உலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம்

    • எழுதியவர், பா.காயத்திரி அகல்யா
    • பதவி, பிபிசி தமிழ்

அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது புகைப்பட கலை. அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, "உலக புகைப்பட தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், மொழிகளைக் கடந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களை வழங்கும் சிறந்த கலைஞர்களில் ஒருவராகப் பரிணமித்து வருகிறார் மதுரையை பூர்வீகமாக கொண்ட செந்தில் குமரன்.

கணிப்பொறி பொறியியல் துறையில் பட்டம் பெற்று , ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய அவர், புகைப்பட துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் முழு நேர புகைப்பட கலைஞராக மாறினார்.

25க்கும் அதிகமான ஆவண தொகுப்புகள், 15க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள், 2005இல், குலசேகரப்பட்டினம் தொகுப்புக்கு யுனெஸ்கோ விருது, 2007இல், லண்டன் ராயல் சொசைட்டி மூலம் உலகின் சிறந்த புவியியல் புகைப்படக்கலைஞர் விருது என்று இவரது படைப்புகளும் கெளரவ பட்டங்களும் நீள்கின்றன.

உலக பத்திரிகை அமைப்பான World Press Photo, ஆசியாவிலிருந்து தேர்வு செய்த ஆறு சிறந்த புகைப்படக் கலைஞர்களில் இவரும் ஒருவர். ஸ்ட்ரீட் போட்டோகிராஃபியில் பயணத்தை தொடங்கி இன்று ஆவண புகைப்பட கலைஞராக அங்கீகாரம் பெற்ற இவர், நாளை உலகப் புகைப்பட தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் இது.

புகைப்பட கலையால் நீங்கள் பெற்றது என்ன?

புகைப்படக்கலை எனக்கு கொடுத்தது வெறும் புகைப்படங்களை அல்ல. படங்களை தேடி அலைந்த பெரும் பயண அனுபவங்களை அது கொடுத்திருக்கிறது. அந்த பயணம்தான் என்னை நான் உணர்ந்து கொள்ளவும் சமூகத்தையும் வாழ்வையும் இயற்கையையும் அறிந்து கொள்ளவும் தூண்டின.

நீங்கள் கற்ற கல்விக்கும் தற்போது செய்யும் தொழிலுக்கும் தொடர்பே இல்லையே...

முற்றிலும் இல்லைதான். சிறு வயதில் இருந்தே எனக்கு இசை, ஓவியம், இயற்கை ஆகியவை மீது மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அதிகமான பயண அனுபவங்களும் உண்டு. பேருந்துகளின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் காட்சிகளை ரசிப்பதில் அலாதி பிரியம் எனக்கு உண்டு. visualizations எனப்படும் காட்சிப்படுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாக அந்த உணர்வு அமைந்தது. கல்லூரி பருவத்தில் கலை சார்ந்த போட்டிகளில் அதிகமாக பங்கேற்பேன்.

அதில் புகைப்பட பிரிவுக்கான போட்டி நடந்தது. என்னிடம் அப்போது கேமராவும் இல்லை புகைப்பட அறிவும் குறைவாக இருந்தது. அந்த போட்டியில் இடம்பெற்ற ஒரு முக்கியமான புகைப்படம் என்னை மிகவும் பாதித்தது. அது சூரிய அஸ்தமன காட்சி. அத்தகைய காட்சியை என் வாழ்நாளில் அதுவரை பார்த்ததில்லை.

அத்தகைய ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசையாக மாறியது. அந்தக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று அதில் ஒரு 1500 ரூபாய் பரிசு தொகை எனக்கு வழங்கப்பட்டது . அந்த தொகை மூலம் என் உறவினரிடம் இருந்து ஒரு பழைய சிறிய கேமராவை வாங்கினேன்.

அதிலிருந்து தொடர்ச்சியாக 8 மாதங்கள்வரை நான் பார்த்த அந்த சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிக்க முயன்றேன். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வெறும் சூரிய அஸ்தமனத்தை மட்டுமே படம் எடுத்து வந்தேன் . அதில் எனக்கு சூரிய அஸ்தமனத்தில் ஏற்படும் வண்ணங்கள், ஒளி, இருள் என அனைத்தையும் பற்றி ஒரு தெளிவு ஏற்பட்டது.

நாளடைவில் எனக்கு வர்த்தக ரீதியிலான புகைப்படம் மற்றும் புகைப்பட கலைகளில் ஒளியை பற்றியும் இருள் மற்றும் வெளிச்சம் தொடர்பான பல வண்ணங்கள் குறித்தும் ஒரு மிகப்பெரிய புரிதல் ஏற்பட அந்த பயிற்சிகள் எனக்குப் பயன்பட்டன.

ஒருசிறந்த புகைப்பட கலைஞரின் வேலை என்ன?

