தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிரான நோட்டீஸுக்கு தடை

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் தரப்புக்கு ஆதரவு வழங்குவதாகவும், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவித்தார். அதனை அடுத்து மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவின் மூன்று எம்எல்ஏகளின் தகுதிநீக்கம் தொடர்பாக அவைத்தலைவர் நோட்டீஸ் அளித்த சில மணிநேரத்தில், அவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது.

எனவே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளதால் அவர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என இதுதொடர்பாக எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்தனர். அந்த மனு இன்று விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தும், அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மக்களவை தேர்தலின்போது அமமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்தனர். இந்த மூவரும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்கான ஆதரங்கள் இருப்பதாக கூறி அரசு கொறடா ராஜேந்திரன் அவைத் தலைவரிடம் ஏப்ரல் 26ம் தேதி புகாரளித்தார். அதன் மீது அவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.

தமிழகத்தில் மே மாதம் நான்கு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைதேர்தலுக்கான பிரசாரத்திற்கு அரசியல்கட்சிகள் தயாராகும் வேளையில், ஆளும் அதிமுக தனது ஆட்சியை தக்கவைக்க, மேலும் மூன்று எம்எல்ஏகளை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் நீதி வென்றது தர்மம் வென்றது. மேலும் ஆட்சிக்கு எதிராகவோ கட்சிக்கு எதிராகவோ தாங்கள் எதுவும் செய்யவில்லை." என ஊடகங்களிடம் பேசிய மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரான ரத்னசபாபதி தெரிவித்தார்.

"தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை சட்டப்பேரவை எடுக்கும்" என இந்த தடை குறித்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :