You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் - தேவராஜன் கருத்து
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிக் கொண்டுள்ளமையானது, இலங்கை கிரிக்கெட் சபைக்கே சவாலாக மாறியுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த பல வருடங்களாக பின்னடைவை சந்தித்த வந்த நிலையில், மூத்த வீரர்கள் இன்றி ஒரு சாதனையை இளம் வீரர்கள் படைத்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இளம் வீரர்கள் இவ்வாறான சாதனையை படைத்துள்ளமையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாரிய சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திறமையான வீரர்கள் அணிக்குள் இருக்கின்றமையை அறிந்தும், அவர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தெரிவு செய்யாதது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள்ளேயே கேள்விகள் எழுப்பப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இனிவரும் காலங்களில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களை கண்டு அஞ்சுவதற்கான சாத்திம் ஏற்பட்டுள்ளதாக நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு இவ்வாறான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கை அணி வெற்றியீட்டியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்வரும் 10 வருடங்களுக்கான இலங்கை அணி தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி இலங்கை அணி குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் நல்லையா தேவராஜன் குறிப்பிடுகிறார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 கிரிக்கெட் போட்டிகளை கொண்ட தொடர் கடந்த 27ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10 வருடங்களாக நடைபெறவில்லை.
இந்த நிலையில், 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணை மீண்டும் இலங்கை அணி சென்றடைந்தது.
எனினும், இலங்கை அணி இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மாத்திரமன்றி சர்வதேச அளவில் இது ஒரு பாரிய சர்ச்சையாக காணப்பட்டது.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்திருந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தமக்கு இந்த போட்டியில் விளையாட முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுபவம் குறைந்த வீரர்களுடனான அணியொன்றை தெரிவு செய்து, பாகிஸ்தான் விஜயத்தை எதிர்கொள்ள தயாரானது.
இதற்கமைய பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி சர்வதேச ஒரு நாள் போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும், 20-20 கிரிக்கெட் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றால் மாத்திரம் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.
எனினும், இந்த அணி உலக சாதனையை படைக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை 20-20 அணித் தலைவர் தசுன் ஷானக்க மிக திறமையான முறையில் அணியை வழிநடத்தியதாகவும், அவருக்கு கீழ் விளையாடிய அனைத்து வீரர்களும் சிறந்த முறையில் தலைமைத்துவத்திற்கு கீழ்படிந்து போட்டியை எதிர்கொண்டதாகவும் நல்லையா தேவராஜன் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் மண்ணில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட அணியாக இலங்கை அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்