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமது அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாட்டுக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான சில பணிகளை செய்ய முடியாது போனமையை இட்டு தான் கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :