ஃபானி புயல்: சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாராட்டப்படும் ஒடிஷா

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி ஃபானி புயலில் இருந்து பாதுகாத்ததற்காக, பல தரப்புகளின் பாராட்டை பெற்றுள்ளது ஒடிஷா மாநில அரசு.
வெள்ளிக்கிழமையன்று ஒடிசாவில் கரையை கடந்தது ஃபானி புயல். இதில் அங்கு 16 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீசிய சூறைக்காற்று அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. 36 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்து, 2000 வீடுகள் சேதமடைந்தன.
850 ஆண்டுகள் பழமையான ஜகன்நாதர் கோயில் இருக்கும் புரியில் பலத்த மழை பெய்தது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசியதில் கட்டடங்களின் மேற்கூரை பறந்து, மின்சார கம்பிகள் மற்றும் மரங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒடிஷாவின் காவல்துறை உயரதிகாரி அருண் போத்ரா பாராட்டியுள்ளார்.
"இங்கு சேதம் பெருமளவில் உள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அரசாங்கத்தால் வெளியேற்ற முடிந்துள்ளது. ஒவ்வொரு நொடியும் புயல் குறித்து சரியாக கணித்து கூறியவர்களுக்கு நன்றி" என்று அவர் கூறினார்.
வெற்றிகரமாக மக்களை வெளியேற்ற முடிந்ததால் உயிர் சேதம் மிகக் குறைவாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். கட்டடங்களை சரி செய்வது பெரிய பணி என்பதால், இது நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று போத்ரா கூறினார்.

பட மூலாதாரம், AFP
ஒடிஷா மாநிலம் புரியில் ஏற்பட்டுள்ள சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருப்பதாக கூறுகிறார் மீட்புப்பணியில் ஈடுபட்ட அதிகாரி பிஷ்னுபதா செதி.
வெள்ளிக்கிழமையன்று ஒடிஷாவில் கரையை கடந்த ஃபானி, வங்க தேசம் நோக்கி சென்று வலுவிழந்தது.
வங்க தேச கடற்கரை கிராமங்கள் பல நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் காயமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
கடுமையான புயல் ஃபானி
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவை தாக்கிய அதி தீவிரப் புயல்களில் ஃபானியும் ஒன்று என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
ஒடிசாவில் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயலால், சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
29 அக்டோபர் அன்று 260 கிமீ வேகத்தில் வீசிய காற்றால், கடற்கரை பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது புயல் குறித்து முன்னதாகவே கணிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் மேம்பட்டுள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற போதிய அவகாசம் அதிகாரிகளுக்கு உள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












