ஆரே: மரங்களைக் காக்க பா.ஜ.க அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்; தீவிரமடையும் போராட்டம்

மும்பையில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் அமைப்பதற்காக ஆரே எனும் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை முழுவதிலும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதி அல்ல

ஆரே காலனியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பை மேற்கொள் காட்டி ஆரே காலனியை வனப்பகுதியாகக் கருத முடியாது என மகாராஷ்டிரா அரசு கூறுகிறது.

மும்பை உயர் நீதிமன்றம் ஆரே காலனியை வனப்பகுதியாகக் கருத முடியாது என்று தீர்ப்பு அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

வனசக்தி எனும் அரசு சாரா அமைப்பு ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடுத்துள்ளது.

எதிர்ப்பை மீறி வெட்டப்பட்ட மரங்கள்

சூழலியல் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் மரங்களை வெட்டும் பணியை மேற்கொண்டது.

இப்படியான சூழலில் லக்னோவில் பேசிய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் மெட்ரோ ரயிலுக்காக மரங்கள் வெட்டப்பட்டது போன்றதுதான் இதுவும். இருமடங்காக மரங்கள் அந்தப் பகுதியில் நடப்படும் என்றார்.

மேலும் அவர், "உலகின் சிறந்த மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோவும் ஒன்று. டெல்லி மெட்ரோவில் ஒரு ஸ்டேஷன் அமைப்பதற்கு 25 - 30 மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால், அதன் பின் ஐந்து மடங்காக மரங்கள் நட்டோம். இப்போது டெல்லி மெட்ரோ சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவையாக உள்ளது" என்றார்.

பாஜக-வுக்கு எதிராகக் களமிறங்கிய கட்சிகள்

மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி இந்த ஆரேவை காப்போம் என்ற போராட்டத்தில் களம் இறங்கி உள்ளன.

பா.ஜ.கவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் களத்தில் இறங்கி உள்ளது.

இதுகுறித்து ஆதித்யா தாக்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர் ட்வீட்களில், "மும்பையின் சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கை இழிவானது மற்றும் வெட்கக் கேடானது. இதற்கு ஏன் இத்தனை வேகம் காட்ட வேண்டும்? இந்த அதிகாரிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி காஷ்மீருக்கு அனுப்பி தீவிரவாத முகாம்களை அழிக்க அனுப்ப வேண்டியதுதானே? " என்று குறிப்பிட்டுள்ளார்.

மரங்களை வெட்ட அவசரப்படுவதாக மும்பை மெட்ரோ மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அந்நிர்வாகம் மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :