You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IND Vs SA: ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி வீரர் ரோகித், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற புதிய பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முறையே 176 மற்றும் 127 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார்.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்துள்ளது.
இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முறையே 6 மற்றும் 7 சிக்சர்கள், அதாவது ஒட்டுமொத்தமாக 13 சிக்சர்களை அடித்து இந்திய அணி வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 1996இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 12 சிக்சர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
32 வயதாகும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 27 சதங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுடன் வலம் வந்தாலும், அவரால் டெஸ்ட் போட்டியில் நடுவரிசை ஆட்டக்காரராக களமிறங்கி சோபிக்க முடியாமல் இருந்து வந்தது.
இவர் முன்பு தான் விளையாடியுள்ள 27 டெஸ்ட் போட்டிகளில் வெறும் மூன்று சதங்களை மட்டுமே எடுத்துள்ள ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 39.62ஆக உள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கி பல்வேறு உலக சாதனைகளை படைத்து வருகிறார்.
குறிப்பாக இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ரோகித் சர்மா எடுத்துள்ள 303 ரன்களே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
அது மட்டுமின்றி, சுனில் கவாஸ்கருக்கு பிறகு, ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதன் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்