இலங்கை மலையக தமிழர்கள் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் முகாம் சுற்றிவளைப்பு

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகளவில் வாழும் மலையகத்திலும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் காணப்பட்டமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
நுவரெலியா - பிளக்பூல் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பினால் நடத்திவரப்பட்டதாக கூறப்படும் முகாமொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்தனர்.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் உள்ளிட்ட சுமார் 38 பேர் இந்த முகாமில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாகவே இந்த முகாம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பல பகுதிகளை இலக்கு வைத்து கடந்த 21ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, குறித்த சந்தேகநபர்கள் இந்த முகாமிலேயே இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த முகாமில் சஹரான் உள்ளிட்ட பலர் இறுதியாக கடந்த 17-ஆம் தேதி தங்கியிருந்துள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிளக்பூல் பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றை வாடகைக்குக்கு எடுத்து, இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக துப்பாக்கி மீள் பொருத்தும் நடவடிக்கைகளே பெருமளவில் இந்த முகாமில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாம் தொடர்பிலான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ள பின்னணியில், மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாமியர்கள் அல்லாத மாணவர்களுக்கு அரபு மொழி
ஊவா மாகாணத்தில் முஸ்லிம் அல்லாத பலருக்கு அரபு மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தகவல் வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளில், இரானை தளமாகக் கொண்டு இயங்கும் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் என்ற போர்வையிலேயே அரபு மொழி கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
குறித்த பாடநெறிக்காக 520 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் மாத்திரமே இஸ்லாமியர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கே அரபு மொழி கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான அனுமதி மாகாண தமிழ் கல்வி அமைச்சிடம் பெற்றுக் கொள்ளப்படவில்லை என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அரபு மொழி, இஸ்லாமிய அல்குரான் சிந்தனைகள் அல்லது இஸ்லாமிய கலாசாரத்தை மேம்படுத்தும் பாடநெறிகளே கற்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
இந்த சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