ஒரு காட்சியில் ஒன்றிப் போனால் மட்டுமே அந்த காட்சியில் இருந்து சிறந்த தருணத்தை ஒரு கலைஞனால் படம் எடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புகைப்படக் கலையில் காத்திருத்தல் என்பது மிகவும் முக்கியம்.

அது மட்டுமே ஒரு நல்ல புகைப்படத்தை நமக்கு பெற்றுத் தரும். ஒரு காட்சி என்பது எண்ணற்ற ஃப்ரேம்களை கொண்டது. அவற்றில் ஒரே ஒரு சிறந்த ஃப்ரேமை வெளியே எடுப்பதுதான் மிகச் சிறந்த கலைஞனின் திறமை.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட உங்களுக்கு புலிகளுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?

எனக்கு 10 வயது இருக்கும்போது முதல் முதலாக வந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில்தான் புலியை பார்த்தேன். பிபிசியின் புலிகள் சம்பந்தமான அந்த ஆவணப்படம் என்னை மிகவும் பாதித்தது. அப்போது ஏற்பட்ட ஆச்சர்யம், அதில் நான் பார்த்த புலியை அதன் கம்பீரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கம்பீரத்துடன் அது வீற்றிருக்கும் இடம், அது நடந்து செல்லும் விதம், பார்வை என என் மனதில் அந்தக் காட்சிகள் நிலைத்து விட்டன. எப்படியாவது காட்டுக்குள் புலியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதுதான் தூண்டியது. அதன் தொடர்ச்சியாக காட்டுக்குள் 10 வருடங்கள் அலைந்தபோதும் நான் விரும்பிய காட்சியில் ஒரு புலியைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை யானைகள் பற்றிய ஆய்வுக்காக முதுமலையில் இருந்தேன். அப்போது வால்பாறையில் இருந்து ஒரு தகவல் வந்தது. ஊருக்குள் புலி ஒன்று புகுந்து விட்டதாகவும் அதை மயக்க ஊசி போட்டு பிடித்து செல்ல என்னையும் உடன் அழைத்தனர். பத்து வயதில் பார்த்த புலியை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் ஆர்வத்துடன் வால்பாறைக்கு சென்றேன்.

ஈரமும் சாரலும் சூழ்ந்த அந்த மாலை நேரத்தில் வனத் துறையின் விலங்குகள் நல மருத்துவருடன் அந்த இடத்திற்கு சென்றபோது கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கம்புகளுடனும் ஆயுதங்களுடனும் அந்தப் புலியை சூழ்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

பெரும் கூட்டத்திற்கு நடுவே ஒரு வீட்டின் பின்புறம் சேற்றில் உருண்டு புலிக்கான வரிகளே தெரியாமல் எலும்பும் தோலுமாய் ஒரு புலி படுத்திருந்தது. கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட மக்கள் கையில் கட்டை கம்புகளுடன் கடும் கோபத்தில் புலியை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் கம்பீரமான புலியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெரும் ஏமாற்றத்துடன் முடிந்தது.

புலியின் இருண்ட பக்கங்களையும் அதன் தற்கால வாழ்வியல் சூழலையும் நான் உணர அந்தக் காட்சிகளே காரணமாகின. அந்த உணர்வும் தேடலும்தான் எனக்கு புலிகள் மற்றும் மனித மோதல்கள் பற்றிய புகைப்படத் தொகுப்பை ஆரம்பிக்க தூண்டின. கடந்த 8 வருடங்களாக அதை ஆவணப்படுத்தி வருகிறேன்.

புகைப்படக் கலையின் மிகப்பெரிய விருதுகளை பெற்ற உங்கள்வசம் நீண்ட கால திட்டங்கள் என்ன?

உலகின் புகைப்பட கலைக்கான மிக உயரிய அமைப்பான world press photo ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு புகைப்படகலைஞர்களில் நான் தேர்வானது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் . என் நிலம் சார்ந்த, இயற்கை வளம் சார்ந்த பிரச்னைகளை உலகளாவிய தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அந்த அங்கீகாரம் எனக்கு உதவியாக இருக்கும்.

தற்போது யானைகள் குறித்தும், காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பூர்வகுடிகள் குறித்தும், புவிவெப்பமயமாதல் மற்றும் அதனால் ஆழ்கடலில் ஏற்படும் மாறுதல்கள் குறித்த நெடிய ஆவணப்படத்துக்கு ஆயத்தமாகி வருகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கு கேமரா அவசியமா? மொபைல் போட்டோகிராபி இந்த துறையில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருமா?

உண்மையில் மொபைல் போட்டோகிராபி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பெரும் DSLR கேமராவினால் பதிவு செய்யப்பட முடியாத பல தருணங்களையும், காட்சிகளையும் எளிதாக இன்று வெளிக்கொண்டு வருவது மொபைல் போட்டோகிராபியே.

ஒரு சில நேரங்களில் புகைப்பட பத்திரிகையியலுக்கு இணையான சாட்சிகளை மொபைல் போட்டோகிராபி பெற்றுத் தருகிறது. DSLR, மொபைல் என்று இங்கு கருவிகள் பிரச்சனை இல்லை. காட்சிகளும் காட்சிகளின் பொருளும் கருவிகளால் தேர்வு செய்யப்படுவதில்லை. அதை புகைப்பட கலைஞன்தான் தீர்மானிக்க முடியும்.

எல்லா புகைப்படக் கலைஞர்களாலும் பொருளாதார ரீதியில் பெரிதும் சாதிக்க முடியாமல் போவது பற்றி?

உண்மையில் கடந்த சில வருடங்களாக கமர்சியல் புகைப்படக்கலையில் மிகப்பெரிய மாற்றம், போட்டிகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து குவியும் கமர்சியல் புகைப்படக் கலைஞர்களின் தாக்கத்தாலும், புகைப்படக் கலைஞர்களின் தேவைகள் குறைந்ததாலும் தொடர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புகைப்படக் கலைஞர்கள் தொழில் சார்ந்து அதை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.

புகைப்படப் பிரிவில் கேண்டிட் திருமணங்கள் தவிர்த்து பல ஏனைய பிரிவுகளில் இன்னும் பெரும் போட்டிகள் ஏற்படவில்லை, குறிப்பாக DSLR videography, பத்திரிகைகளுக்குக் படம் எடுத்துக் கொடுப்பது, தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுக்கு புகைப்படக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். கேலரி சார்ந்த தலங்களிலும் புகைப்படங்கள் விற்கப்படுகின்றன. இந்தத் தளங்களில் புகைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து செயல்பட்டால் , போட்டிகளுக்கு நடுவில் பணம் சம்பாதிக்கவும் வழி கிடைக்கும் .

புகைப்படக் கலைஞர்களுக்கான சமூக பொறுப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

புகைப்பட கலையையோ புகைப்படங்களையோ வெறும் ஒளி வண்ணங்கள் மற்றும் அழகியலுக்கான தலமாக மட்டும் பார்த்து சென்றுவிட முடியாது புகைப்படக்கலை மிகப்பெரிய ஆயுதம்.

இருபது வருடங்கள் கழித்து உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உங்களின் எந்த புகைப்படத்தை காண்பிக்க போகிறீர்கள்?

சாதாரணமாக அழகியல் சார்ந்த ஒரு காட்சியையோ ஒரு தெருவையோ புகைப்படம் எடுப்பது இன்று எளிதாகிவிட்டது. ஆனால் வெள்ளம் சூழ்ந்த சென்னையின் ஒரு சாலையை எந்த புகைப்படக் கலைஞன் பதிவு செய்திருக்கிறான் என்பதுதான் அந்தப் புகைப்படக் கலைஞனின் அரசியல், சமூகப் பார்வையை வெளிக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாளும் புகைப்படங்கள் வெவ்வேறு முகங்களை கொண்டு வருகிறது. இதன் எதிர்காலம் என்ன?

இதன் எதிர்காலத்தை கணிக்கவே முடியாது. தொழில் நுட்பம் புகைப்படக் கலையை அசுர வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றுவிட்டது. இன்று யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.

ஒவ்வொரு நாளும் எத்தனையோ கோடி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. அது எல்லாமே படங்கள்தானா ? அதற்குரிய வரையறை என்ன ? அப்படங்களுக்கு நடுவே உங்கள் படங்கள் என்ன ஆச்சரியத்தை தாங்கி உள்ளது என்பதுதான் இங்கு பெரும் கேள்வி.

தற்கால இளம் புகைப்படக் கலைஞர்களுக்கு உங்களுடைய அறிவுரை?

ஆர்வம், உற்சாகம், ஆச்சரியம் இந்த மூன்றையும் ஒரு போதும் கலைஞன் இழந்துவிடக்கூடாது. அறிவதில் ஆர்வம், செயல்படுவதில் உற்சாகம், பார்ப்பதில் எப்போதுமே ஆச்சரியம் என இப்படி ஒரு குழந்தை பார்வையோடு ஒரு படைப்பாளி சுயமாக இருக்க வேண்டும். உங்கள் படைப்புக்கான படைப்பாளியும் நீங்கள்தான் பார்வையாளனும் நீங்கள்தான்.

உங்களுடைய படைப்பின் மதிப்பே உங்களின் சுயமும், நேர்மையும்தான்.

உங்களுக்கு பிடித்த புகைப்படக் கலைஞர்கள்?

ஆரம்ப காலங்களில்.. Henri Cartier-Bresson, Sebastian Salcedo, Joseph Kudelka.

தற்போது என்னை மிக கவர்ந்த புகைப்பட கலைஞர்கள்.. Nich Nichols, Nick Brandt, Patric Brown.

மேலும் இளம் தெருபுகைப்பட கலைஞர்களுக்கு பரிசீலிக்க விரும்பும் புத்தகம்

Henri Cartier-Bresson: The Man, The Image & The World

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: