இலங்கை நீர்கொழும்பு மோதல்: இருவர் கைது - மதுபான கடைகளை மூட கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images
இலங்கை நீர்கொழும்புவில் மதுபான கடைகளை மூட பேராயர் மால்கோம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமைதியின்மையை தோற்றுவித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோதல் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பேராயர் மால்கோம் அங்கு விசாரித்ததில், இந்த பிரச்சனை மது அருந்திய சில நபர்களால் நிகழ்ந்தது என்று கண்டறிந்தார்.
எனவே, அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தடை நீக்கம்
இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றிரவு முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி சமூக வலைத்தளங்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளன.
நீர்க்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியிருந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அன்று முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 9 நாட்களுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
ட்விட்டர் தவிர்த்த ஏனைய சமூக வலைத்தளங்களே நேற்றிரவு முதல் முடக்கப்பட்டன.

இதேவேளை, கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த அமைதியின்மையினால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நீர்கொழும்பு போலீஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 7 மணி வரை போலீஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீர் கொழும்பில் என்ன நடந்தது?
நீர்கொழும்பு - போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

மேலும் அப்பகுதியில் போலீஸ் விசேட அதிரடி பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
போருதொட்டைக்கான அனைத்துப் பாதைகளும் வன்முறையாளர்களால் சூழப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நீர்கொழும்பில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












