IND Vs BAN டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிந்தது: இந்திய அணி வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இப்போட்டியில் வென்றதுடன் இந்தியா தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளை ஒரு இன்னிங்ஸ் மற்றும் நூற்றுக்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதில் இரண்டு போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியாகும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நவம்பர் 14 அன்று தொடங்கியது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் மோமினல் ஹாக் தலைமையிலான வங்க தேச அணியும் மோதின.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறிய வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக வங்கதேச அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் முகமது ஷமி மூன்று விக்கெடுகளையும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 114 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 330 பந்துகளில் 243 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணிதரப்பில் இபாதத் ஹுசைன் மற்றும் மெஹதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டையும் அபு ஜாயத் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தார்.

பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்க தேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் மூன்றாவது நாளான இன்று ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டை சதம் அடித்த மயாங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியொடு ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள போதே அதிக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு வென்றுள்ளார்.

அதே போல் இது வங்க தேச அணியின் தொடர்ச்சியான ஆறாவது தோல்வியாகும்.

பிற செய்திகள்: