You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள்
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து தற்போது புத்தளத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து தமது சொந்த பிரதேசமான மன்னார் - மறிச்சுக்கட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, நேற்று இரவு 8.00 மணியளவில் புத்தளத்திலிருந்து நான்கு பேருந்துகளில் 200க்கும் மேற்பட்டோர் மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்வதற்காக பயணத்தை ஆரம்பித்தனர்.
அந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதை, அந்த பேருந்துகளில் ஒன்றில் பயணித்த முபீத் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
டயர்கள் எரிப்பு
"அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நான்கு பேருந்துகளில் நாங்கள் பயணித்தோம். இடையில் நொச்சியாகம போலீஸ் நிலையம் சென்று, எங்கள் பயணம் பற்றி தெரியப்படுத்தினோம்.
நான்கு பேருந்துகளில் ஒன்று, 50 கிலோமீட்டர் முன்னால் சென்று கொண்டிருந்தது. ஏனைய மூன்று பேருந்துகளும் குறுகிய இடைவெளியில் பயணித்துக் கொண்டிருந்தன.
அப்போது ஓயாமடுவ - தந்திரிமலை பகுதி வீதியை மறித்து டயர்கள் எரிந்து கொண்டிருந்தன. அதனால் பேருந்துகளை நிறுத்தினோம். அப்போது மூன்று பேருந்துகளில் முன்னால் பயணித்த பேருந்துமீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த பேருந்தில்தான் நானும் இருந்தேன். அந்த தாக்குதல் காரணமாக பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. உடனடியாக நிலைமையைப் புரிந்து கொண்ட ஓட்டுநர், எரிந்து கொண்டிருந்த டயர்களின் மேல் பேருந்தை ஓட்டினார். பின்னால் வந்த மற்றைய பேருந்தும் அவ்வாறே வந்தது. மூன்றாவதாக வந்த பேருந்து மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அந்த பேருந்தில் பெரியவர்கள் சிறியோர் என மொத்தம் 52 பேர் இருந்தனர்.
சம்பவம் நடக்கும் போது இரவு 11.25 மணி ஆகியிருந்தது" என்று முபீத் கூறினார்.
17 தடவை துப்பாக்கிச்சூடு
"இந்த தாக்குதல் குறித்து, முன்னால் சென்ற பேருந்தில் பயணித்த நாங்கள், 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் செட்டிக்குளம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் இடமும் பேசினோம். அவரும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பேருந்தில் 17 ரவைகள் ஏற்படுத்திய சேதங்கள் இருந்தன.
பாதிக்கப்பட்ட பேருந்து, அந்த இடத்திலிருந்து கிளம்பும் போது அதிகாலை 4.00 மணியாகி விட்டது" என்றார் முபீத்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட பேருந்தில் பயணித்த எவரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயணம்
புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி வில்பத்து வீதி ஊடாக பயணிப்பதென்றால், 47 கிலோமீட்டர் தூரம்தான் ஆகும். சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் பயணித்து விடலாம். ஆனால், தற்போது அந்த வீதி போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதனால் புத்தளத்திலிருந்து மன்னார் செல்வோர், ஓயாமடுவ - தந்திரிமலை வீதி ஊடாகவே பயணிக்கின்றனர். இந்த பாதை 274 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாகும். இந்தப் பயணத்துக்காக குறைந்தது நான்கு மணி நேரம் தேவைப்படுகிறது.
அதனால், வில்பத்து வீதியை காபட் வீதியாக புனரமைத்துத் தருமாறு இந்தப் பிராந்திய மக்கள் மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்தோரின் நிலை
மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் சுமார் 13 ஆயிரம் வாக்காளர்கள் இந்த நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டு, இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிப்போருக்கு தற்காலிக வாக்களிப்பு வசதிகள் புத்தளத்தில் செய்து கொடுக்கப்பட்டது.
ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியும் என்கிற நிலை உருவானதை அடுத்து, புத்தளத்தில் தற்காலிக வாக்களிப்பு வசதி செய்து கொடுப்பதை அரசு நிறுத்திவிட்டது.
''பிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை'' - Varadaraja Perumal Interview
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்