You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன?
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவித்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.
ஆயுத குழுவாக ஆரம்பமான மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ரோஹண விஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.
சோஷலிச சமத்துவத்திற்கான அரசியல் கட்சி என அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியில் வேலையற்ற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் என பெரும்பாளானோர் இதில் இணைந்துக் கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் ரகசிய ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.
பிரதமராக கடமையாற்றிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ரகசிய ஆயுதக் கிடங்கு தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோஹண விஜயவீர கைது செய்யப்படுகின்றார்.
கைது செய்யப்பட்ட ரோஹண விஜயவீர, யாழ்ப்பாணத்திலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் அப்போது பாரிய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு ஏற்பட்ட கிளர்ச்சியினால் இலங்கையின் தென் பகுதி பெருமளவில் மக்கள் விடுதலை முன்னணியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடிய நிலையில், இரண்டு வார காலத்தில் இந்த கிளர்ச்சி முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இந்த காலப் பகுதியில் கொல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரோஹண விஜயவீரவை விடுதலை செய்ததுடன், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையையும் நீக்கியிருந்தது.
அதன்பின்னர், தாம் ஜனநாயக முறைக்கு திரும்புவதாக அறிவித்த பின்னணியில், அந்தக் கட்சியினர் தேர்தல்களிலும் போட்டியிட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஜயவீர, அந்த காலப் பகுதியில் 2,75,000 வாக்குகளை பெற்றிருந்தார்.
1983 கலவரத்தின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை
இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் என கூறி அந்த அமைப்பிற்கு அரசாங்கம் மீண்டும் தடை விதித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்குள் தலைமறைவாக இயங்கத் தொடங்கியது.
1987 - 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கலவரத்தினால் பெருமளவிலானோர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றது.
ரோஹண விஜயவீர கொழும்பில் வைத்து 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீள் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியாக செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி, கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பொது வேட்பாளராக களமிறங்கியவர்களுக்கு ஆதரவை வழங்கியருந்தது.
இந்த நிலையில், இந்த முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
அநுரகுமார திஸாநாயக்க யார்?
1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்துள்ளார்.
தம்புத்தேகம கல்லூரியில் கல்வி பயின்ற அவர், களனி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.
2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7ஆவது தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராக அநுர குமாரதிஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்